"ஐயா ஆசிரியர் கி. வீரமணி அவர்கட்கு 92ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து!" ---- பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Monday, December 9, 2024
ஐயா ஆசிரியர் கி. வீரமணி அவர்கட்கு
92ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து!
===============================
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================
திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்கள், 91ஆம் அகவையை நிறைவு செய்து, 2.12.2024 அன்று 92ஆம் அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார். (அவர்களின் பிறந்தநாள் 2.12.1933). ஐயா அவர்கட்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2.12.2024 அன்று ஐயா அவர்களின் பிறந்தநாளைக் கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டு விட்டேன். “தினத்தந்தி” நாளிதழில், 8.12.2024 அன்று, ஐயா கி. வீரமணி அவர்களின் வாழ்க்கை குறித்த சிறப்புக் கட்டுரை வந்தது. அதில் ஐயா அவர்களின் நேர்காணலும் வந்துள்ளது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிக்கும் சில நடைமுறைகளும், அரசியலில் அவரின் சுறுசுறுப்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடியவை.
இந்த அகவையிலும் காலையில் நடைப்பயிற்சி செய்கிறார். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கிறார். “மீன், முட்டை உண்பேன்; முதுமை காரணமாக செரிமானச் சிக்கல் வரும் என்று இறைச்சியைக் குறைத்துக் கொண்டேன்” என்கிறார்.
சென்னையில் இருக்கும்போது அவருக்கான நேர நிர்வாகம் எப்படியெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், மாதத்தில் 15 நாளாவது வெளியூர் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன் என்றும், “தினத்தந்தி” நேர்காணலில் ஐயா வீரமணி அவர்கள் கூறியுள்ளார். மக்களுக்காக, சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் உழைக்க முன்வரும் இளையோர் ஐயா வீரமணி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் இருக்கின்றன!
இனவரையறுப்பில் திராவிடர் கழகத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்கும் இடையே இணைக்க முடியாத முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், ஆரிய வர்ணாசிரம முறியடிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஆதிக்கமும் - சாதி வேறுபாடும் அற்ற சமநிலைத் தமிழ்ச் சமூகம் அமைத்தல் போன்றவற்றில் திராவிடர் கழகத்திற்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும் ஒத்தக் கருத்துகள் உள்ளன.
நம்முடைய மூத்த தலைவர் ஐயா இரா. நல்லக்கண்ணு அவர்கள் போல், நூறாண்டைக் கடந்து நல்ல உடல் நலத்தோடும், இளமைச் சிந்தனை ஆற்றலோடும் ஐயா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: அறிக்கைகள், திராவிடம், பிறந்தநாள்_அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்