<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இருபது தமிழர் இனப்படுகொலை – தமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்" தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Thursday, April 16, 2015

"இருபது தமிழர் இனப்படுகொலை – தமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்" --தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

தமிழகத்தைச் சேர்ந்த இருபது தொழிலாளிகள் ஆந்தி ரப் பிரதேசம் திருப்பதி மலைப் பகுதியில் சேசாச்சலம் காட்டில் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டினார்கள் என்று அம்மாநில வனத்துறையினராலும் காவல் துறையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதை இருபது தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறி, தமிழர் - தெலுங்கர் இனச்சிக்கலாகக் காட்டுவது சரியா?

சட்டவிரோதமாகச் செம்மரம் வெட்டும் கூலி வேலையில் ஆந்திரத் தொழிலாளிகள் ஈடுபடவே இல்லையா? அவர்களும் ஈடுபட்டுக் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திரத் தொழிலாளிகள் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையிலடைக்கிறார்கள். தமிழர்கள் அதே செயலில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்கிறார்கள். இதற்குமுன் ஆறு தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இப்போது பேருந்தில் வந்தவர்களை வழிமறித்து இறக்கி, கடத்திக் கொண்டு போய் வெவ்வேறு இடங் களில் பிடித்த தமிழர்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, கைகளைக் கட்டி நிற்க வைத்து அல்லது தொங்கவிட்டு சுட்டுக் கொன்றுள்ளார்கள். அவர்கள் தமிழர்கள் என்பதால் அத்தனை வெறுப்போடும், அத்தனை அலட்சியத்தோடும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எனவே இதனைத் தமிழினப் படுகொலை என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் ஊடகங்கள் இருபது தமிழர்கள் படுகொலை என்று மட்டுமே குறிப்பிடு கின்றன. இந்த அளவாவது ஊடகங்கள் குறிப்பிடுவது சரிதான்! தவறு அன்று.
இருபது தமிழர்களையும் கடத்திக் கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றார்கள் என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்?

பிணங்கள் கிடந்த முறையும் அவற்றின் உடல் மொழியும் மற்ற சில காரணிகளும் அவர்கள் பிடித்து வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட வர்கள் என்பதை உறுதி செய் கின்றன. கொல்லப்பட்டவர்க ளோடு பேருந்தில் பயணம் செய்த சேகரின் சாட்சியம் முகாமையானது. ஆறு பேரைப் பேருந்திலிருந்து இறக்கிக் கொண்டு சென்றுள்ளார் கள் ஆந்திரக் காவல்துறையினர்.

எல்லாப் பிணங்களும் மல்லாந்து கிடந்தன. எல்லாப் பிணங் களிலும் மார்பு, வயிறு முதலிய உடலின் முன்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருக்கின்றன. முதுகுப் பக்கம் துப்பாக்கிச் சூடு இல்லை. சுடுவதற்கு முன் தீக்கா யங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிணத்திற்கு அருகிலும் எப்பொழுதோ வெட்டப்பட்ட பழைய செம்மரம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. அம்மரங்கள் சிலவற் றில் வனத்துறையினர் எழுதிய பழைய எண்கள் (நம்பர்கள்) இருக் கின்றன. ஆந்திர வனத்துறையின் கிடங்கிலிருந்து எடுத்து வரப்பட் டவை அம்மரங்கள்.

செம்மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும்போது பார்த்துத் தடுத்த வனத்துறையினரையும் காவல்துறையினரையும் தமிழ்த் தொழிலாளிகள் கற்களால் தாக்கிய தால் சுட்டோம் என்று சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் டி.ஐ.ஜி. காந்தாராவ் கூறுகிறார். ஆனால் பிணங்கள் கிடந்த பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு செம் மரங்களே இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் போது பிணங்கள் கிடந்த பகுதியில் செம்மரங்களோ மற்ற மரங்களோ கூட இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தலைசிறந்த தடயவியல் அறிஞ ரான சந்திரசேகரன், பல காரணங் களைச் சுட்டிக் காட்டி, பிடித்து வைத்தோ அல்லது எங்கோ ஓரிடத் தில் இவர்கள் கும்பலாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ சுட்டுக் கொன்று, பின்னர் அந்த இடத் துக்குப் பிணங்களைத் தரதர வென்று இழுத்து வந்து போட்டி ருக்க வேண்டும் என்கிறார் (ஜூ.வி. 19.4.15). ஆந்திரப்பிரதேசக் குடியியல் உரிமைக் கழகமும் (ஏ.பி.சி.எல்.சி) தமிழகத் தொழிலாளிகளைப் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றி ருக்கிறார்கள் என்று கூறுகிறது.

