" காலனி ஆதிக்கக் கர்வம் – விடுதலை வேட்கை வீரம்!. டிரம்ப் - செலன்ஸ்கி உரையாடல் "--- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Monday, March 3, 2025
காலனி ஆதிக்கக் கர்வம்– விடுதலை வேட்கை வீரம்!
==============================
டிரம்ப் - செலன்ஸ்கி உரையாடல்
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==============================
இரசியப் பேரினவாத ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்து, மூன்றாண்டுகளாகப் போர் புரிந்து வரும் உக்ரைன் குடியரசுத் தலைவர் செலன்ஸ்கி, கடந்த 28.2.2025 அன்று வட அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்பின் வல்லரசு நாட்டாமையை, அநாகரிகத்தை எதிர்த்து வெளியேறியது தன்மானமுள்ள வீரச்செயல்! செலன்ஸ்கி வாழ்க!
இரசியர்கள் எப்போதுமே “மகா ருஷ்யர்” என்ற இனச் செருக்கு மிக்கவர்கள்! இதை, அதே இரசிய இனத்தில் பிறந்த மாபெரும் புரட்சியாளர் லெனினே சாடியுள்ளார். ஜார்ஜியராய்ப் பிறந்து அதிகார போதையில் இரசியராய் மாறிப்போன ஜே.வி. ஸ்டாலின் தமது ஆட்சியில், இரசியரல்லாத சிறுபான்மை தேசிய இனங்களிடம் பாகுபாடு காட்டியபோது, உடல் நலமின்றி ஓய்வெடுத்து வந்த லெனின், “மகா ருஷ்யரை விஞ்சிய மகாருஷ்யராக” - ஜார்ஜியரான ஸ்டாலின், சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரம் செய்கிறாரே என்று விமர்சித்தார்!
சனநாயகச் செம்மலான லெனின் 1917-இல் சிறுபான்மை பெரும்பான்மை வேறுபாடின்றி, தேவைப்பட்டால் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையுள்ள தேசங்களின் கூட்டமைப்பாக சோவியத் ஒன்றியத்தை உருவாக்கினார்.
ஆனால், இரசிய இன - மொழி மேலாதிக்க செயல்முறைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், 1991-இல் பதினைந்து நாடுகளாக சோவியத் ஒன்றியம் பிரிந்தது! அந்தப் பதினைந்து நாடுகளில் இரசியர்களுக்கு அடுத்த நிலை பெரிய இனம் உக்ரேனியர் - பெரிய நாடு உக்ரைன்! 2023-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உக்ரைன் மக்கள்தொகை 4 கோடியே 84 இலட்சத்து 57 ஆயிரத்து நூற்றிரண்டு பேர்! அதன் நிலப்பரப்பு 2 இலட்சத்து 33 ஆயிரத்து அறுபத்திரண்டு ச.கி.மீ!
இப்போது இரசியாவின் குடியரசுத் தலைவராக இருப்பவர் சனநாயக ஜார்மன்னன் புத்தின்! இரசிய கம்யூனிஸ்ட்டுக் கட்சியை சர்வாதிகாரமாக முடக்கி, கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களை சிறையில் அடைத்து, தேர்தல் மோசடிகள் செய்து, தொடர்ந்து “ஜெயித்துக் கொண்டே” இருப்பவர் புத்தின்!
அண்டை ஏகாதிபத்தியமாக, இன ஆதிக்கமாகத் தொடர்ந்த இரசியாவுக்கு அஞ்சி, எட்டியுள்ள இரசியப் பகை ஏகாதிபத்தியமான வட அமெரிக்காவின் நேட்டோ இராணுவக் கூட்டணியில் முன்னாள் கம்யூனிஸ்ட் ஆட்சி நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பலவும் சேர்ந்தன! அவை போலந்து (1999), செக்கியோ (1999), ஹங்கேரி (1999), லாட்வியா (2004), லிதுவேனியா (2004), எஸ்டோனியா (2004), பல்கேரியா (2004), ருமேனியா (2004), குரோஷியா (2009), அல்பேனியா (2009) ஆவன. உக்ரைன் நாடும் 1991 லிருந்து இரசிய ஆக்கிரமிப்புக்கு அஞ்சி தற்காப்பு உணர்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. ஆனால், 2013-இல் உக்ரைன் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த விக்டர் யானுக்கோவிச் என்பவர் இரசிய மேலாதிக்கவாதத்திற்குத் துணைபோகும் நபர் ஆனார். உக்ரைன் மக்கள் யானுக்கோவிச் ஒரு கருங்காலி என்றனர்.
