"இளையராஜாவின் வல்லமைக்கு (VALIANT) வாழ்த்துகள்!" ---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Monday, March 10, 2025
இளையராஜாவின்வல்லமைக்கு (VALIANT) வாழ்த்துகள்!
================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
இசைஞானி இளையராஜா அவர்கள் இலண்டன் அப்பல்லோ அரங்கில் 77 இசைக் கலைஞர்கள், பல வகை இசைக்கருவிகள் கொண்டு இசைக்க "சுரப்பன்மை ஒருங்கில்" (symphony ) இசையில் சொற்கள் இல்லாத இசையை வழங்கி உலகப் பாராட்டை பெற்றுள்ளார்.
"இது உலகச் சாதனை, தெற்காசியாவில் இருந்து முதல் சாதனை" என்று பலரும் பாராட்டுகின்றனர். ஏழு சுரங்களுக்கு அப்பால் சுரக்கலவையில் புதிய சுரங்களை உருவாக்கியுள்ளார்.
இசை நுட்பங்கள் அறியாத நான், திரைப்படப் பாடல்கள் மற்றும் சில வகை தமிழிசை பாடல்களை மட்டுமே சுவைக்க தெரிந்த நான், சிம்பொனி இசைஞானி இளையராஜா சாதனையை பாராட்ட தகுதியற்றவன்.
ஆனால் என் உள்மன உந்துதலால் - திருவாரூர் தோழர் சண்முகம் கலைச்செல்வன் அவர்களின் தூண்டுதலால் இப்பாராட்டுரையை எழுதத் துணிந்தேன்.
"ராக்கம்மா கையைத் தட்டு - புது ராகத்தில் மெட்டுக்கட்டு" என்ற "தளபதி" திரைப்படப் பாடலை மிகவும் இரசித்துள்ளேன். அப்பாடலை இசையமைத்தவர் இளையராஜா!
அது ரஜினிகாந்த் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வந்த திரைப்படம். அந்த "ராக்கம்மா கையை தட்டு" பாடல் சிம்பொனி இசை கலவையின் ஒரு வெளிப்பாடு என்று சொல்லப்பட்டது. அப்பாடலை எழுதிய வாலி, "ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு" என்று ஒரு புதிய ராகத்தையும் கோடிட்டு காட்டி இருக்கிறார்.
இப்பாடலுக்கு முன்பே 1979இல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தில் வரும் "இதயம் போகுதே எனையே பிரிந்து" என்ற பாடல் சிம்பொனி இசையின் சில கூறுகளை கொண்டது என்றார்கள். இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருந்தார்.
இப்பாடல்கள் குறித்த இந்த சிம்பொனி விவரம் தெரியாமலேயே நான் இவற்றை இரசித்திருக்கிறேன்.
எனவே நான் இசை நுட்பங்களை எல்லாம் அறிந்து இளையராஜாவின் இசை மேதமையை பாராட்டவில்லை.
இயல்பாக ஏற்கெனவே இருந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் இசை நயங்களில் இருந்து மாறுபட்ட வடிவில் திரைப்பாடல்களை வழங்குகிறார் என்ற மதிப்பீடு இளையராஜா மீது எனக்கு ஏற்பட்டது. அதற்கு மேல் அவரை பலரும் பாராட்டுகிறார்கள். அக்ரகார இசை மேதைகளும் பாராட்டுகிறார்கள்!
மகிழ்ச்சி! நம் தமிழ் இனத்தில் பிறந்து இக்கால தமிழ் இசையை வளர்த்துள்ள இசைஞானி இளையராஜா மீது எனக்குப் பெருமதிப்பும் பாசமும் உண்டு!
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை வளர்த்த இனம் தமிழ் இனம்! ஆனால் ஆரியர்களின் ஆக்கிரமிப்புக்கு பின் தமிழர்களின் மரபு வழிபட்ட மாண்புகள் - ஆற்றல்கள் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி, சமற்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளை திணித்து தமிழை - தமிழரைச் சீரழித்தனர்.
தமிழிசை என்பதே இல்லை ; தெலுங்கு இசையே சிறப்பானது; தமிழுக்கு தலைமை தாங்கத் தக்கது தெலுங்கே என்றனர்.
பிற்காலத்தில் கி.பி. 16 -18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முத்து தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் தமிழிசை மூவர் என்று பாராட்டப்பட்டனர். ஆனால் இவர்களை மறைக்கும் வகையில் தெலுங்கு பாடகர்களாகவும் பிராமணர்களாகவும் இருந்த தியாகராஜர், முத்துசாமி தீட்சீதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரை பிரபலப்படுத்தினர்.
தெலுங்கு பிராமணர்களும், தமிழ் பிராமணர்களும், அடிமை உளவியலால் பாதிக்கப்பட்ட தமிழின இசை கலைஞர்களும் தெலுங்கு மும்மூர்த்தி பிராமணர்களை முன்னிலைப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் மரபு வழி இசை என்றாலே பிராமண பண்டிதர்கள் நடத்தும் தெலுங்கு சங்கீதக் கச்சேரியே என மாற்றினார்கள்!
