<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"சீமான் வீட்டில் காவல்துறையினர் வன்முறை : மு.க. ஸ்டாலினது திராவிடப் பழிவாங்கல்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Friday, February 28, 2025


சீமான் வீட்டில் காவல்துறையினர் வன்முறை :

மு.க. ஸ்டாலினது திராவிடப் பழிவாங்கல்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
====================================


நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில், நீலாங்கரை காவல்துறையினர் தேவையற்ற நிலையில் வலுக்காட்டாயமாகப் புகுந்து தாக்குதல் நடத்தி, வழக்கமாக வீட்டுக் காவலர்களாகப் பணியில் இருந்த இருவரை இழுத்துக் கொண்டுசென்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது மு.க. ஸ்டாலின் ஆட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அரசு வழங்கும் அதிகாரத்தைத் தமது சொந்த அரசியல் பழி தீர்த்தலுக்குப் பயன்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

விசயலட்சுமி என்ற நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதிகொடுத்து, அவரோடு பழகி, பாலுறவு கொண்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் என்பது சீமான் மீதுள்ள வழக்கு. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மேற்படி விசயலட்சுமி 2011இல் கொடுத்த வழக்கை, 2012இல் சமரசமாகிவிட்டதாகக் கூறி புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை நீக்கிவிடுமாறும் விசயலட்சுமி மனு கொடுத்துவிட்டார்.

இந்த வழக்கு பாலியல் வன்முறை புகார் சார்ந்தது அல்ல. இருவரும் சம்மதித்து பாலுறவு கொண்டிருக்கிறார்கள். இதைப் பாலியல் வல்லுறவு வழக்கு போல் சித்தரிக்கக் கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள் இவ்வழக்கு தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் உச்ச நீதிமன்றத்தில் நிற்குமா என்பது ஒருபக்கம். பொது அறிவுக்கு எட்டிய வரையில், மைனர் அல்லாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதித்து, பாலுறவு கொண்டதைக் குற்றமாகக் கருத முடியாது. திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் என்பது வேறு வழக்கு. அதிலும் அவ்வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுத்து வடிவிலும் ஊடகங்கள் வழியாகவும் மேற்படி விசயலட்சுமி கூறியபின், அதைப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி, தி.மு.க. ஆட்சியினர் அட்டூழியம் செய்வது பச்சையான சட்டவிரோதச் செயல்கள்!

காவல்துறையினர் தன் வீட்டுச் சுவரில் ஒட்டிய அழைப்பாணையைக் கிழிப்பது குற்றமல்ல. அது குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட தேதியில் நேர்நிற்க வேண்டும் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் வடிவம். வீட்டில் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தாலோ, அல்லது பெறுவதற்கு மறுத்தாலோ அழைப்பாணை ஒட்டப்பட வேண்டும் என்பதுதான் சட்ட நியதி.

அப்போது வீட்டில் இருந்த சீமானின் வாழ்க்கை இணையர் கயல்விழி அவர்கள். அழைப்பாணையைக் கொடுக்க உள்ளே வரவே இல்லை. எதுவும் சொல்லாமல் ஒட்டிவிட்டுச் சென்றனர் என்று ஊடகங்களில் கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் ஆட்சி தன்னல நோக்கில் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குடும்பத்தினர், பணியாளர்கள் மீது வன்முறைகளை ஏவுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு காவல்துறையின் மேலதிகாரிகள் இதில் தலையிட்டு கீழ்நிலைக் காவல் அதிகாரிகள் நடுநிலையோடு, சட்ட வரம்பிற்குட்பட்டு செயல்பட அறிவுறுத்த வேண்டும். கனடா நாட்டில் உள்ளதுபோல் காவல்துறை, இந்தியாவிலும் தன்னாட்சி பெற்ற (Autonomous body) சட்டம் ஒழுங்கு அமைப்பாக மாற்றப்படவேண்டும். இதுபற்றியும் காவல்துறை மேலதிகாரிகளையும் மனித உரிமை அக்கறையாளர்களும் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வீட்டுக் காவல் பணியில் இருந்த இருவர் மீது போட்ட வழக்கைக் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

Labels: , ,

"அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்புக்கு விசுவாச ஊழியம் செய்கிறாரா மோடி...?" ---- விகடன் இணையதள முடக்கத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Monday, February 17, 2025



அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்புக்கு
விசுவாச ஊழியம் செய்கிறாரா மோடி?
===============================
விகடன் இணையதள முடக்கத்திற்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
===============================


இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்புடன் அமர்ந்து வாசிங்கடனில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்ருந்த அதேநேரத்தில், வடஅமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறி வேலை பார்த்து வந்த இந்தியர்களை கைவிலங்கு மாட்டி விமானத்தில் அனுப்பி வெளியேற்றியது வடஅமெரிக்க அரசு. இந்த நிகழ்வைக் கண்டிக்கும் வகையில் ஒரு கேலிச் சித்திரமாக வெளியிட்டது விகடன் இணையதளம்!

முறையான குடியுரிமை இல்லாமல் வடஅமெரிக்காவில் தங்கி வேலைகள் பார்த்த இந்திய நாட்டினரை இழிவுபடுத்தும் வகையில், வானூர்திக்குள் இருப்போர்க்கு விலங்கு மாட்டிக் கொண்டு வந்து பஞ்சாபில் இறக்கிவிட்ட அமெரிக்காவின் அநாகரிகத்தை – இந்தியாவிற்கு அமெரிக்கா இழைத்த இழிவை சுட்டிக் காட்டும் வகையில், டிரம்புடன் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பது போல், அந்தக் கார்ட்டூனில் படம் போட்டுள்ளார்கள். இந்திய நாட்டு மக்களுக்கேற்பட்ட மன வலியைச் சுட்டிக்காட்டுவதே இக்கருத்துப் படத்தின் நோக்கம்! இது குற்றமா? குற்றம் இல்லை!

மோடி – டிரம்ப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், இரண்டாவது முறையாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களுக்கும் கைவிலங்கு போட்டுதான் அழைத்து வந்துள்ளார்கள்.

ஆனால், நரேந்திர மோடி அரசு டொனால்டு டிரம்புக்கு விசுவாச ஊழியம் செய்யத் தயார் என்று உறுதி செய்வதுபோல், மோடி அரசு விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளது. இந்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது! இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது!

உடனடியாக விகடன் இணையதளம் மீதான தடையை நீக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

Labels: , , , ,

"மொட்டையாக “மொழிப்போர் தியாகிகள் மண்டபம்”! அதுவும் மூடிக் கிடக்கும் அவலம்!" ---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Sunday, February 16, 2025


மொட்டையாக

“மொழிப்போர் தியாகிகள் மண்டபம்”!
அதுவும் மூடிக் கிடக்கும் அவலம்!
===============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================


கடந்த 14.02.2025 வெள்ளிக்கிழமை சென்னை அடையாறு காந்தி மண்டபம் சென்றோம். தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர் கதிர்நிலவன், ம. இலக்குமி, விடுதலைச்செல்வன் ஆகியோர் சென்றோம். மொழிப்போர் ஈகியர் நினைவு மணிமண்டபம், கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 2001இல் திறக்கப்பட்டது. அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக இருந்தது. ஆனால் பார்க்காமலே காலம் கடந்து விட்டது.

நேற்று அந்நினைவு மீண்டும் உந்தித்தள்ள போய்ப் பார்த்தோம். அப்போது பக்தவத்சலம் நினைவு மண்டபம் வந்தது. அதைக் கடந்துதான் மொழிப்போர் ஈகியர் மண்டபத்திற்குப் போக வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, 1998 மார்ச்சு மாதம் 13ஆம் நாள் பக்தவத்சலம் மண்டபம் திறக்கப்பட்டது என்று அங்கு பதிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு கூறுகிறது. உடனே எனக்குப் பழைய நினைவுகள் வந்தன.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு – தமிழ்க் காப்பு மொழிப் போர், 1965 சனவரி 25 அன்று தொடங்கியது. பதினோராம் வகுப்பு மாணவராக, அப்போராட்டத்தில் பங்கேற்றவன் நான்! திருக்காட்டுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

25.1.1965 அன்று மதுரையில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் பேரணியில் புகுந்து காங்கிரசார் நடத்திய வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து 27.1.1965 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் புறப்பட்டபோது, காவல்துறையினர் தடுத்து இரு மாணவர்களைச் சுட்டுக் வீழ்த்தினர். காங்கிரசு ஆட்சி நடந்தது. அப்போது அதன் முதலமைச்சர் பக்தவத்சலம்! சுட்டு வீழ்த்தப்பட்ட இருவரில் மாணவர் இராசேந்திரன் அதே இடத்தில் துடிதுடித்துச் செத்தார். இன்னொரு மாணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார்.