அனைத்திந்திய மனித உரிமை ஆணையமும் இவை சட்ட விரோ தக் கொலைகள் என்பதற்கு முதல் நோக்குக் காரணங்கள் (றிக்ஷீவீனீணீ யீணீநீவீமீ) இருக்கின்றன. என்று கூறி ஆந்திர அரசிடமிருந்து அறிக்கை கோரி யுள்ளது. ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றமும், இருபது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசா ரணை நடத்த வேண்டும் என்றும் ஆந்திர அரசுக்கு ஆணையிட்டுள் ளது. இத்தனை ஆதாரங்கள் போதாதா 20 தமிழர்கள் பிடித்து வைத்துச் சுடப்பட்டார்கள் என்ப தற்கு!

ஆந்திரப் பிரதேச அரசு போலி மோதல் கொலைகளில் கைதேர்ந்த அரசு. அதிலும் சந்திரபாபு நாயுடு ஏராளமான மாவோயிஸ்ட்டுகளைப் போலி மோதல் கொலையில் தீர்த்துக் கட்டியவர். அவர் ஒரு மனித உரிமைப் பகைவர். அந்த அளவில் மனித உரிமை மீறலாகத் தானே தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதையும் பார்க்க வேண்டும். இதை இனப்படு கொலை என்று கூறுவது இட்டுக்கட்டிச் சொல் வது போல் இல்லையா?
தமிழகத் தொழிலாளிகள் செம் மரம் வெட்டக் கூலி வேலைக் குப் போனவர்கள். தங்கள் வறுமை யைப் போக்கக் கூடுதல் கூலி கிடைக்கிறது என்பதற்காக மரம் வெட்டப்போனவர்கள்.

செம்மரம் வெட்டும்போது- தமிழர்கள் எதிர்த்தாக்குதல் நடத்த வில்லை. பழைய குற்றவாளிகள் என்ற பெயரில் பிடித்துக் கடத்தி வைத்து சுட்டுக் கொன்றிருக் கிறார்கள். இவ்வாறான செம்மரம் வெட்டும் சட்டவிரோதச் செயல் களில் ஆந்திராவைச் சேர்ந்தவர் களும் இருக்கிறார்கள். அங்கும் பழைய குற்றவாளிகள் பட்டியல் இருக்கிறது. அவர்களில் யாரையும் போலி மோதலில் சுட்டுக் கொல்ல வில்லை.

அது மட்டுமன்று, செம்மரங் களை சீனா, சிங்கப்பூர் என்று பல வெளிநாடுகளுக்குக் கடத்தி ஆந்தி ரப்பிரதேச தெலுங்கு கொள்ளைக் கும்பல்காரர்கள் கோடி கோடியாய் பணம் சுருட்டுகிறார்கள். இத் தெலுங்குக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரையும் கைது கூடச் செய்யவில்லை சந்திரபாபு நாயுடு! இருபெரும் கடத்தல் கும்பலில் ஒரு கும்பல் சந்திரபாபு நாயுடுவுக்கு ரொம்பவும் நெருக்கமானது என்ற செய்தியும் வருகிறது. எனவேதான் இருபது தமிழர் சுட்டுக் கொல் லப்பட்டது தமிழினப் படுகொலை என்கிறோம். அன்று திருப்பதியில் தங்கி சுட்டுக் கொல்ல ஆணையிட் டிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

இருபது தமிழர் சுட்டுக் கொல் லப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?

ஆந்திரப்பிரதேச அரசே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோருவது, கொலையா ளியைத் தீர்ப்பளித்துக் கொள்ளக் கூறுவது போலாகும்.
ஆந்திரப் பிரதேச அரசே நடுவண் புலனாய்வுக் காவல்துறை யைக் (சி.பி.ஐ.) கொண்டு கொலை வழக்கு நடத்த வேண்டும் என்று சிலர் கோருகிறார்கள். அது உரிய பயன் தராது. ஏனெனில் நடுவண் புலனாய்வுக் காவல்துறைஇந்திய அரசின் கீழ் உள்ளது. இந்திய அரசைப் பொறுத்தவரை அது காங்கிரசு கையில் இருந்தாலும் பாசக கையில் இருந்தாலும் தமிழி னப் பகைப்போக்குடன் தான் நடந்து கொள்ளும். தமிழ் ஈழம், கச்சத்தீவு, காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு எனப் பலவற்றில் நடு நிலையாக செயல்படாமல் தமிழகத் திற்கு எதிராகவே செயல் பட்டு வருகிறது. இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள குறைந்த பட்ச பாதுகாப்பைக் கூட தமிழகத்திற்கு வழங்க இந்தியா ஒரு போதும் முன் வரவில்லை. நடுவண் அரசிடம் தமிழர் உரிமைச் சிக்கலை ஒப்படைப்பது நரிக்கு நாட்டாமை கொடுத்தது போல் ஆகிவிடும். நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்!