உக்ரைன் மக்கள் புரட்சி செய்தனர். யானுகோவிச் இரசியாவுக்கு ஓடித் தப்பித்தார். இரசிய அதிபர் புத்தின் கையாள் யானுகோவிச் என்று ஏசப்பட்டார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரை, இரசியப் பேரின விரிவாக்கவாதியான புத்தின் அரசு மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறது. புத்தின் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குச் சொல்லுகின்ற முதன்மைக் காரணம், செலன்ஸ்கி ஆட்சி, உக்ரைனை அமெரிக்க நேட்டோவுடன் இணைத்து இரசியாவை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதுதான்!
இதனால் வட அமெரிக்க (U.S.) ஆட்சி, உக்ரைனுக்குப் போர்க்கருவிகள் உதவி, நிதி உதவி கடந்த மூன்றாண்டுகளாகச் செய்து வந்தது. அதே போல் பிரான்சு, செர்மனி, கனடா, பிரிட்டன், இத்தாலி போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்குப் போர்க்கருவிகள், நிதி உதவிகளைக் கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகின்றன.
ஆனால் இரசியப் படைகள் ஆக்கிரமிப்புப் போரில் முன்னேறி உக்ரைன் நகரங்கள், கிராமங்கள் என, அதன் மொத்தப் பரப்பில் சற்றொப்ப 20 விழுக்காட்டை ஆக்கிரமித்து நிர்வாகம் நடத்தி வருகின்றன. அதன் ஆக்கிரமிப்பு வேகமாகத் தொடர்கிறது.
வெறியெடுத்த வேட்டை நாயாய் உலகெங்கும் தேசங்களைக் கவ்வி, கடித்துக் குதறிவந்த வடஅமெரிக்கா, வியட்நாமில் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஈராக்கில் மாட்டிக் கொண்ட அவலத்தில், ஆப்கானிஸ்தானில் கால், கை உடைந்த நிலையில், இனி எந்த நாட்டுக்கும் தனது படையை அனுப்ப வேண்டாம்; தன்நாட்டு முதலாளிகள் உற்பத்தி செய்யும் போர்க் கருவிகளையும், தேவைப்படும் பணத்தையும் மட்டும் தனக்குச் சாதகமான ஒப்பந்த அடிப்படையில் அனுப்புவது என்று முடிவு செய்தது.
உக்ரைனில் இரசியாவை விரட்டி வெற்றியை ஈட்டிய பின் - படைக்கருவி, மற்றும் பண உதவிகளை நிறுத்திக் கொள்வோம் என்று வடஅமெரிக்க வல்லாதி வல்லர்கள் சிந்தித்து வந்தார்கள்! ஆனால், இரசியாவின் டொனால்டு ட்ரம்ப் - அவர்தான் புட்டின் - விடுவதாக இல்லை. உக்ரைனியர்களின் கடைசிச் சொட்டுக் குருதியையும் குடிக்காமல் என் தாகம் அடங்காது என்று கூறுவதுபோல் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தார்.
இந்த இக்கட்டான நிலையில், அமெரிக்க வணிகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சீனாவிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் பரப்புரையில், இனி எங்கேயும் போர்க் கருவிகளை இலவசமாக அனுப்ப வேண்டாம்; நிதி உதவியும் செய்ய வேண்டாம். அப்போதுதான் அமெரிக்காவின் உலகத் தலைமையையும் மண்ணின் மக்களையும் பாதுகாக்க முடியும் என்று வாக்குறுதிகள் கொடுத்தார். பைடன் தோற்று டிரம்ப் வென்றார்.