அப்போது இச்செய்தி பரவியவுடன் தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். மக்களும் தன்னெழுச்சியாகப் போராடினர். துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகளைத் தீவிரப்படுத்தினார் காங்கிரசு முதலமைச்சர் பக்தவத்சலம்!

இந்திய இராணுவத்தையும் வரவழைத்து சுட்டுத் தள்ளினார். அப்போராட்ட வரலாறை பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி நூலாக எழுதியுள்ளார். அவர் கல்லூரி மாணவராக – மதுரையில் அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர். பிற்காலத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவி வகித்து, பணி நிறைவுக்குப் பின் தி.மு.க.வின் தலைமைக்குழு ஒன்றில் இருப்பவர். அந்நூலில் பக்தவத்சலம் ஆட்சி சற்றொப்ப 400 பேரை சுட்டுக் கொன்றது என்று எழுதியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான ஊர்களையும் நாட்களையும் குறிப்பிட்டுள்ளார். (நக்கீரன் பதிப்பகம் இப்போது, இரு பாகங்களாக அந்நூலை வெளியிட்டுள்ளது).

பக்தவத்சலம் ஆட்சியின் நரவேட்டையைக் கண்டித்து, அதே காங்கிரசின் ஒன்றிய அமைச்சர்களாக அப்போதிருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அளகேசன் இருவரும் அமைச்சர் பதவிகளைத் துறந்தார்கள்!

இவர்களின் பதவி விலகல் நாடகமாகக் கூட இருக்கட்டும்! ஆனால், அப்படி நாடகமாட வேண்டிய அளவிற்கு 400 பேரை சுட்டுக் கொன்றதல்லவா – பக்தவத்சலத்தின் காங்கிரசு ஆட்சி!

அந்த பக்தவத்சலத்திற்கு தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபம் திறக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன், அதை எதிர்த்தும் அத்திட்டத்தைத் தடுக்கவும் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டக்குழு அமைத்தோம். அதன் ஒருங்கிணைப்பாளர் நான். பொருளாளர் தமிழறிஞர் ஐயா தென்மொழி இறைக்குருவனார். அந்தக் கூட்டமைப்பின் பெயர் “பக்தவத்சலம் நினைவு மண்டப எதிர்ப்புக் குழு” என்பதாகும்.

இதன் சார்பில் முதல் கட்டமாக சென்னை சைதாப்பேட்டை பனகல் கட்டடம் அருகே, 27.12.1997 அன்று காலை முதல் மாலை வரை தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தியை எதிர்த்த மக்களைக் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்ற பக்தவத்சலத்திற்கு நினைவு மண்டபம் திறக்காதே! இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் இன்னுயிர் ஈந்த ஈகியர்களுக்கு சிலைகளும் நினைவு மண்டபங்களும் எழுப்பு என்று முழக்கமிட்டோம்!

ஆனால், மேலும் பல்வேறு அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் நடத்தும் எதிர்ப்புப் போராட்டமாக இப்போராட்டம் தமிழ்நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லப்படவில்லை.

எனவே, கருணாநிதி தமிழினத் துரோக வேலையில் தீவிரமாக இறங்கி, 13.3.1998 அன்று பக்தவத்சலத்தின் நினைவு மணி மண்டபத் திறப்பை நடத்தினார்.

அங்கு சென்று மறியல் போராட்டம் நடத்தினோம். முன்கூட்டியே அந்த வட்டாரத்தில் ஆங்காங்கு கூடி நின்றோரைக் கைது செய்தது காவல்துறை! நாங்கள் ஒரு பகுதியினர் தலைமறைவாய் இருந்து திடீரென்று ஊர்வலமாக முழக்கமிட்டு, திறக்கப்படும் மணிமண்டப வாயிலை நோக்கிச் சென்றோம். அதற்குள் மணி மண்டபத்தைத் திறந்துவிட்டு, வெளியேறினார் கருணாநிதி. ஊர்வலமாய்ச் சென்ற நாங்கள் “திறக்காதே” முழக்கங்களை மாற்றி, “மூடு மூடு பக்தவத்சலம் மணி மண்டபத்தை மூடு” என்று ஆவேசக் குரல் எழுப்பினோம்.

