"இனங்களின் தொகுப்பே இந்தியா! இனக் கூட்டமைப்பே இணக்கம் தரும்!" ---- ஐயா பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்"
Thursday, March 6, 2025
இனங்களின் தொகுப்பே இந்தியா!இனக் கூட்டமைப்பே இணக்கம் தரும்!
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இப்போதுள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இதை, ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகை உயர்வுக்கேற்ப அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய பா.ச.க. ஆட்சி முடிவு செய்து அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப அந்தந்த மாநிலத்திற்கான மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரலாம் அல்லது குறையலாம்.
பா.ச.க. ஆட்சி மர்மமாக வைத்துள்ள மக்கள்தொகை விகிதக் கணக்குப்படி, இந்தி மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறையும் என்கிறார்கள்.
உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், ஜார்கண்ட், உத்திரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், இராசஸ்தான், அரியானா, புதுதில்லி ஒன்றியப் பிரதேசம் முதலிய மாநிலங்கள் இந்தியைத் தங்கள் அலுவல் மொழியாகவும் கல்வி மொழியாகவும் வைத்துள்ளன. இந்த பத்து மாநிலங்களில் இப்போதுள்ள மக்களவையில் சற்றொப்ப 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் (மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543). இவற்றின் மக்கள் தொகை மிகமிக உயர்ந்துள்ளது. அந்த விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள்தொகை உயரவில்லை.
எனவே, மக்கள்தொகை விகிதத்தை அடிப்படையாக வைத்து மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக மறுவரையறை செய்தால், இந்தி மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும். அந்த விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்கள் தொகை உயரவில்லை. எனவே மறுவரையறுப்பில் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் விகிதம் குறையும் நிலை உள்ளது.
இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தினால் 880 ஆகும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதன்படி தொகுதி எண்ணிக்கை உ.பி. 80லிருந்து 143; பீகார் 40 லிருந்து 79; மத்தியப்பிரதேசம் 29 லிருந்து 52; இராசஸ்தான் 25 லிருந்து 50 என உயரும் என்கிறார்கள். இதன்படி தமிழ்நாட்டுக்கு 39 லிருந்து 49 தான் கிடைக்கும் என்கிறார்கள். வேறொரு விகிதப்படி, தமிழ்நாட்டிற்கு இப்போதுள்ள 39 தொகுதிகள் 31 ஆகக் குறைந்துவிடும் என்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் - இந்தி மாநிலங்களைவிட மிகமிகக் குறைவாக இருக்கும்.
மக்கள்தொகை எண்ணிக்கைக்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுவதும் அல்லது குறைவதும் சனநாயகம்தானே! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இதற்கான காரணங்களை மட்டும் கமுக்கமாக வைத்துக் கொள்வார்கள், கழகத் தலைவர்கள். தமிழ் மாநிலத்திற்குக் குறைந்துவிட்டது என்று மட்டும், தமிழ்இன உரிமைகளுக்கு நிற்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்.
இந்தியா என்பது, பிரித்தானிய வணிக வேட்டையாடிகளின் பீரங்கிகளும், துப்பாக்கிகளும், தூக்குக் கயிறுகளும் பல்வேறு இனத் தாயகங்களில் அந்தந்த இனத்தின் மன்னர்களை – தளபதிகளை – ஆட்சியாளர்களை - மக்களைக் கொன்றும் சிறையில் அடைத்தும் புதுப்பெயரில் உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு! வரலாற்றில் புதிய நாடு!
இதற்கான விடுதலைப் போராட்டத்தின் வழியாக வெள்ளைக்காரன் நிறுவிய (பாக்கிஸ்தான் தவிர்த்த) இந்தியாவின் ஆட்சியை காங்கிரசுக் கட்சியின் ஆதிக்கத் தலைமையில் இருந்த வடநாட்டு, ஆரிய பிராமண - ஆரிய வைசிய - இந்தி ஏகாதிபத்தியத் தலைவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலேயே இந்தியா என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த வந்த பாரததேசம்தான் என்று நெஞ்சாரப் புளுகினர். சமற்கிருதமும், இந்தியும் “இந்தியர்களின்” பொது மொழி என்றனர்.
இவ்வாறான காலத்தில், சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்த்தும் இந்தித் திணிப்பை எதிர்த்தும் தமிழறிஞர்களும் தமிழின உணர்வாளர்களும் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்து மக்களைத் திரட்டினர். அதன் ஆதரவாளராக இடையில் புகுந்த ஈ.வெ.ரா. பின்னர், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற இன முழக்கத்தைத் திராவிடர், திராவிடநாடு என்று சூழ்ச்சியாக இனம் மாற்றினார். அவரிடமிருந்து பிரிந்த தி.மு.க.வினர், “அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு” என்று முழங்கி - நல்ல தமிழில் அடுக்குமொழியில் பேசி தமிழர்களைத் திரட்டினர். தனிநாடு கோரிக்கைக்குத் தடைச்சட்டம் வரப்போகிறது என்று பேசப்பட்ட உடனேயே திராவிடநாடு விடுதலையைச் சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
“மாநில சுயாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்து - அதன்வழியாக வடவர் ஆதிக்கத்தை - இந்தித் திணிப்பை - பிராமண-சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு 1967-இல் ஆட்சியைப் பிடித்தனர். “மாநிலத்தில் சுயாட்சி (State Autonomy) மத்தியில் கூட்டாட்சி (Federal Government) என்று முழக்கம் கொடுத்தனர். இந்திய அரசில் அதாவது மைய ஆட்சியில் குவிந்துள்ள அதிகாரங்களை மிகவும் குறைத்து, மாநிலத்திற்கு அந்த அதிகாரங்களை மீட்பதே தி.மு.க.வின் இலட்சியம் என்று எழுத்திலும் பேச்சிலும் முழங்கினர். அவர்களின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று “மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி”!