பதவிக்கு வந்தவுடன், முதலில் இரசியப் பங்காளியுடன் பகை இல்லாமல், உறவை வளர்த்துக் கொள்வோம்; இரண்டு பேரும் சமாதானமாக முடிந்தவரை உலக வேட்டையை நடத்திக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து புத்தினுடன் கமுக்கப் பேச்சு நடத்திவந்தார் டிரம்ப்.
அதே வேளை உக்ரைனில் அவரவர் வசம் உள்ள பகுதிகள் அவரவர் நிர்வாகத்தில் இருக்கட்டும்; இரசியாவும் உக்ரைனும் போர்நிறுத்தம் செய்யட்டும் என்றார் டிரம்ப். புத்தினுக்குப் புளகாங்கிதம் தாங்க முடியவில்லை. உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட இரசியப் பொருளாதாரம் புதைசேற்றில் மாட்டிக் கொண்டது போல் கீழே மூழ்கிக் கொண்டே போகிறது. இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து இரசியாவுக்கு வேலை தேடி வந்தவர்களை ஏமாற்றி, அவர்களுக்கு இராணுவத்தில் குறைந்தபட்ச பயிற்சி கொடுத்து உக்ரைன் போருக்கு அனுப்பி பலியிட்டது. தன்நாட்டிலேயே தனியார் கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உக்ரைன் போருக்கு அனுப்பினார் புத்தின். அதில் தகராறு வந்து கூலிப்படை முதலாளி (தலைமைத் தளபதி), இரசியப் பகுதிகளைப் பிடித்து ஆள்கிறேன்; வரி விதிக்கிறேன் என்று கிளம்பி செயல்படுத்தினார். பின்னர் அவருடன் அமைதி உடன் படிக்கை போட்டார் இரசியாவின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியும், இந்நாளின் சர்வாதிகாரியுமான புத்தின்!
இப்போது புத்தினும், டிரம்பும் இராசி ஆகி, டிரம்ப், செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்குக் கூப்பிட்டு அவமானப்படுத்தினார். “போர் நிறுத்தம் செய்தே ஆகவேண்டும்; புத்தின் பிடித்த பகுதி அவர் வசம் இருக்கட்டும்” என்றார். மறுத்தார் செலன்ஸ்கி. இதோ அவர்களின் உரையாடலின் ஒரு சிறு பகுதி:
வடஅமெரிக்கத் துணை குடியரசுத் தலைவர் ஜே.டி.வான்ஸ்: அமெரிக்காவின் சிறப்பே அதன் இராசதந்திரம்தான்! பைடனைவிடச் சிறப்பாக இராசதந்திரத்தைப் பயன்படுத்துபவர் டிரம்ப். எனவே போர் நிறுத்தம் செய்யுங்கள்.
செலன்ஸ்கி: 2014-இல் இருந்து புத்தின் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். அவரை ஒபாமா, டிரம்ப், பைடன் ஆட்சிகள் தடுக்கவில்லை. இப்போது மீண்டும் வந்துள்ளீர்கள். நீங்கள் (ட்ரம்ப்) புத்தின் போரைத் தடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் மக்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பலமுறை புத்தினுடன் பேச்சு நடத்தினோம். போர்நிறுத்தக் கையொப்பமிட்டோம்; பலன் இல்லை!
வான்ஸ்: தலைவர் டிரம்ப் உங்களை மரியாதையாக வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை அவமரியாதை செய்கிறீர்கள்.
டிரம்ப்: உங்கள் மக்களைப் போரில் ஈடுபடுத்துவது பிரச்சினை இல்லையா?
செலன்ஸ்கி: எங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது.
வான்ஸ்: வெள்ளை மாளிகைக்கு மரியாதையுடன் வந்த நீங்கள் எங்களது நிர்வாகத்தைத் தாக்குகிறீர்கள்!
செலன்ஸ்கி: போரில் எல்லாருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை நீங்கள் உணரவில்லை. எதிர்காலத்தில் உணர்வீர்கள்!