போராட்டக்குழு முடிவின்படி அப்போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். ஐயா தென்மொழி ஆசிரியர் இறைக்குருவனார், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சிப் பொறுப்பாளர் தோழர் சீராளன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் கி.த. பச்சையப்பனார், உலகத் தமிழ் மு்ன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் தென்மொழி மா. பூங்குன்றன், தமிழினத் தொண்டு இயக்கத்தின் சார்பில் மா. தேன்மொழி (பாவலரேறு பெருஞ்சித்திரனார் மகள் – மொழியியல் ஆய்வாளர் ஐயா அருளியார் வாழ்க்கை இணையர்) முதலிய பெருமக்களுடன் ஆண்களும், பெண்களும் அஞ்சாமல் அணிவகுத்து காவல்படைகளுக்கிடையே எதிர்ப்பு முழக்கமிட்டு முன்னேறிச் சென்றோம். மறித்துத் தளைப்படுத்தி, ஊர்திகளில் ஏற்றியது காவல்துறை!

இவ்வாறான கடந்தகால நினைவுகளுடன் பக்தவத்சலம் மண்டபத்தைப் பார்த்து விட்டு, “மொழிப்போர் தியாகிகள்” மண்டபம் சென்றோம். அங்கு நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க.வின் தலைமைக்குழு உறுப்பினர்கள் – மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் படங்கள்! எடுத்துக்காட்டாக, திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. செயலாளராக இருந்த அன்பில் தர்மலிங்கம் போன்ற பல மாவட்டச் செயலாளர்கள் படங்கள் இருக்கின்றன. அந்தப் புகைப்பட அடுக்குகளுக்கிடையே, தீக்குளித்த தழல் ஈகி விருகம்பாக்கம் அரங்கநாதன் படம் பார்த்தேன். அவர் புகைப்படத்திற்கு அருகில் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவரான இராம. அரங்கண்ணல் படம் இருக்கிறது. எந்த அளவுகோலில் இப்படி வைத்துள்ளார்கள்? உயிரீகத்தின் முதன்மை அங்கு கைவிடப்பட்டிருப்பது ஏன்? விளக்கம் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இராம. அரங்கண்ணல் விவரமானவர். தொடக்கநிலைத் தலைவர்களில் ஒருவர். பின்னர் திரைப்படத் தயாரிப்பாளராக – முழுநேர வேலையில் ஈடுபட்டவர். தீக்குளித்து உயிரீகம் செய்த தி.மு.க.வைச் சேர்ந்த விருகம்பாக்கம் அரங்கநாதன் ஈகத்திற்கு ஈடாக இராம. அரங்கண்ணல் – இந்தியை எதிர்க்க என்ன ஈகம் செய்தார்? நமக்குத் தெரியவில்லை!

தீக்குளித்து ஈகம் செய்தோர் சிலர் படங்கள் தனியே வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் விராலிமலை சண்முகம் படம் உள்ளது. அவர் நஞ்சுண்டு உயிரீகம் செய்த ஈகி. அப்படிக் குறிப்பிட்டு, நஞ்சுண்டு ஈகியானோர் – தழல் ஈகியானோர் படங்களைத் தனித்தனியே வைத்தால் என்ன?

நஞ்சுண்டு உயிரீகம் செய்த விராலிமலை சண்முகம் – சாவதற்கு முன் மிகமிக அருமையான – சரியான மடல் ஒன்றை தி.மு.க. தலைவர் அண்ணா அவர்களுக்கு எழுதி அனுப்பிவிட்டு, நஞ்சுண்டு மடிந்தார். சண்முகம் அண்ணன் தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் அந்த மடலை முன்பு அச்சிட்டு வெளியிட்டார்!

தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாக உள்ள முன்னாள் துணைவேந்தர் ஐயா அ. இராமசாமி அவர்கள் மேற்பார்வையில் ஒரு குழு அமைத்து, இப்பொழுதுள்ள மொழிப்போர் ஈகியர் நினைவகத்தை – செம்மைப்படுத்த – ஒழுங்குபடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும்.

