<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மக்களவையை தேசிய இனங்களின் கூட்டவையாக மாற்றுக!" --- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Saturday, March 1, 2025


மக்களவையை தேசிய இனங்களின்

கூட்டவையாக மாற்றுக!
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================


ஒரு சமூகச் சிக்கல் தீரும் அல்லது வளரும்; அது இருந்தபடியே இருக்காது! நீதியுடனோ அல்லது அநீதியுடனோ அது வளரும்! ஏன்? சமூகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

பிரித்தானியப் பீரங்கிகளால் - ஆங்கிலேயக் காலனி வேட்டையாடிகளின் துப்பாக்கிகளால் - தூக்குக் கயிறுகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான நிர்வாகக் கட்டமைப்பு இந்தியா! இதற்குள் பல இனங்கள் - பல மொழிகள் - பல பண்பாடுகள் “அடக்கம்”!
ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தை வெளியேற்றப் போராடி உயிரீகம் செய்த - சிறைக் கொட்டடிகளில் வாடிய அனைவர்க்கும் நாம் என்றும் நன்றியுடைய தமிழர்களாக இருப்போம். ஆனால், இலண்டன் காலனி ஆதிக்கத்திற்கு மாற்றாக தில்லிக் காலனி ஆதிக்கத்திற்கு வழி திறந்துவிட்டது போல் ஆகிவிட்டது 1947 ஆகத்து 15 வேதனை. அது அன்றாடம் அதிகரிக்கிறது.

இந்தியா என்பது ஒரு தேசிய இனத் தாயகம் அல்ல; பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. அதனால்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் ( Nation ) என்று குறிப்பிடாமல், அரசுகளின் அல்லது மாநிலங்களின் ஒன்றியம் ( Union of States ) என்று கூறுகிறது ( Article - 1 ).

இந்திய தேசியக் காங்கிரசின் 1924 பெல்காம் மாநாட்டில், ஆங்கிலேய ஆட்சி, ‘நிர்வாக மண்டலங்களாகப் பிரித்து வைத்துள்ள மாநிலங்களை‘ மொழிவழி மாநிலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். இந்தியா விடுதலை அடைந்து 1947 ஆகத்து 15இல் இந்நாட்டின் அதிகாரம் காங்கிரசுக் கட்சியின் கைக்கு வந்தபின், மொழிவழி மாநிலங்கள் அமைக்க மறுத்தார்கள் பண்டித நேருவும், காங்கிரசு ஆட்சியாளர்களும்.

பொட்டி சிறீராமலு உயிரீகம், ஆந்திரத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி, மராட்டியத்தில் பண்டித நேரு மீது கல்வீச்சு எனப் பல போராட்டங்கள் நடந்தபின்தான் மொழிவழி மாநிலங்கள் அமைக்கத் தொடங்கினார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றி ஒரு விதி கூட இல்லை. நிர்வாக வசதிக்காக தில்லி ஏகாதிபத்தியம் - அதன் நாடாளுமன்றம் மாநிலங்களை இணைக்கலாம் அல்லது பிரிக்கலாம் என்பது மட்டுமே அதில் விதி இருக்கிறது ( Article 3 ). குறிப்பிட்ட மாநிலத்தில் காலங்காலமாக ஒரு தாய் மொழியை, ஒரு தாயகத்தைக் கொண்டு வாழும் ஓர் இனமக்களுக்கு தங்கள் தாயகம் குறித்து முடிவு செய்ய உரிமை இல்லை. இதில் இலண்டன் காலனி ஆதிக்கத்திற்கும் தில்லி காலனி் ஆதிக்கத்திற்கும் வேறுபாடில்லை.

கூட்டாட்சி போல் தோற்றமளிக்கும் ஒற்றை ஆட்சியைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளீடாக வைத்துள்ளது என்று பேராசிரியர் கே.சி. வியர் போன்றோர் கூறியுள்ளார்கள். இந்த அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தமிழ்நாட்டின் மொத்த மக்களவை உறுப்பினர்கள் 39 பேர்! உ.பி, பீகார், ம.பி. இராசசுதான், தில்லி உள்ளிட்ட இந்தி மாநிலங்கள் பத்தின் மொத்த உறுப்பினர்கள் 225!

இந்தியாவில் உள்ள இந்தி - சமற்கிருத மேலாதிக்கம் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மீதான, மிகக் கொடிய இன - மொழி ஒடுக்குமுறை அமைப்பு இந்திய நாடாளுமன்றம்தான்! முப்பத்தொன்பது மக்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, தமிழ்நாடு என்ன திருத்தம் கொண்டுவர முடியும்?

இப்போது மக்கள் தொகை உயர்வுக்கேற்ப உ.பி.யின் மக்களவை உறுப்பினர்கள் 80 லிருந்து 143, பீகார் 40 லிருந்து 79, ம.பி. 29 லிருந்து 52, இராசசுதான் 25லிருந்து 50 என இந்தி மாநிலங்கள் 10-இன் உறுப்பினர் எண்ணிக்கை மிகமிக அதிகமாகப் போகிறது. தமிழ்நாட்டில் 39 லிருந்து 49 ஆக மட்டுமே உயரும்!

ஐரோப்பியக் காலனி வேட்டையாடிகளால் உருவாக்கப்பட்ட இந்திய நிர்வாகத்தில் - நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்கள் எண்ணிக்கைளை முடிவு செய்யக் கூடாது. தேசிய இன அடிப்படையில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஏனெனில் இவை ஒவ்வொன்றும் தனிநாடாக இயங்கத் தகுதியுடையவை. இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் கூடாது. ஒரே அவை போதும்! இதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு மக்கள் இவ்வாறான சிந்தினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விவாதியுங்கள்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச்சு 2025 மாத இதழின் ஆசிரியவுரை).

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்