"இந்திய ஏகாதிபத்தியத்துக்கு தமிழர்கள் முட்டாள்கள் - அநாகரிகமானவர்களே!" ------- பெ. மணியரசன் தலைவர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Tuesday, March 11, 2025
இந்திய ஏகாதிபத்தியத்துக்கு தமிழர்கள்முட்டாள்கள் - அநாகரிகமானவர்களே!
=============================================================
பெ. மணியரசன்
தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=========================
இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைப்பார்த்து - 10-3-2025 அன்று மக்களவையில் – ‘அநாகரிகமானவர்கள்‘ (Uncivilized), என்று இழிவாகச்சாடி, வசைமாரி பொழிந்துள்ளார். ஆளுங்கட்சியான பா.ச.க. வின் ஆரியத்துவா கொள்கைப்படி, தமிழர்களை - தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்களை “நீசர்கள்” என்று சொல்லி இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக மேலே கண்ட “அநாகரிகமானவர்கள்” என்ற சொல்லைக் கவனமாகப் பயன்படுத்தியுள்ளார்.
பா.ச.க. ஆட்சியாளர்கள் மக்களவையில் தமிழ்நாட்டுத் தி.மு.க. உறுப்பினர்களை இழிவாகப் பேசியதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களை, அநாகரிகமானவர்கள் என்று கூறியதன் மூலம், தமிழ்நாட்டு மக்களை அநாகரிகமானவர்கள் என்று தன்மனத்திற்குள் வைத்திருக்கும் இழிமதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய ஏகாதிபத்தியவாத அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்திய ஏகாதிபத்தியவாதிகளான வடநாட்டுத் தலைவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் இழிமதிப்பு இது! காழ்ப்புணர்ச்சி இது!
1950 களில் தலைமை அமைச்சராக இருந்த காங்கிரசுத் தலைவர் நேரு, ஈ.வெ.ரா. வை “நாடுகடத்த வேண்டிய கிழடுகள்” என்று சாடினார். அதே வாயால் திமுகவினரை “அறிவில்லாதோர் (Non-sense)" என்றார்.
அப்பொழுது தி.மு.க. தனிநாடு கேட்டது. இந்தித் திணிப்பை எதிர்த்தது. ஈ.வெ.ரா. அப்போது காங்கிரசை ஆதரித்தபோதும், இந்திய அரசமைப்புச்சட்ட எரிப்பு போன்ற கருத்துகளைப் பேசியும், போராட்டம் நடத்தியும் வந்தார். நேருவின் இந்த இழிபண்பை எதிர்த்து 6.1.1958 அன்று அவர் சென்னை வந்தபோது, தி.மு.க. வினர் அவருக்குக் கருப்புக்கொடி காட்டி ஏராளமானோர் கைதாகினர். முதல்நாளே முன்னெச்சரிக்கைக் கைதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காங்கிரசின் பிற்கால உடன்பிறப்பான பா.ச.க. பழைய சனசங்கம்) இப்போது ஆட்சியில் உள்ளது. அதன் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், - அவரின் ஆரியத்துவா முன்னோரான பண்டித நேரு தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய அதே பாணி சொல்லைத்தான், இப்போது பயன்படுத்தியுள்ளார்.
தமிழ்த்தேசியர்களுக்கும், விழித்துக் கொண்ட தமிழர்களுக்கும் திராவிடம் பற்றிய சரியான புரிதல் உள்ளது; அது தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் செய்து வரும் இரண்டகங்களையும், அது ஆரியத்துவா இந்தி ஏகாதிபத்தியவாதிகளுடன் கூடிக் குலாவி, கூட்டணி சேர்ந்து, தமிழ்நாட்டையும், தமிழையும் வஞ்சிப்பதையும் அறிவார்கள். ஆனால், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் - தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்று பிரதான் கூறி இழிவுபடுத்தியதை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்!
அதே வேளை, திராவிடப் பரிவாரங்களிடமிருந்து அரசியல் வழியில் எட்டி விலகி இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை எப்போதும் வேண்டும்!
தர்மேந்திர பிரதான் கூறியவற்றுள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை (NEP) ஏற்று, பிஎம்ஸ்ரீ (PMSRI) கல்வித் திட்டத்திற்குக் கையெழுத்துப்போடும் அளவிற்கு வந்த தி.மு.க. ஆட்சியினர், கடைசியில் அரசியல் இலாபம் கருதி அத்திட்டத்தை முழுவீச்சில் எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்றார். “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிஎம்ஸ்ரீ திட்டத்தைத் தொடக்கத்தில் ஏற்றுக் கொண்டார். திடீரெனத் தமது நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்” என்றார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் - மோடி அரசின் திட்டம்தான். இப்போது 2026 சட்டப் பேரவைக்கான தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் அமைச்சரவையும் தி.மு.க. வும் மிகத் தீவிரமாகச் செய்து வருகின்றன. எனவே, தற்காலிகமாக இந்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தையும் அதில் வரும் இந்தித் திணிப்பையும் எதிர்க்கிறது தி.மு.க. தலைமை!
1976-இல் இந்திரா காந்தி கல்வித்துறை அதிகாரத்தை மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து பறித்து, இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டியலுக்குக் கொண்டு போனார். இப்போழுது கூட தி,மு,க. தலைமை, அந்தக் கல்வி அதிகாரத்தை முழுமையாக மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவா என்று கோரவில்லை. இந்திய ஏகாதிபத்திய அரசியலுக்கு இணக்கமுள்ள சேவகம் செய்து கொண்டு, “மாநில உரிமைகளை மீட்க” போராடுவது போல் நடிக்கிறது தி.மு.க. என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் – அலுவலகங்கள், சிபிஎஸ்சி - கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முதலியவற்றில் இந்திய அரசு இந்தியைத் திணிக்கக் கூடாது என்றும், இந்தியை ஆட்சி மொழி, கல்விமொழி என்பதில் தமிழ்நாட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தி.மு.க. கோரவில்லையே ஏன்?
இக்கோரிக்கைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்புகிறது!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
.........
Labels: அறிக்கைகள், இந்திய_ஆதிக்கம், இந்தியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்