அடுத்து, காந்தி மண்டபம் பகுதியில் காந்தி மண்டபம், காமராசர் நினைவு மண்டபம், பக்தவத்சலம் மண்டபம், தியாகிகள் மண்டபம் (எதற்கான போராட்டத் தியாகிகள் என்பதுகூட அங்கில்லை. ஆனால் படங்களைப் பார்த்து, இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் என்று புரிந்து கொண்டோம்), ஐயா இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம், ஐயா அயோத்திதாசப் பண்டிதர் நினைவு மண்டபம் எனப் பல மண்டபங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், மொழிப்போர் தியாகிகள் மண்டபம் மட்டும் பூட்டிக் கிடந்தது. ஏன்? தோழர் அருணபாரதி தொடர்புடைய அதிகாரியின் தொலைப்பேசியைக் கைப்பேசியில் தேடி எடுத்து, கடுமையாகக் கடிந்து கொண்டபின் ஓர் ஊழியர் திறவு கோலுடன் வந்து திறந்துவிட்டார். பார்த்துவிட்டு நாங்கள் வெளியே வரும்போது மறுபடி பூட்டினார். ஏன் பூட்டுகிறீர்கள் என்றோம்.

“இந்த நினைவகச் சுவரில் மொழிப்போர் பற்றி காணொலிக் காட்சி காட்டுவதற்கான தொலைக்காட்சித் திரை உள்ளது. அதைத் தொட்டுப் பலரும் பார்த்தால் பழுதாகிவிடும். எனவே பூட்டி வைத்துள்ளார்கள்” என்றார். அதில் என்ன ஓடுகிறது என்று போட்டுக் காட்ட அவரைக் கேட்டோம்! “இல்லை, அது இப்போது பழுதாக இருக்கிறது” என்றார். எப்படி அவர் பதில்?

மொழிப்போர் ஈகியர் அரங்கத்தை நிரந்தரமாகப் பூட்டி வைத்துள்ளார்கள். ஏன்? தமிழ்மொழி – தமிழ் இன உணர்வு மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?

மொழிப்போர் ஈகியர் என்றால், எந்த மொழிப்போர், எதற்காக மொழிப்போர், இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த 1938 மொழிப்போரா? அதற்குப் பின் கட்சிகள் நடத்திய இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டங்களா? 1965இல் நடந்த மாபெரும் இந்தி எதிர்ப்பு மாணவர் – மக்கள் போரா? இதுபோன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் விளக்கம் எதுவும் அங்கு எழுதப்படவில்லை.

“இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க நடந்த மொழிப்போர்” என்று கூட எழுதத் துணிச்சல் இல்லாத கருணாநிதி, ஏனோதானோ என்று கணக்குக் காட்ட அமைத்த மொழிப்போர் ஈகியர் நினைவகம் அது! மொட்டையாக மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபம் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தில்லி இந்தி ஏகாதிபத்தியத்தின் விசுவாச ஊழியர்கள் திராவிடக் கட்சியினர்!

இவர்களுடைய குருநாதர் ஈ.வெ.ரா. 1965 இந்தி எதிர்ப்பு மொழிப்போரைக் கடுமையாக எதிர்த்தார்! காவல்துறையினர் சுட்டுக்கொன்ற எண்ணிக்கை போதாதென்று, “போலீஸ் இந்தி எதிர்ப்புக் காலிகளை சுட்டுத் தள்ள வேண்டியது தானே! போலீஸ் கையில் துப்பாக்கி பூப்பறிக்க இருக்கிறதா?” என்று அறிக்கை விட்டார். 1965 மொழிப்போரின் போது, “கையில் கத்தி வைத்துக் கொள்ளுங்கள், பையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள், தீப்பெட்டியை வைத்துக் கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்புக் காலிகளைக் கண்டால் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லுங்கள்! நான் குறிப்பிடும் தேதியிலிருந்து இதைத் தொடங்குங்கள்!” என்று விடுதலை இதழில் (1965 பிப்ரவரி 11, வெளியூர்) அறிக்கை வெளியிட்டார் ஈ.வெ.ரா!