அண்ணா மறைந்த பிறகு 1969 லிருந்து இந்திய ஆட்சியாளர்களுடன் - இந்திராகாந்தி, தேவகவுடா, குஜரால், வி.பி. சிங், வாஜ்பாயி, (சோனியா) மன்மோகன்சிங் என இந்திய ஒன்றிய ஆட்சியை ஆதரித்தனர் - அவற்றில் பங்கெடுத்தனர். இக்காலங்களில், மாநிலத்திற்குப் புதிதாக ஓர் உரிமையையாவது மீட்டார்களா? இல்லை!
“மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை கருணாநிதியும் ஸ்டாலினும் “மாநிலத்தில் குடும்ப ஆட்சி - மத்தியில் கூட்டணி ஆட்சி!” என்று மாற்றினர்.
ஆங்கிலேயேர் ஆட்சியிலிருந்து 1976 வரை “கல்வி” மாநில அரசு அதிகாரப்பட்டியலில் இருந்தது. அதை இந்திரா காந்தி 1976-இல் இந்திய ஆட்சியின் மேலாதிக்கமுள்ள பொதுப்பட்டியலுக்குக் கொண்டு போனார். அதன்பிறகு 1980-இல் இந்திரா காந்தியுடனும், பின்னர் சோனியா காந்தியுடனும் கூட்டணி சேர்ந்த தி.மு.க. அந்தக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்ததா? இன்றுவரை இல்லை!
அதுபோல் காவல்துறை, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்டவை ஏற்கெனவே மாநிலப்பட்டியலில் இருந்தன. அவற்றில் முழு மேலாதிக்கத்தை இந்திய அரசு நிலைநாட்டி ஆதிக்கம் செய்து வருகிறது.
தி.மு.க. காங்கிரசோடு கூட்டணி சேர்ந்து 2004 இல் இருந்து 2014 வரை இந்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த காலத்தில்தான் முழுக்கவும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (N.I.A.) என்ற காவல்துறையை உருவாக்கினார்கள். மாநிலத்திற்குள் சென்று யாரையும் தளைப்படுத்தலாம்; அந்த மாநிலத்தில் இயங்கும் எந்த நீதிமன்றத்தையும் தனது (N.I.A.) வழக்குக்கான நீதிமன்றமாக மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து தொடர்புடைய மாநில அரசுக்குத் தகவல்கூட தெரிவிக்க வேண்டியதில்லை.
வெள்ளையராட்சியில் 1937-இல் இருந்து காங்கிரசு (இராசாசி) அமைச்சரவையால் உருவாக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு, மாநில அரசுக்கே நூறு விழுக்காடும் பயன்பட்டுவந்த விற்பனை வரியை நீக்கி, இந்திய அரசின் சரக்கு சேவை வரியுடன் (GST) அதை இணைத்தது காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சிதான்.
அதே பத்தாண்டு மன்மோகன் (சோனியா) - தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான் மாநில அரசுகள் நடத்தும் மருத்தவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு “நீட்” என்ற நுழைவுத் தேர்வைத் தயாரித்தார்கள்.
பா.ச.க. - காங்கிரசு உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து இந்திய அரசு அமைச்சரவையில் பங்கு வகித்த தி.மு.க., இக்காலங்களில் ஏற்கெனவே இருந்த மாநில உரிமைகளையும் இந்திய அரசிடம் இழந்திருக்கிறதே தவிர, புதிதாக ஓர் உரிமையைக்கூட மீட்கவில்லை!
கருணாநிதி முதல் முதலாக முதலமைச்சரான போது 1969 ஆகத்து 19 அன்று டாக்டர் பி.வி. இராசமன்னார் அவர்களைத் தலைவராகவும், கல்வியாளர் டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார், பி. சந்திரா ரெட்டி ஆகிய இருவரையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில உரிமைகள் மீட்பிற்கான ஆய்வுக்குழு அமைத்தார். அக்குழு 1971-இல் தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் அளித்தது.
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசின் அதிகாரப்பட்டியலில் இருந்து மாநில அதிகாரத்திற்கு மாற்றப்பட வேண்டியவை -
2. ஒன்றிய - மாநில அரசுகளுக்கான ஒத்திசைவு பட்டியலில் இருந்து (concurrent list) மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டியவை -
3. ஒன்றிய அரசு அல்லது ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டிய அதிகாரங்கள்
என மூன்று வகையிலும் மாநில அதிகாரப்பட்டியலில் புதிய அதிகாரங்கள் சேர, இராசமன்னார் குழு பரிந்துரைகள் வழங்கியது!