டிரம்ப்: நாங்கள் என்ன உணரப் போகிறோம்? நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறோம். ஆனால் நீங்கள் எங்களை அவமதிப்பதுபோல் பேசுகிறீர்கள்.
செலன்ஸ்கி: அப்படி எதுவும் நான் பேசவில்லை.
டிரம்ப்: எனக்கு ஆணை பிறப்பிக்கும் நிலையில் நீங்கள் இல்லை!
வான்ஸ்: எங்களுக்கு ஆணை பிறப்பிக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.
டிரம்ப்: இப்போது நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் நிலையில் நீங்கள் இல்லை.
செலன்ஸ்கி: ஆமாம், போரின் தொடக்கத்தில் இருந்தே.....
டிரம்ப்: உங்களிடம் துருப்புச் சீட்டு இல்லை. எங்களுடன் இணைந்தால் துருப்புச் சீட்டு கிடைக்கும்.
செலன்ஸ்கி: நான் சீட்டு விளையாடுவதில்லை! நான் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர்! நாட்டைப் பற்றிக் கலலையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
டிரம்ப்: நீங்கள் இப்போது சீட்டாட்டம்தான் ஆடுகிறீர்கள்! பல இலட்சம் மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள்!
செலன்ஸ்கி: நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
டிரம்ப்: நீங்கள் மூன்றாம் உலகப்போருடன் சூதாடுகிறீர்கள். அமெரிக்கா உங்களுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளித்தது.
செலன்ஸ்கி: உங்களுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், போரைப் பற்றி நீங்கள் மிகவும் சத்தமாகப் பேசினால், நீங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?
டிரம்ப்: நீங்கள் நிறையப் பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது.
செலன்ஸ்கி: எனக்குத் தெரியும்!
டிரம்ப்: நீங்கள் வெற்றி பெறவில்லை; இனி வெற்றிபெறப் போவதுமில்லை. எங்களது படைக்கருவிகள் உங்களிடம் இல்லாமல் போயிருந்தால், இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்.
செலன்ஸ்கி: மூன்று நாட்களில் முடிந்திருக்கும் என்று புத்தின் சொல்கிறார். அவருடைய கருத்தை நீங்கள் எதிரொலிக்கிறீர்கள்!
வான்ஸ்: நீங்கள் தவறு செய்கிறீர்கள்!
டிரம்ப்: ஓர் ஒப்பந்தத்தைவிட வேகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரமுடியும்.
செல்ன்ஸ்கி: போர் நிறுத்தம் பற்றி எங்கள் மக்களிடம் கேளுங்கள்!
டிரம்ப்: எனக்குப் பிடிக்கவில்லை. இது போல முட்டாள் குடியரசுத்தலைவர் (Stupid President) பைடன்தான் செய்வார்.
அப்போது ஒரு செய்தியாளர் குறுக்கிட்டு: இரசியா போர் நிறுத்தத்தை மீறினால் என்ன செய்வது?
டிரம்ப்: எதுவும் நடக்கலாம். இப்போதே உங்கள் தலையில் குண்டு விழுந்தால் என்ன செய்வது? பைடனை இரசியா மதிக்கவில்லை! ஆனால் புத்தின் என்னை மதிக்கிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். ஆனால் (நான் இல்லாமல்) நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியுமா? நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், அல்லது நாங்கள் வெளியேறிவிடுவோம். (உரையாடல் - தினத்தந்தி நாள்: 2.3.2025).
இவ்வாறான உரையாடல் போர் நடந்தவுடன் செலன்ஸ்கி வெளியேறி விட்டார். வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த உக்ரைன் அதிகாரிகள், ஊடகத்தார் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறி வெளியேற்றனர்.
வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய செலன்ஸ்கி, நேரே வெள்ளையர் நாட்டுத் தலைநகர் இலண்டன் சென்றார்.
பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயிர் ஸ்டாமர், எண் 10, டவுனிங் தெருவில் உள்ள தமது வீட்டிலிருந்து வாசலுக்கு வந்து செலன்ஸ்கியை எதிர்கொண்டு தழுவி வரவேற்றார். பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் டிரம்ப்பின் அந்த அநாகரிக - எதேச்சாதிகார அணுகுமுறையை ஏற்கவில்லை. உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவே சிந்திக்கிறார்கள்.
அதே வேளை டிரம்பை, வெளிப்படையாக எதிர்க்காமல், பாதுகாப்பான போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்றை இரசியாவுடன் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.
அதேவேளை இரசியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை ஐரோப்பியத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். புத்தினைத் தலையில் தட்டி வரம்புக்குள் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
செலன்ஸ்கியை வெள்ளை மாளிகை விருந்தினராக டிரம்ப் அழைத்தது, உக்ரைன் கனிம வளங்களை, வரம்பின்றி வடஅமெரிக்கா அள்ளிக்கொள்ளும் ஒப்பந்தம் போடவே! ஆனால், அதற்குள் டிரம்பின் ஏதேச்சாதிகாரச் சீரழிவுப் பண்பாட்டால் செலன்ஸ்கியுடனான பேச்சு முறிந்துவிட்டது.
வெள்ளை மாளிகை ஓவல் அறையில் உட்கார்ந்துகொண்டு டிரம்ப் “முச்சந்தி முரடன்” போல் பேசியதை இரசியாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பாராட்டிப் புகழ்ந்து தள்ளியுள்ளார். அமெரிக்கத் தலைவர் டிரம்ப் உக்ரைனில் போரை விரும்பவில்லை; ஆனால் ஐரோப்பிய நாடுகள் போரைத் திணிக்கின்றன என்று லாவ்ரோவ் சாடியுள்ளார். இரசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள நல்லுறவை முன்மாதிரியாகக் கொண்டு, இரசியாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவை உருவாக்க வேண்டும் என்று பொங்கி வழிந்துள்ளார்.
தமிழ்த்தேசியர்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். வட அமெரிக்கா, இரசியா, சீனா போன்ற நாடுகள் வகுத்துக்கொள்ளும் கூட்டணிகள் நமக்கு வழிகாட்ட முடியாது. பழைய கம்யூனிஸ்ட்டு இரசியாவும், கம்யூனிஸ்ட்டு சீனாவும் தங்கள்தங்கள் நாட்டின் நலனுக்காக இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு முற்போக்கு சனநாயகவாதிகள் பட்டமோ அல்லது தரகு முதலாளி பட்டமோ கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில், நேரு அரசுடன் சகோதரத்துவம் பேசும் சீனா – அடுத்த கட்டத்தில் உலகமகா எதிரி இந்தியா என்று படம் காட்டும்.
அதேபோல் அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி சனநாயக உரிமைகளைப் பறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்து, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை இரத்துச் செய்து, 1975 - 76இல் சர்வாதிகாரப் பேயாட்டம் ஆடினார். அவற்றை இடதுசாரி சனநாயக முற்போக்குச் செயல்பாடுகள் என்று ஆதரித்தது அன்றைய சோவியத் நாட்டின் (இரசியாவின்) கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அதன் ஆட்சியும்! தனக்கு ஒரு நட்பு நாடு தேவை! அந்த நாடு தன் மக்களை எவ்வளவு அழித்தாலும் கவலை இல்லை என்பதுதான் அன்றைய இரசியக் கம்யூனிஸ்ட்டு ஆட்சி - சீனக் கம்யூனிஸ்ட்டு ஆட்சிகளின் “சனநாயக சோசலிசப் புரட்சி” போர்த்தந்திரம்!
அதற்குத் தமிழர்கள் பலியாகக் கூடாது. இனிமேலும், எது சரி, எது தவறு, எது நமது தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்க, முன்நகர்த்த உதவும் என்று பார்த்துதான் நாம் நமது உள்நாட்டுக் கொள்கையையும், வெளிநாட்டு விமர்சனங்களையும் முன் வைக்க வேண்டும்.
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Labels: அமெரிக்கா, உக்ரைன், உலகம், ஏகாதிபத்தியம், தேசியம், ரஷ்யா
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்