இந்தப் “பெரியாரின்” சீடர் அல்லவா – கருணாநிதி! கருணாநிதியைக் கூட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அடைத்தார் பக்தவத்சலம்! அப்போது அந்த பாளையங்கோட்டை சிறைவாசத்தை “முரசொலி” பக்கம் பக்கமாக எழுதியது.

தி.மு.க. தலைவர் அண்ணா, மாணவர்கள் நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தி.மு.க.விற்கும் சம்பந்தமில்லை, நாங்கள் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தபோது அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தபின் – அதில் ஏற்பட்ட உயிர் இழப்புகளை – உயிர் ஈகங்களை – வர்ணித்து, வர்ணித்து மக்களிடையே வாக்கு வேட்டையாடி 1967இல் காங்கிரசை வீழ்த்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர் தி.மு.க.வினர்! அண்ணா முதலமைச்சரானார்!

1967இல் முதலமைச்சராகி – 1969 பிப்ரவரி 3இல் காலமானார். இந்தக் குறைந்தபட்ச இடைவெளியில் ஓரிரு மொழிப்போர் ஈகியர் சிலைகள் – நினைவகங்கள் எழுப்பி இருக்கலாம். எதுவும் இல்லை! அவர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்வு கலைவாணர் என்.எஸ்.கே. சிலை திறப்பு என்பார்கள்! என்.எஸ்.கே. அவர்கட்கு தலைநகர் சென்னையில் சிலை நிறுவுவது கட்டாயத் தேவை! இப்படி ஏதாவதொரு நினைவுச் சின்னத்தை மொழிப்போர் ஈகியர்க்கு முதலமைச்சர் அண்ணா நிறுவி இருக்கக்கூடாதா?

தில்லி ஏகாதிபத்தியம் – இந்தி எதிர்ப்பு ஈகியர்க்கு நினைவுச் சின்னம் நிறுவினால், என்ன செய்யுமோ என்று அச்சமா? இதே அச்சம் பல மடங்கு அண்ணாவின் அரசியல் வாரிசு கருணாநிதிக்கு! பக்தவத்சலம் நினைவகம் திறந்தபோது, எங்களைப் போன்றவர்கள் எழுப்பிய கண்டனக் குரல்களை – மொழிப்போர் ஈகியர்க்குச் செய்த இரண்டகத்தை மறைக்கத்தான் கருணாநிதி “மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபம்” 25.1.2001இல் திறந்தார். அதிலும், எந்த மொழிப்போர் – அதன் மைய இலட்சியக் குறிக்கோள் என்ன என்பதை மறைத்துவிட்டு, மொட்டையாக “மொழிப்போர் தியாகிகள்” மண்டபம் திறந்தார்.

அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருந்தது. வாக்கு வேட்டைக்கு அது தேவைப்பட்டது.

அந்த மூடாக்கு மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தையும் இப்போது நிரந்தரமாக மூடி வைத்துள்ளார்கள்!

1965 மொழிப்போரில் தீக்குளித்து உயிரீகம் செய்தவர் கரூர் மாவட்டம் ஐயம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் – 27 அகவை இளைஞர் வீரப்பன்! அவருக்கு அங்கு மார்பளவு சிலை வைக்க 2016ஆம் ஆண்டு முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்தார்கள். மார்பளவுச் சிலை வடிக்கப்பட்டு, அதை திறக்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் அழைக்கப்பட்டு அவர்களும் வந்து விட்டார்கள். ஆனால், அன்றைய அ.தி.மு.க. ஆட்சி அதற்குத் தடை போட்டது.

தி.மு.க. 2021இல் ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க. அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு, ஆசிரியர் வீரப்பன் சிலை திறக்க அனுமதி கோரியுள்ளார்கள். இன்றுவரை தி.மு.க. ஆட்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டத் தழல் ஈகி ஆசிரியர் வீரப்பன் சிலையைத் திறக்க அனுமதி வழங்கவில்லை! சாக்குமூட்டையில் கட்டி 9 ஆண்டுகளாக அச்சிலை போடப்பட்டுள்ளது. இதுகுறித்த கட்டுரையை அண்மையில் ஜூனியர் விகடனில் முனைவர் கடவூர் மணிமாறன் எழுதினார். அதே இதழில், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் அவர்களும் அண்மையில் ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நெடுஞ்சாலையில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதுபோல் ஆசிரியர் வீரப்பன் சிலையும் திறக்கலாம் அல்லவா என்று கேட்டிருந்தார். இந்தி ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டு பாளையப்பட்டாக உள்ள தி.மு.க. அமைச்சரவை இன்றுவரை ஆசிரியர் வீரப்பன் சிலை திறக்க முன்வரவில்லை!

