காலம் கடந்தும் நிற்கும் தன் படைப்புகள் வழியே எழுத்தாளர் இராசேந்திரசோழன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்! " ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
Friday, March 1, 2024
காலம் கடந்தும் நிற்கும் தன் படைப்புகள்வழியே எழுத்தாளர் இராசேந்திரசோழன் அவர்கள்
வாழ்ந்து கொண்டிருப்பார்!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
========================================
புகழ்பெற்ற எழுத்தாளரும், சமூகச் சமநிலைப் போராளியும், தமிழ்த்தேசியருமான தோழர் இராசேந்திரசோழன் அவர்கள், உடல்நலக் குறைவால் நேற்றிரவு (29.02.2024) 11.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது. ”அஸ்வகோஷ்” என்ற புனை பெயரில், அவர் எழுதிய சிறுகதைகளும், புதினங்களும் பல விருதுகள் பெற்றவை.
மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் தலைமைச் செயற்குழுவில் தோழர் இராசேந்திரசோழனுடன் சேர்ந்து இயங்கிய நிலையில், அரசியல் மாற்றம் கருதி நாங்கள் சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி, தனி அமைப்பு தொடங்கிய போது, அதன் முன்னணிப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், முழுநேரச் செயல்பாட்டாளராகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் தோழர் இராசேந்திரசோழன். நாங்கள் நடத்திய ”தமிழர் கண்ணோட்டம்” இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று அரசியல் கட்டுரைகள் வழங்கியதுடன், இதழை மேம்படுத்துவதிலும் துணை நின்றார்.
எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து, களப் போராளியாக போராட்டங்களில் பங்கேற்று சிறை செல்வதற்குத் தயங்காத மன உறுதி படைத்தவர்.
எங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர் தனி அமைப்பு தொடங்கினாலும் எங்களுடைய தோழமை தொடர்ந்தது. உடல்நடுக்க நோயால் (பார்க்கின்சன்) பாதிக்கப்பட்டு, அவருடைய சுறுசுறுப்பான செயல்பாடுகள் முடங்கிப் போயின. இது அவருக்குப் பெரும் மனத் துயரத்தை அளித்தது. அவரது இலக்கிய மற்றும் அரசியல் பணிகள் குறித்து, கண்ணோட்டம் வலையொளியில் நேர்காணல் எடுத்து வெளியிட்டோம்.
சென்னையில் நீதிபதியாக உள்ள தன் மகன் பார்த்திபன் இல்லத்தில் தங்கி, சிகிச்சைகள் பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். தோழர் இராசேந்திரசோழன் அவர்களுடைய சமூகவியல் மற்றும் இலக்கியப் படைப்புகளும், அரசியல் கட்டுரைகளும் காலம்கடந்து நிற்பவை. அவற்றின் வழியாக அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவர் விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவர் உடலும் சென்னை அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
அன்புத்தோழர் இராசேந்திரசோழன் அவர்களது மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல், இரங்கல்!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்