நமக்குள்ள ஓரளவு நம்பிக்கை தரும் வழி, உச்ச நீதிமன்றமே இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வைத்து, அது தன் கண்காணிப்பின் கீழ், வேறொரு மாநிலத்தில் இவ்வழக்கை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதுதான். 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் தனது மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றத் தில் நடத்துகிறதல்லவா அதுபோல் இருபது தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் நடத்த வேண்டும்.

அடுத்த மாநில வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரால் தமிழர் கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது? அது என்ன செய்ய வேண் டும்?
தமிழக அரசின் செயல்பாடு கொலைக் கொடியவன் சந்திரபாபு நாயுடுவுக்கு முதுகு சொரிந்து விடுவது போல் இருக்கிறது.

“ஐயோ நம் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் அயல் மண் ணில் அநியாயமாகச் சுட்டுக் கொல் லப்பட்டு விட்டார்களே“ என்ற பதைப்போ, பதற்றமோ தமிழக முதல்வர் பன்னீர்ச் செல்வத் திடமும் இல்லை. பன்னீர்ச் செல் வத்தின் முதலமைச்சர் செயலலிதா விடமும் இல்லை. பன்னீர்ச் செல் வம் சந் திரபாபு நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள்.

“ஆந்திராவின் செம்மரக் கடத்தல் ஒழிப்பு அதிரடிப் படை யினர் சேசாச்சலம் வனப் பகுதியில் மேற்கொண்ட நடவடிக் கைகள் காரணமாக இருபது பேர் குண்டடிபட்டு காயமடைந்து மரணமடைந்து விட்டதாக வரும் செய்திகள் என்னை மிகுந்த வருத்த மடையச் செய்துள்ளன” என்று கூறிவிட்டு, “அந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது போல் தெரிகிறது. எனவே நீங்கள் நம்பத் தகுந்த விசாரணையை விரை வாக நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

“சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்று சொல்லக்கூட தமிழக முதல்வருக்கு மனம் இல்லை. “மரணமடைந்து விட்ட தாக வரும் செய்திகள்’’ என்கிறார். அதிரடிப் படையினரின் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டை ”அதிரடிப் படையினர் சேசாச்சலம் பகுதியல் மேற் கொண்ட நடவடிக்கையால் காய மடைந்து - மரணமடைந்து விட்ட தாக வரும் செய்திகள்” என் கிறார். கண்டனம் தெரிவிக்க வில்லை. கவலையை மட்டும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாள்கள் கழித்து செயலலிதா வெளியிட்ட அறிக்கையும் இதே பாணியில் தான் இருந்தது.

இதைச் சுட்டிக் காட்டினால் அரசுக்கு அரசு நளினமாக நாகரி கமாகத்தான் எழுத வேண்டும் என்று அவர்கள் சொல்லக் கூடும். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் செயலலி தாவுக்குத் தண்டனை கொடுத்த போது, நீதிபதி குன்காவைக் கண்டித்து, இழிவுபடுத்தி அ.இ. அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடங்கி, அடிமட்டத் தொண்டர் வரை பேசிய பேச்சுகள் ஒட்டிய சுவ ரொட்டிகள் நீதித் துறையை எவ்வளவு கேவலப்படுத்தின.
அ.இ.அ.தி.மு.க. தலைமை தாங்கும் நகராட்சிகள் நீதிபதி குன்கா குறித்து மிக மோசமாக கண்டனத் தீர்மானங்கள் நிறை வேற்றின. சென்னை உயர் நீதிமன்றம் அந்நகராட்சித் தலை வர்களை மன்னிப்புக் கோரும்படி செய்தது.
“செத்தவன் யாரோ, எவரோ, எனக்கென்ன வேதனை” என்ற மனப்போக்கில் அ.இ.அ.தி.மு.க. தலைமை இருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு நிதி கொடுத்து அந்தப்பகுதி வாக்குகளை வளைத் துக் கொள்ளலாம் என்ற வாக்கு வேட்டை உணர்வைத் தவிர மனித நேய உணர்வு எள்ளளவும் அ.இ. அ.தி.மு.க. தலைமையில் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள சிறு சிறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் நடத்தும் போராட் டங்கள் வழியாக ஆந்திராவில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்.
அண்டை அயல் இனத்தாரால் அனைத்துத் திசையிலும் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், இதற்கு என்ன காரணம்?
தமிழர்கள் அரசியல் அனா தைகளாக இருப்பதுதான் அண்டை அயல் இனத்தாரால் தமிழர்கள் அனைத்துத் திசையிலும் தாக்கப்படு வதற்குக் காரணம்.