ஒரு பழைய நினைவு வருகிறது. நமது தமிழர் கண்ணோட்டம் இதழில் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதிய ஓர் ஆசிரியவுரையில், ஆட்சியாளர்கள் இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஈகியர்க்கு சிலைகளும் நினைவகங்களும் எழுப்ப மறுத்தால், நாம் நம் முயற்சியில் அங்கங்கே சிலைகள் மற்றும் நினைவகங்கள் திறக்கலாம், அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தோம்.

அதைப் படித்து ஊக்கம் பெற்ற மயிலாடுதுறை தோழர் நாக. இரகுபதி அவர்களும், (அவர் திராவிடர் கழக ஆதரவாளரே) மற்றும் நண்பர்களும் மயிலாடுதுறையில் மாணவத் தழல் ஈகி சாரங்கபாணிக்கு ஏ.வி.சி. கல்லூரி அருகே நினைவுத் தூண் எழுப்பினார்கள். அதன் திறப்பு விழா 2007 ஆக இருக்கும். அதைத் திறந்து வைக்க, அப்போது தி.மு.க. அமைச்சராக இருந்த பேராசிரியர் க. அன்பழகனை அழைத்திருந்தார்கள். ஐயா நெடுமாறன் அவர்களும், நானும் சென்றிருந்தோம். மாண்புமிகு அமைச்சர் நினைவுத் தூணை திறந்து வைப்பார்கள் என்று தோழர் இரகுபதி அழைத்தார். அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர் அன்பழகன், “இந்தப் பதவியில் இருந்து கொண்டு நான் திறக்கக் கூடாது. நெடுமாறனைத் திறக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார். நெடுமாறன் அவர்கள்தான் திறந்தார். அந்த அமைச்சருக்கு சிறப்புப் பட்டம் – “இனமானப் பேராசிரியர்”! தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால், தோளில் கிடக்கும் துண்டைத் தூக்கியெறிவது போல் அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு களத்தில் போராடுவோம் என்று ஒலிபெருக்கி அதிர உறுமிப் பேசிய முகாமைச் சேர்ந்தவர்.

மேற்படி தமிழர் கண்ணோட்டம் ஆசிரியவுரையில் தூண்டுதல் பெற்று, அடுத்து, திருப்பூர் மொழிப்போர் ஈகி க. பெரியசாமி அவர்கள் முயற்சியில் திருப்பூரில் 1965இல் குவியலாக சுட்டுக் கொல்லப்பட்ட ஈகியருக்கான நினைவுத் தூண் திறக்கப்பட்டது. இதை அப்போது தி.மு.க. அமைச்சராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைத்தார். “இனமானப் பேராசிரியர்” போல் ஒதுங்கிக் கொள்ளவில்லை! அவ்விழாவிலும் நான் கலந்து கொண்டேன்.

திராவிடவாதிகள் செய்து வரும் தமிழ் இன – தமிழ் மொழி இரண்டகங்களைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகம் போதாது! இப்படிப்பட்ட இரண்டகங்களைச் சகித்துக் கொள்ளும் தமிழர்களின் மந்த உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, இனம் – மொழி – தாயகம் மூன்றுக்கும் இரண்டகம் செய்வோரை ஓரங்கட்டி ஒதுக்கிவிடத் துணியும் இலட்சிய உளவியலை ஊட்ட வேண்டும். இதுவே இளம் தமிழர்களின் ஆக்கவழிப்பட்ட செயலாகும். வெறும் விமர்சனம் இரசிக மனப்பான்மையை மட்டுமே வளர்க்கும். தேவையான மாற்று இலட்சியத்தை வளர்க்காது.

வீர மரபுக்கு உரியவர்களாக இளையோரை எழுச்சி கொள்ளச் செய்ய உறுதி ஏற்போம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஈகியர் புகழ் ஓங்குக!

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்