இவற்றில் ஒன்றைக்கூட கேட்டு, வலியுறுத்தி போராடி தி.மு.க. ஆட்சியும், கட்சியும் மாநில அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டு வரவில்லை.
இந்தியாவின் ஏகாதிபத்திய அதிகாரங்களுக்கு ஏவல் பணி செய்தே பழக்கப்பட்டுவிட்டது தி.மு.க.! தி.மு.க.வில் பயிற்சி பெற்றுப் பிரிந்த அ.தி.மு.க. இந்திய அரசுக்கான ஏவல் பணியை வெளிப்படையாகச் செய்யும்! தி.மு.க.வோ மாநில சுயாட்சி முழங்கி, ஜால்ரா சத்தத்தையே போர்ப்பரணி என்று புரட்டிப்பேசும்!
இப்போது, மக்களவைத் தொகுதிகளில் மாற்றம் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி (5.3.2025) போர்ப்பறை போல் ஜால்ராவைத் தட்டியுள்ளது தி.மு.க. ஆட்சி!
தமிழ் வேடம்
===========
வாரிசு அரசியலின் வழித்தோன்றலான மு.க. ஸ்டாலின், தமிழர் இன அடையாளங்களை முழுக்க மறைத்து திராவிட இன அடையாளத்தைத் திணிப்பதில் எல்லை கடந்து தீவிரம் காட்டிவிட்டார். அதுவே இப்போது அவருக்கு ஆபத்தாக வந்துவிட்டது. தமிழ்த்தேசியம் வீறுகொண்டு எழுந்து வருகிறது. “திராவிட இனம்” என்ற அயலார் சூதாட்டத்தைத் தமிழர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். எனவே, 2026 - சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ் இனத்தார் வாக்குகளை இழந்துவிடக் கூடாது, தமிழ் இனத்தார் மனத்தில் அயல் திராவிட இனவாதம் குறித்து ஐயம் எள்ளளவு எழுந்தாலும், வாக்குச் சாவடியில் என்ன விபத்து நடக்குமோ என்று அச்சப்பட்டிருப்பார் போல் தெரிகிறது. இப்பொழுது திராவிடத்தைக் குறைத்துக் கொண்டு தமிழ், தமிழர் என்ற சொற்களை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்.
மு.க. ஸ்டாலின் தமது தனிப்பட்ட அறிக்கைகளிலோ அல்லது 5.3.2025 அன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலோ, இந்திய அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டிய மாநில உரிமைகளைப்பற்றி ஒருவார்த்தை கூடக் கூறவில்லை.
பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்து பரங்கியர் உருவாக்கிய காலனிகளின் தொகுப்பே இந்தியா. இந்தியாவில், இப்போது மாநிலங்களுக்குத் தேவையான தன்னாட்சி (சுயாட்சி) பற்றி மூச்சுப்பேச்சு அவரிடம் இல்லை.
இனங்களின் தொகுப்பே இந்தியா
===========================
இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் கூடாது. சிறிது பெரிது எதுவாக இருந்தாலும் ஒரு மாநிலம் என்பது இன அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். தமிழ் இனத்திற்குத் தமிழ்நாடு, அதே போல் தெலுங்கு, கன்னடம், மலையாள இனங்களுக்கு ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியருக்கு மகாராஷ்ட்ரா, வங்காளிகளுக்கு மேற்கு வங்காளம்! எல்லா இனங்களையும் தனித்தனி மாநிலமாக்கி அவற்றுக்கான பொது நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் (Federal Parliament) சிறிது, பெரிது என்றில்லாமல், அனைத்திற்கும் சமமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். படைத்துறை, வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு போன்ற முக்கியமான சில துறைகள் மட்டும் இந்தியக் கூட்டாட்சி (Federal State) வசம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்தந்த இன மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.
அனைத்து வரிகளையும் விதித்து வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும்! கூட்டாட்சி அரசுக்கு ஒவ்வொரு தேசிய இன மாநில அரசும் தரவேண்டிய வரிப்பகிர்வைக் கூட்டாட்சி நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். வரிவிதித்து வசூலிக்கும் உரிமை மாநில அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
இவ்வாறான சனநாயகக் கூட்டாட்சி முறையை இந்தியாவில் செயல்படுத்து என்று தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பா.ச.க. கட்சிகளை விமர்சிப்பது மட்டுமே தமிழர்களின் மொழி, இன, தாயகச் சிக்கல்களுக்கான தீர்வு அல்ல! ஆக்க வழிப்பட்ட மாற்றுத் திட்டங்களை, கோரிக்கைகளை எழுப்புவோம்; அவற்றை மக்கள் மயப்படுத்துவோம்!
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Labels: இந்திய_ஆதிக்கம், கட்டுரைகள், தமிழ்த்_தேசியம், தமிழ்த்தேசியம், பார்ப்பனியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்