தமிழர்கள் சிக்கல் என்று வந்துவிட்டால் தனது சட்டக் கடமையைக் கூட செய்யாமல் நடுநிலை தவறி வஞ்சகமாக இந்திய அரசு ஒதுங்கிக் கொள்வதற்குத் தமிழர்கள் அரசியல் அனாதை களாக இருப்பதும் ஒரு காரணம்!

அண்டை அயல் இனத்தார் மற்றும் இந்திய ஆட்சியாளர்கள் ஆகியோர்க்கு தமிழ்நாட்டின் அரசியல் முகமாகத் தெரிவது செயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவர் முகம் மட்டுமே!

தமிழ் மக்களுக்காக வீதிக்கு வந்து போராடும் மற்ற தலைவர்கள் எல்லாம் அண்டை அயலார் மற்றும் நடுவண் அரசுப் பார்வை யில், பொருட்படுத்தத் தேவை இல்லாத சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின் போராட்டங்களை செயலலிதாவும் கருணாநிதியும் சமாளித்து நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக் கையில் வெளியார் இருக்கிறார்கள்.

செயலலிதாவும் கருணாநிதியும் தன்னல அரசியலுக்காகத் தமிழி னத்தைக் காட்டிக் கொடுக்கும் தலைவர்கள். தமிழ் மக்கள் இன உணர்வு, உரிமை உணர்வு மற்ற விழிப்புணர்வுகள் பெற்று எழுச்சி பெறுவது செயலலிதா - கருணாநிதி தன்னல அரசியலுக்கு வேட்டு வைத்து விடும்.
எனவே தமிழ் மக்கள் வீதிக்கு வரும் போதெல்லாம் அவ்விருவரும் ஆதரவு போல் நடித்து அப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வார்கள் அல்லது அரசு அதி காரத்தை வைத்து நசுக்குவார்கள்.

இருபது தமிழர்கள் அநியாய மாக ஆந்திராவில் சுட்டுக் கொல் லப்பட்ட அநீதியைக் கண்டித்து தி.மு.க. போராடவில்லை. அ.தி.மு.க. போராடவில்லை. அவற்றின் குட்டி வடிவமாக உள்ள தே.மு.தி.க. போராடவில்லை.
ஆந்திரப் பிரதேச தெலுங் கர்கள் ஒரு வேளை இது போல் தமிழகக் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால்- ஆந்திரம் பற்றி எரிந்திருக்கும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், காங்கிரசு, ஓய்.எஸ்.ஆர். காங்கிரசு எல்லாம் களம் இறங்கி இருக்கும். நடுவண் அரசும் தமிழக அரசை ஓடஓட விரட்டியிருக்கும்!

இருபது பேர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குக் கருணாநிதி எப்படி அறிக்கை விட்டார்? “கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்ப வங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கொரு முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடை பெற்றுள்ளது. இனியாவது இப்ப டிப்பட்ட சம்பவங்கள் நடைபெறா மல் இருக்க இரு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.

சட்டவிரோதத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆந்திரப் பிரதேசக் காவல்துறையினரை - வனத்துறை யினரைக் கண்டிக்கவில்லை கருணா நிதி. நடுவண் புலனாய்வு (சிபிஐ) வேண்டுமென்று கோரவில்லை. கொலை செய்த ஆந்திரப் பிரதேச அரசையும் கொலைக்கு உள்ளான தமிழகத்தின் அரசையும் சமமாக இணைத்துக் குறை கூறு கிறார் கருணாநிதி. எவ்வளவு தந்திரமாக ஆந்திராவைத் தமிழர்களின் சீற்றத்திலிருந்து தப்பிக்க வைக்க முயல்கிறார் கருணாநிதி!

அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் மறுநாள் அறிக்கை கொடுத்தார். அதில்“... தமிழக ஆந்திர எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் வந்தாலும் செயல்படாத இந்த பினாமி அரசு இந்த விவகாரத்தில் மிகவும் அலட்சியமான நிலையைக் கையாள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது” என்று கூறி தமிழக அரசைக் கண்டித்தார். ஆனால் ஆந்திர அரசைக் கண்டிக்கவில்லை.

“ஆந்திர அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டது என்பதுதான் என் வேதனை’’ என்று கூறி ஆந்திர அரசுக்காக வேதனைப் படுகிறார் ஸ்டாலின்.
இப்படிப்பட்ட அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் தலைமையின் கீழ் தமிழ்நாடு இருப்பது அண்டை அயலார் அனைவர்க்கும் தமிழர் களைத் தாக்க தமிழர் உரிமை களைப் பறிக்க மிகவும் வாய்ப்பாகப் போய்விட்டது.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கள் மற்றும் அவற்றின் பெரும் பான்மைச் செல்வாக்கு ஆகியவற் றால் தமிழ்நாடு இழந்த உரிமை களும் உயிர்களும் ஏராளம் ஏராளம்.

காவிரியில் கர்நாடகம் சட்ட விரோத அணைகள் கட்டுவதற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட உழவர்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் நடந்த வழக்கை எந்த நிபந்தனை யும் இன்றி, இந்திரா காங்கிரசுடன் கொண்ட கூட்டணிக்காக 1972 இல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இதனால் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகளைக் கட்டிக் கொண்டது கர்நாடகம். தமிழகம் காவிரி நீரை இழந்தது.
1974 இல் காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டார் அப்போதைய முதல்வர் கருணா நிதி. மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரிச் சிக்கலில் அக்கறை காட் டவே இல்லை.

1974 இல் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபோது ஒப்புக்கு எதிர்ப்புக் காட்டி ஒதுங்கிக் கொண்டார் முதலமைச்சர் கருணாநிதி. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்திருந்த எம்.ஜி.ஆர். கச்சத்தீவு போனதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மீட் டிட போராட்டம் நடத்தவில்லை.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் சொந்தப் பதவிச் சண்டை நடத்து வதையே தமிழக அரசியலாக மாற் றினார்கள். கச்சத்தீவை மீட்காத தால் 600 தமிழக மீனவர்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டார் கள். இன்றும் தமிழக மீனவர்கள் அவர்களால் தாக்கப்படுகிறார்கள். சிறைபிடிக்கப்படுகிறார்கள்.

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதி மன்ற வழிகாட்டல்படி நடுவண் அரசு தனது அரசிதழில் 1991 டிசம் பரில் வெளியிட்டது. அத னால் ஆத்திரமடைந்த கர்நாடகக் காங் கிரசு பங்காரப்பா ஆட்சி முழு அடைப்பு நடத்தியது. காலம் காலமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பலரைக் கன்னட வெறியர்கள் கொலை செய்தார்கள். ஆயிரக் கணக்கான தமிழர் வீடு களை எரித்தார்கள். தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடி னார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடிய அரங்குகளைத் தாக்கினார்கள். இரண்டு இலட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட் டிற்கு அகதிகளாக ஓடி வந்தார்கள். அப்போது முதலமைச்சர் செயல லிதா. செயலலிதாவோ, கருணா நிதியோ கர்நாடகத்தில் பாதிக் கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்த்து ஆறுதல் கூறப் போகவே இல்லை.

அசாமில் பீகாரிகள் தாக்கப் பட்டபோது அங்கேயே போய் பீகாரிகளுக்கு ஆறுதல் கூறினார் லல்லு பிரசாத். பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்து அசாமுக்கு இராணுவத்தை அனுப் பச் சொன்னார்.

இந்திய அரசு தலையிட்டு இந்த வன்முறையைத் தடுக்கவில்லை. அரசியல் அனாதையாகத்தான் தமிழினம் சீரழிந்தது. தமிழர் தன்னார்வ அமைப்பினர் கரூர் வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி பெங்களூர் வழக்கறிஞர் சுப்ரமணி யம் ஆகியோர் முயற்சியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து ஓரளவு இழப்பீடு வாங்கினர் கர்நாடகத் தமிழர்கள். புரட்சித் தலைவி, தானைத் தலைவர் என்ற பட்டங்கள் சுமந்து திரிந்த செயல லிதா - கருணாநிதி கட்சிகளால் எந்தத் தற்காப்பும் தமிழினத்திற்குக் கிடைக்கவில்லை.

