"மனிதர்கள் நெருங்கி இருந்தாலும், மனங்கள் விலகி நிற்கின்றன! ---- திருமண விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், பெ. மணியரசன் வாழ்த்துரை!
Monday, May 27, 2024
மனிதர்கள் நெருங்கி இருந்தாலும்,மனங்கள் விலகி நிற்கின்றன!
====================================================
திருமண விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்,
பெ. மணியரசன் வாழ்த்துரை!
====================================================
தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை செல்வன் பா. அர்ச்சுன் எம்.ஏ. பி.பி.எட். - பனையக்கோட்டை செல்வி க. சபிகா எம்.சி.ஏ. ஆகியோர் திருமணம் 26.5.2024 அன்று தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வழக்றிஞர் த.சு. கார்திகேயன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் அத்திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய வாழ்த்துரையின் எழுத்து வடிவம் :
மொட்டு விரிந்து மகரந்தம் மோதிச் சிதறுகின்ற இரட்டை மலர்களைப் போல் இணைந்திருக்கும் மணமக்களை நெஞ்சு நிறைந்த மகிழ்வுடன் வாழ்த்துகிறேன். இரண்டு கோட்டைகள் இங்கு இணைந்துள்ளன. மணமகன் அர்ச்சுன் சூரக்கோட்டை, மணமகள் சபிகா பனையக்கோட்டை. இரு கோட்டைகளும் இணைந்து ஒரு பெருங்கோட்டையாய் இல்லறம் நடத்த வாழ்த்துகிறேன்.
மணமக்கள் இருவரும் உயர் கல்வி கற்றவர்கள். மணமகன் எம்.ஏ.பி.பி.எட். படித்துள்ளார், மணமகள் எம்.சி.ஏ. படித்துள்ளார். உங்களைப் படிக்க வைத்த பெற்றோரைப் பாராட்டுகிறேன்.
நம்முடைய முன்னோர்கள்தாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கணவனும் மனைவியும் குடும்பம் நடத்துவதை இல்லறம் நடத்துவது என்று அறத்துடன் இணைத்துச் சொன்னார்கள். மனையறம் என்பார்கள். ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லறம் என்பது போன்ற சொற்கோவை இல்லை. துறவு பூணுவதும் அறம்; அது துறவறம்! குடும்பம் நடத்துவதும் அறம். இது இல்லறம்!
அறம் என்பதில் அன்பு, அரவணைப்பு, உதவி எனப் பல பண்புகள் உண்டு. அதே வேளை தீங்கினை எதிர்க்கும் அறச்சீற்றமும் உண்டு!
ஒரு குடும்பம் என்பது ‘தன்னலச் சொந்த வாழ்வு‘ என்று சுருக்கிக் கருதக்கூடாது. உலகெங்கும் உள்ள மக்கள் அவரவர்க்கேற்ற, அவரவர்க்கு வாய்த்த வகையில் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கை.
சமுதாயமாகத்தான் மனிதர்கள் வாழமுடியும். தனிமனிதர் தனியே வாழ்ந்துவிட முடியாது. அப்படிப்பட்ட சமுதாய வாழ்க்கையின் அடிப்படை அலகு - basic unit - குடும்பம். ஒரு குடும்பத்தில் இருப்போரெல்லாம் ஒரே குருதிவழியைச் சேர்ந்த குடும்பம் அல்ல. எங்கிருந்தோ ஒரு மனைவி - ஒரு கணவன் - ஒரு மருமகள், ஒரு மருமகன் வரலாம். அவர்கள் மாமனார் மாமியார், மைத்துனர், மைத்துனியுடன் இணைந்து குடும்பமாகலாம்.
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்;
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே”
என்னும் குறுந்தொகைப் பாடல் காதலன்-காதலிக்கு மட்டும் பொருந்துவதல்ல; பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த இணையருக்கும் பொருந்தும்.
இப்படி உருவாகும் உறவுதான் சமூக உறவுக்கான அடிப்படை அலகு. ஒரு சமுதாயத்தின் அடிப்படை யூனிட்.
சமூக இணைப்புக்கான - இயக்கத்திற்கான தகவல் தொழில் நுட்பக் கருவிகள் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துவிட்டன, பெருகிவிட்டன. மனிதர்களுக்கிடையே உள்ள பௌதிகத் தொலைவுகள் - சடப்பொருள் தொலைவுகள் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டன. ஐயாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒருவருடன் காணொலி-வீடியோ மூலம் - கைபேசிகளில் நேரடியாகப் பார்த்துப் பேசிக் கொள்கிறோம். இன்னும் எவ்வளவோ கருவிகள் எங்கெங்கோ இருப்போரை மிகமிக நெருக்கமாக நேருக்கு நேராகக் கொண்டு வந்துவிட்டன. ஆனால் மனித மனங்களை அப்படி நெருக்கமாக இந்தக் கருவிகளால் இணைக்க முடியவில்லை.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், மனிதர்கள் மிக அதிகமாகப் பன்முகச் செய்திகள் தெரிந்து கொள்கிறார்கள். இது ஒரு வகை ஆணவத்தையும் (Ego) அந்தரங்க உளவியலில் உண்டாக்கிவிடுகிறது. நிறையப் பேர் படித்தவர்களாக, உயர் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மனிதநேயமும், மனவளர்ச்சியும் குறைந்துள்ளன.
