"துணிச்சலும் - பண்புப் பக்குவமும் இணைந்திருந்த அன்புத் தோழர் மதுரை அரப்பா அவர்கட்கு வீரவணக்கம்" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்
Friday, December 27, 2024
துணிச்சலும் - பண்புப் பக்குவமும் இணைந்திருந்தஅன்புத் தோழர் மதுரை அரப்பா அவர்கட்கு வீரவணக்கம்
===========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்
மிகச்சிறந்த தமிழ் உணர்வாளரும், சமூகச் சீர்திருத்தச் செயல்பாட்டாளருமான அன்புத் தோழர் மதுரை அரப்பா அவர்கள் நேற்று (26.12.2024) மதுரையில் தம் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. மதுரையில் 1990களில் செயல்பட்டு வந்த புரட்சிக் கவிஞர் பேரவை நிகழ்வுகள் மூலமாகவே தோழர் அரப்பா அவர்களுடன் எனக்குத் தோழமை ஏற்பட்டது. அப்பேரவையில் என்னையும் அழைத்துப் பேச வைத்தார்கள்.
அப்போது அரப்பா அவர்களுடன் ஏற்பட்ட தோழமை எங்களிடையே தொய்வின்றித் தொடர்ந்தது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மதுரைத் தோழர்கள் அ. ஆனந்தன், கதிர்நிலவன், இராசு, கரிகாலன் உட்பட பலரும், தோழர் அரப்பா சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டில் இருந்தவாறே டயாலிசிஸ் மருத்துவம் செய்து கொண்டிருந்த காலத்திலும் அவரின் வாழ்நாள் முடிவு வரை உயிரோட்டமான நட்புறவு வைத்து அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து உரையாடி வருவார்கள்.
அவ்வாறான உரையாடகளின் போது பல நேரங்களில் கைப்பேசியில் தோழர் அரப்பா அவர்களுடன் உரையாடி நலம் விசாரிக்கும் வாய்ப்பை தோழர்கள் எனக்கு வழங்குவார்கள். அவ்வளவு உணர்வோடு, பாசத்தோடு, தமிழர் உரிமை மீட்பு அக்கறையோடு அந்நேரங்களில் பேசுவார். நேரில் சந்தித்தும் நலம் விசாரித்துள்ளேன். துணிச்சலும் பண்புப் பக்குவமும் ஒரு சேர இணைந்திருந்த வார்ப்பு தோழர் நகைமுகன்!
திராவிட இயக்கத்தின் தென்தமிழ் நாட்டு புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான சிவகங்கை ஐயா சு. இராமச்சந்திரனார் அவர்களின் வழித் தோன்றலும், தமிழ்த்தேசியர் நகைமுகன் அவர்களின் அன்புத் தம்பியும் ஆவார் ஐயா அரப்பா!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இதழான தமிழர் கண்ணோட்டத்தின் தொடர்வாசகரும் ஆவார். அவ்விதழைத் தம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அறிமுகப்படுத்தினார் அரப்பா!
தமிழர் நாகரிகத்தின் தொன்மைப் பெருமிதம் சமகாலத் தமிழர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி என்ற நோக்கத்தில் ஐயா இராமச்சந்திரனார் குடும்பத்தார் பண்டையத் தமிழரின் சிந்து வெளி நாகரிக நகரான “அரப்பா” பெயரைத் தங்கள் வாரிசுக்குச் சூட்டினார்கள்.
அந்நோக்கம் சிதையா வண்ணம் செயல்பட்டு ஏராளமான தோழமை உறவுகளைப் பெற்றிருந்த தோழர் அரப்பா அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
27.12.2024
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்