2011 நவம்பர் மாதம் முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்க லில் மலையாளிகள் கேரளம் சென்ற தமிழர்களை, தமிழக ஊர்தி களைத் தாக்கினர். அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழர்களை அடித்து விரட்டினர். தோட்ட வேலைக்குச் சென்ற தேனி மாவட் டத் தமிழ்ப் பெண்கள் 400 பேரைக் கட்டாயமாகக் கடத்திக் காவலில் வைத்தனர் மலையாளிகள்.

அப்போது முதலமைச்சர் செயலலிதா. செயலலிதாவும் கருணாநிதியும் கடிதங்கள் எழுதிக் கொண்டு காலம் கடத்தினர். மலை யாளிகள் தமிழர்களைத் தாக்கு வதை நிறுத்தவில்லை. மலையாளி களின் இனவெறியாட்டத்தைத் தடுக்க இந்திய அரசு தலையிடவே இல்லை. தமிழர்களைக் காக்க வேண்டுகோள் அறிக்கை கூட வெளியிடவில்லை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்!

தமிழகத்தில் இன உணர்வு அமைப்புகள் மலையாளிகளுக்குப் பதிலடி கொடுத்த பின்தான் கேர ளாவில் தமிழர்களுக்கெதிரான மலையாளிகளின் இனவெறியாட் டம் ஓய்ந்தது. 2009 இல் இந்தி யாவின் பங்களிப்போடு சிங்கள அரசு ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது. இனப் படுகொலை செய்தது. ஒப்புக் குப் போர் நிறுத்தம் கோரி விட்டு ஒதுங்கிக் கொண்டனர் கருணா நிதியும், செயலலிதாவும். அப்போது முதலமைச்சர் கருணாநிதி!

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆந்திரத் தெலுங் கர்கள், - “தமிழர்கள் அரசியல் அனா தைகள்; அவர்களைச் சுட்டுக் கொன்றால் கேட்க நாதியில்லை. இந்திய அரசு உள்ளூர மகிழ்ச்சி யுறும். தமிழக வெகுமக்கள் கொந் தளித்து வீதிக்கு வராமல் தடுக்கும் வேலையைக் கருணாநிதியும் செயலலிதாவும் பார்த்துக் கொள் வார்கள்’’ என்று துணிச்சல் கொண்டு 20 தமிழர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

இனி, தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க, உயிர்களைக் காக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களுக்கும் நேராத அள வில் அண்டை அயலாரால் தமிழர் கள் உரிமைகளை இழந்திருக்கி றார்கள். உயிர்களை இழந்திருக்கி றார்கள். ஏழரை கோடித் தமிழர் கள் இங்கு வாழ்ந்த போதும் கன் னடர், மலையாளி, சிங்களர், தெலுங்கர் என எல்லா அண்டை அயலாரும் தாக்கிவிட்டார்கள். உரிமைகளைப் பறித்து விட்டார் கள்.

இந்த அண்டை அயலாரின் தாக்குதல் மற்றும் உரிமைப் பறிப்பி லிருந்தும் இந்திய அரசின் நயவஞ் சகத்திலிருந்தும் தமிழ் மக்களைக் காக்கக்கூடிய தமிழின உணர்வுள்ள அரசியல் தலைமை, செல்வாக் குள்ளதாக இன்னும் தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்ற உண்மை யைத் தமிழர்கள் உணர வேண்டும். அ.இ.அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் தமிழினத் துரோகக் கட்சிகள் என் றும், அவை தமிழினத்தை அட மானம் வைத்து, காட்டிக் கொடுத்து தங்கள் தன்னல வாழ்வைப் பெருக்கிக் கொள்ளும் தலைவர் களைக் கொண்ட கட்சிகள் என்ற நடைமுறை உண்மையை அடை யாளம் காண வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு தமிழினத் துரோகக் கட்சி களிலிருந்து விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்களும் சனநாயக ஆற்றல் களும் விலக வேண்டும். இவ்விரு கழகங்களும் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.
அதே வேளை உண்மையான தமிழினத் தற்காப்பு உணர்வும் கொள்கையும் கொண்ட ஊழல் அற்ற, நேர்மையான தமிழின அரசியல் ஆற்றல்களை வளர்க்க வேண்டும். இவ் வாறான உண்மைத் தமிழின அரசியல் ஆற்றல்கள் அ.இ.அ.தி. மு.க., தி.மு.க., காங்கிரசு, பா.ச.க. மற்றுமுள்ள அனைத் திந்தியக் கட்சிகள் எதனுடனும் கூட்ட ணியோ தொகுதி உடன் பாடோ வைத்துக் கொள்ளக் கூடாது.

இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத - தேர்த லில் பங்கெடுக்காத உண்மையான புரட்சிகரத் தமிழ்த் தேசிய ஆற்றலை அடையாளம் கண்டு அதனைத் தமிழர்கள் வளர்க்க வேண்டும்.

இந்திய தேசிய ஆதிக்க வாதம், திராவிடம் பேசும் தமிழினத் துரோகம் இரண்டிலிருந்தும் தமிழ் மக்கள் விடுபட வேண்டும். தமிழர் களாய் ஒருங்கிணைய வேண்டும்.
இருபது தமிழர் இனப்படுகொலை:

கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் தமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர். உரிமைகள் பறிக்கின்றனர்- ஏன்?
இந்தியாவை நம்பியதால் அனாதை ஆனோம். திராவிடத்தை ஏற்றதால் ஏமாளியானோம். தமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்!
***
ஆந்திர அரசை கண்டித்து தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்
ஆந்திராவில் அப்பாவிக் கூலித் தொழிலாளி களான தமிழர்கள் 20 பேரை, ஆந்திரக் காவல் துறை யினர், வனத்துறையினர் ஈவிரக்கமின்றி சுட்டு இனப் படுகொலை செய்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகமெங்கும் தமிழின உணர்வாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

தர்மபுரி
தர்மபுரியில், 08.04.2015 அன்று மாலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், ஆந்திர அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்வில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவப் படங்கள் கொளுத்தப்பட்டன. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க தர்மபுரி செயலாளர் தோழர் விஜயன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் திரு. செயப்பிரகாசம், பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் திரு. மாது, தே.மு.தி.க. பொதுக்குழு உறுப்பி னர் திரு. முனி ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகளைச் சேர்ந்தவர்களும், ஐயா தங்கவேல், தோழர்கள் முருகேசன் உள்ளிட்ட த.தே.பே. தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.
09.04.2015 அன்று காலை 11 மணியளவில், தர்மபுரி ஐதராபாத் அரசு வங்கி (ஷிஙிபி), தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்க தர்மபுரி அமைப்பாளர் தோழர் விஜயன் தலைமையேற்றார். தே.மு.தி.க. பொறுப் பாளர் திரு. முனி ஆறுமுகம், பா.ம.க. இளைஞரணி திரு. கார்த்தி, ம.தி.மு.க. தோழர் பச்சியப்பன் உள்ளிட்ட பிற அமைப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். கைதான தோழர்கள், தர்மபுரி நகர ஙி1 - காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

ஓசூர்
ஒசூரில் பேருந்து நிலையத்தில், 09.04.2015 அன்று காலை 11 மணியளவில், ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார். உருவபொம்மை எரித்த தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளஆனது. முடிவில், தொழிலாளர் பாதுகாப் புப் பேரவைச் செயலாளர் தோழர் மதியழகன், தமிழ்க் கலை இலக்கி யப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் கு.செம்பரிதி, தமிழக உழவர் முன்னணி இராயக் கோட்டைச் செயலாளர் தூருவாசன் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை
தஞ்சையில், 09.04.2015 அன்று காலை 11 மணியளவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவ பொம்மையை எரித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால் ராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா.வைகறை, நகரச் செயற் குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறையினரின் கெடுபிடிகளை மீறி, சந்திர பாபு நாயுடுவின் கொடும்பாவியை எரித்த, தோழர் களுக்கும் காவல்துறையினருக்கும், இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ள ஆனது. காவல்துறை யினர், அனைவரையும் கைது செய்வதாக அறிவித்த போது, “கைது செய்ய வேண்டுமெனில் ஆந்திரக் காவல் துறையினரைக் கைது செய்யுங்கள்’’ என தோழர்கள் முழக்கமெழுப்பவே, காவல்துறையினர் அனைவரையும் வாகனங்களிலிருந்து இறக்கி விடு வித்தனர்.