தமிழ்நாட்டில் பெரும்பான்மையாய் உள்ள தமிழின இரசிகர்களுக்காக அக்கச்சேரிகளின் முடிவில் சில தமிழ் பாடல்களும் பாடுவார்கள். அதற்குப் பெயர் "துக்கடா பாடுவது" என்பதாகும்.
இவ்வாறான அயல்மொழி, அயல் இன ஆதிக்க சூழலில், தமிழ்நாட்டில், தமிழ் இனத்தில் பிறந்த இளையராஜா அவர்கள், நிலக்கோளத்தின் கீழ் திசையும் மேல் திசையும் புகழ - சிம்பொனி இசையில் தலைசிறந்த மேதையாய் விளங்குவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை; மகிழ்ச்சி!
உலகில் மனித குலத்தின் முதல் இசை வல்லமை வெளிப்பட்ட இடம் தமிழ் மண்ணாகத்தான் இருக்கும்!
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் இசை பற்றிய அடிப்படை இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன; இசை கருவிகள் பல கூறப்பட்டுள்ளன.
ஒத்த குழலின் ஒலிஎழ முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை,மகுளி
"ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர்பிற்படார்"
அடுத்து இசைக் கலைஞர்களின் சிறப்பு பெயர்களும் பரிபாடலில் கூறப்பட்டுள்ளன.
"ஒத்து அளந்து சீர்தூக்கி " என்று பரிபாடல் கூறுவது ஓசை அளவின் எண்ணிக்கையை (notation) ஆகும்.
அடுத்து இசைக் கலைஞர்களின் சிறப்பு பெயர்களும் பரிபாடலில் கூறப்பட்டுள்ளன:
ஒருதிறம் பாணர் யாழின் தீங்குரல்எழ ஒருதிறம் யாணர் வண்டின் இமிரிசை எழ, ஒருதிறம் கண்ணார குழலின் கரைபுஎழ ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசை ஊத ஒருதிறம் மண்ணார் குழவின் இசைஎழ ஒருதிறம் அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்பு நுடங்க.... இப்படி ஒரே நேரத்தில் எழுப்பப்படும் பல்லிசை தொகுப்பை அடுக்கிச் செல்கிறது பரிபாடல்! சங்க கால நூலான அதன் தலைப்பே பரி "பாடல்!"
சிலப்பதிகாரமோ - இசை, நாட்டியக் கலை இரண்டின் காரணமாக எழுந்த நிகழ்வுகளின் காப்பியம்!
அது " உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள்" என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டது.
"ஏழிசையாய் இசைப் பயனாய் என்னுடைய தோழனுமாய்" - என்று சிவபெருமானை அழைத்தார் சுந்தரர்.
"குழல் ஒலி, யாழ் ஒலி, எங்கும் குழாம் பெருகி,விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆரூர்" என்றார் சேந்தனார்.
தமிழையே முத்தமிழ் என்று கூறி, இசையைத் தமிழிலிருந்து பிரிக்க முடியாது என்றனர் நம் முன்னோர்.
ஆனால், பிற்காலத்தில், தமிழில் பாடக்கூடாது என்றனர் பிராமணர்கள்; தமிழ் அர்ச்சனை கூடாது என்றனர்.
ஆனால் தமிழில் நாட்டுப்புறப் பாடல்களை சிறப்பாக இசைத்து, ஆய்வுகள் செய்து பாராட்டு பெற்றவர் அதே பிராமண வகுப்பில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா!
அண்மையில் பிராமண இசை வல்லுனர்களும் ஆர்வலர்களும் நிறைந்த ஓர் அமைப்பு மேற்படி டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி பாராட்டியது. அதை எதிர்த்து அக்ரஹார வாசிகள் சென்னையில் பேயாட்டம் ஆடினர். டி.எம்.கிருஷ்ணா அஞ்சாமல் எதிர்கொண்டார். அவருக்கு நம் பாராட்டுகள்!
பாவேந்தர் பாரதிதாசன், "கச்சேரி பண்ணாதே - பெண்ணே கனியத் தமிழ் பாடு!" என்றார். "இசையமுது" என்ற தலைப்பில் தமிழிசை பாடல்களை வெளியிட்டார்.
இசைஞானி இளையராஜாவின், உலகம் வியக்கும் இசை மேதைமையில் அவரது தனி திறனும், புதியன படைக்கும் ஆற்றலும் உள்ளன! அதேவேளை பல்லாயிரம் ஆண்டுகளாக இசை உடன் வாழ்ந்து இசையை வளர்த்த தமிழினத்தின் மரபணு ஆற்றலும் அவரிடம் இருக்கிறது.
"வல்லமை" பொருள் கொண்ட "VALIANT" என்ற தலைப்பைத் தமது சிம்பொனி தொகுப்புக்கு சூட்டியுள்ளார்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தை சிம்பொனி இசையில் இளையராஜா வழங்கி உள்ளார் என்பதையும் சேர்த்து பாருங்கள்.
வாழ்க இசைஞானி!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: அறிக்கைகள், இளையராஜா, தமிழிசை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்