அடுத்த வீடு அயல்நாடுபோல் முறைத்துக் கொண்டு இருக்கிறது. பக்கத்து வீடு பகை நாடுபோல் இருக்கிறது. அவ்வளவு ஏன், ஒரு குடும்பத்துக்குள்ளேயே பேசிக் கொள்ளாத உறவுகள் இருக்கின்றனவே! பௌதிக வடிவில்-சடப்பொருளாக மனிதர்களுக்கிடையே நெருக்கம் இருக்கிறது. ஆனால் மனங்களுக்கிடையே இடைவெளியும், தொலைவும் அதிகம்!
இந்த மனத்தொலைவு - மனவிலகல் ஒரு குடும்பத்திற்குள் - ஓர் ஊருக்குள் - ஒரு தாயகத்திற்குள் அதனதன் அளவில் இருக்கின்றன.
ஓர் ஊரை எடுத்துக் கொள்ளுங்கள் - தெருக்கள் தனித்தனி தீவுகள் போல் மனத்தளவில் இருக்கின்றன. சண்டையில்லை; வம்பு இல்லை; மோதல் இல்லை; ஆனால் மனத்தீவுகள் தனித்தனியே இருக்கின்றன. பொருட்கள் மனதிற்கு நெருக்கமாகிவிட்டன. குறிப்பாக நுகர்வுப் பொருட்கள் சகமனிதர்களைவிட அதிக மனநெருக்கம் பிடித்துவிட்டன. மனிதர்களை விடப் பொருட்கள் மீதான ஈர்ப்பு, ஈடுபாடு அதிகமாகிவிட்டது. சக மனிதர்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கும் பார்வை அதிகரித்துவிட்டது. வாழ்க்கையும் ஒரு வணிகம் என்றாகிவிட்டது. மனித உறவுகள் வணிக உறவுகள்போல் ஆகிவிட்டன! மணமகள் பணம் கொடுத்து மணமகனை வாங்கும் அவலம் அக்ரகாரத்திலிருந்து நம்மிடம் தொற்றிவிட்டது.
தமிழர் வணிகம் ஒரு காலத்தில் அறம் பிறழாமல் நடந்தது. அதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளமாக நம் தமிழில் இருக்கின்றன. அதெல்லாம் மாறி மற்றநாடுகளைப் போல் தமிழ்நாட்டிலும் வணிகம் ஒரு சூதாட்டம்போல் ஆகிவிட்டது.
மணமக்கள் அரச்சுனும், சபிகாவும் ஒருவருக்கொருவர் பாசமும் பற்றுதலும் கொண்டு வாழவேண்டும். குடும்ப உறவுகளைப் பேண வேண்டும். கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு வந்தால், அந்தக் கோபம் தணிந்தபின் கணவனோ மனைவியோ முந்திக்கொண்டு பேசி இருவரும் இயல்பு நிலையைப் பேண வேண்டும். பிணக்கின்போது, முதலில் பேசி தோற்கக் கூடாது என்ற பிடிவாதம் கணவனுக்கும் கூடாது; மனைவிக்கும் கூடாது.
“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்”
என்றார் நம் பேராசான் திருவள்ளுவர்.
கணவன் மனைவிக்கிடையே பிணக்கு வந்தால் பேசிக் கொள்ளமாட்டார்கள்.
நேரம் கடந்த பிறகோ, மறுநாளோ இருவரும் பேச விரும்புவர். ஆனால் முந்திப் போய் பேசித் தோற்கக் கூடாது என்று பிடிவாதம் காட்டுவார்கள். அங்கே நம் தாத்தா திருவள்ளுவர் தலைநீட்டுகிறார். கணவன்-மனைவிக்கிடையே பிணக்கு வந்தால், முந்திப்போய் பேசி பிணக்கைத் தீர்ப்பவர்தான் உண்மையில் அந்தச் சண்டையில் வென்றவர் ஆவார் என்கிறார். (அந்நேரம் மணமகள் சபிகா ‘ஆமாம் ஆமாம்‘ என்பது போல் தலையசைத்தார்)
இங்கே மனம் குறித்து நான் பேசிய கருத்துகள் மணமக்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். நாம் அனைவரும் தமிழர்களாய் மனதால் நெருங்கி உறவு கொள்ள வேண்டும்.
மணமக்களுக்கு மீண்டும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: கட்டுரைகள், வாழ்த்துரை