பெண்ணாடம்
பெண்ணாடத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் கு. மாசிலாமணி தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் 08.04.2015 மாலை 5 மணியளவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மை கொளுத்தப்பட்டது. அதன்பின் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் வித்யா, திருவள்ளுவர் தமிழ் மன்றத்தினர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை
மதுரை தெற்கு மாசி வீதியிலுள்ள ஆந்திரா வங்கி, 09.04.2015 காலை 11 மணியளவில், தமிழின உணர் வாளர்களால் முற்றுகையிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ. இராசு, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம், தோழர் பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க.), தோழர் செந்தில் குமார் (தமிழர் களம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்
சிதம்பரத்தில், 09.04.2015 மாலை, தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் கு. சிவப்பிரகாசம் தலைமையில், ஆந்திர முதல்வர் உருவ பொம்மையை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் எரித்தனர்.
போராட்டத்தின்போது, குழந்தைகளுடன் பெண்கள் என 20 தோழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் தோழர் எல்லாளன், தோழர்கள் முருகவேள், கலைச்செல்வம், செயராமன், சரண் ஆகிய 8 தோழர்கள் மீது மட்டும், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 143, 188, 285 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தோழர்களை கடலூர் நடுவண் சிறையில் அடைப்பதற்கான முயற்சியில் இறங்கினர். பின்னர், இரவு 9:30 மணியளவில், தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

சென்னை
சென்னை, அசோக் நகர் நூறடிச் சாலையில் இயங்கி வரும் ஆந்திர வங்கி, தமிழ்த் தேசியப் பேரியக் கம் சார்பில் 10.05.2015 காலை 11 மணியளவில் முற்றுகை யிடப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தின்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையும், உருவப்படங்களும் கொளுத்தப் பட்டு, கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான எரிடேஜ் நிறுவனப் பொருட்களைப் புறக் கணிக்க வேண்டுகோள் விடுக்கும் விதமாக, எரிடேஜ் பால் பாக்கெடுகள் நடுரோட்டில் போட்டு உடைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையேற்றார். த.தே.பே. தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், தென் சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்கு மரன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம் -- திருச்செந்தூர் வட்டம் - குரும்பூர் கடை வீதியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் 10.04.2015 மாலை ஆந்திர முதல்வர் உருவப் படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் துரை. அரிமா உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.

திருச்சி
திருச்சியில், 10.04.2015 அன்று காலை 11 மணியளவில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம் மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன், தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் உறுப்பினர் தோழர் இராசாரகு நாதன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

குடந்தை
குடந்தையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கா. விடுதலைச்சுடர் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் 11.04.2015 காலை 10.30 மணியளவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மை கொளுத்தப்பட்டது. அதன்பின் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், சாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி மதிய ரசன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை
கோவை பந்தைய சாலை காவல் நிலையம் முன்பு, 11.04.2015 மாலை 5 மணியளவில், நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தை, தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைத் தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோப்மா கருப்பசாமி தலைமை யேற்றார். மறுமலர்ச்சி நாம் தமிழர் கட்சி, தேவேந்திர குல வேளாளர் பேரவை, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், தோழர்கள் திருவள்ளுவன், இராசேசுக்குமார், மாரியப்பன், சுகந்தி உள்ளிட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
**
ஆந்திராவில் தமிழர் படுகொலையைக் கண்டித்து தஞ்சையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்!
ஆந்திர வனப்பகுதியில் அப்பாவித் தமிழர் களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன் அவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும் தஞ்சையில், 11.04.2015 மாலை அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 05.01.2015 அன்று, தமிழர் தேசிய முன்னணி சார்பில், தமிழர் உற்பத்தி செய்யும் பொருட்களை தமிழர் கடைகளிலேயே வாங்குவோம் என்ற முழக்கத் தோடு நடத்திய தெருமுனைக் கூட்டத்தில் வழங்கிய துண்டறிக்கையின் அடிப்படையில், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 153-அ (இன, மொழி, மத அடிப்படையில் விரோத உணர்ச்சியைத் தூண்ட முயற்சித்தல்), 153-ஆ (ஒருவர் சமய, மொழி, இனக் குழுவின் உறுப்பினர் என்ற வகையில், இந்தியாவின் குடிமகன் என்ற முறையில் அவருக்குள்ள உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
கருத்துரிமையும், பேச்சுரிமையையும் பறிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் போடப்பட்டிருக் கும் இவ்வழக்கைத் திரும்பப் பெறக்கோரியும், ஆந்திராவில் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில், ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், ஐ.ஜே.கே.மாவட்டத்தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், ம.நே.ம.க. மாநில பொறுப்பாளர் கலந்தர், மா.லெ. மக்கள் விடுதலை தலைவர் அருணாச்சலம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
 
(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 ஏப்ரல் 16 இதழில் வெளியானது).

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்