<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"நாடாளுமன்றக் கூட்டணிக்காக மேக்கேதாட்டு அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி! துரைமுருகன் அறிக்கையால் அச்சம்!"--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Thursday, June 1, 2023


நாடாளுமன்றக் கூட்டணிக்காக மேக்கேதாட்டு

அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி!
துரைமுருகன் அறிக்கையால் அச்சம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================


கர்நாடக மாநிலத்தின் காங்கிரசுத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், 30.05.2023 அன்று பாசனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, மேக்கேதாட்டில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும் என்றும், இதற்காக ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடகக் காங்கிரசு அமைச்சரவை முதல்வர் சித்தராமையா தலைமையில் இதற்கு முன் 2013 – 2018இல் ஆட்சியில் இருந்தபோது, மேக்கேதாட்டு அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து, இந்திய ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. எதிர்க்கட்சியாய் இருக்கும்போது, 2022 டிசம்பரில் மேக்கேதாட்டு அணையைப் பா.ச.க. ஆட்சி உடனே கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஒரு மாதம் பெருந்திரள் பரப்புரைப் பயணம் நடத்தியவர் டி.கே. சிவக்குமார்.

அண்மையில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கையில், இதே காங்கிரசுக் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் 9,000 கோடி ரூபாயில் விரைந்து மேக்கேதாட்டு அணையைக் கட்டி முடிப்போம் என்று அறிவித்திருந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக் கட்சி தனது மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தொடங்க அறிவிப்புச் செய்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டுவிட்டால் மிகை வெள்ள நீர் கூட மேட்டூருக்கு வராமல் தேக்கி விடுவார்கள்.

டி.கே. சிவக்குமார் அறிவிப்பிற்கு, எதிர்வினை ஆற்றி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 31.05.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில், டி.கே. சிவக்குமாரின் தேர்தல் வெற்றிக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறலாம் என்றிருந்தேன். இருந்தாலும் இப்போது வாழ்த்துக் கூறிக் கொள்கிறேன் என்று தொடங்கியுள்ளார்.

மேலும், “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை சிவக்குமார் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மேக்கேதாட்டு பற்றிய முழு விவரத்தை இன்னும் அதிகாரிகள் அவருக்கு சொல்லி இருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன்” என்று துரைமுருகன் சிவக்குமாரைத் தடவிக் கொடுக்கிறார். மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணைகட்டுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும், பாசமழை பொழிகிறார் துரைமுருகன்!

தேர்தல் கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. தமிழர்களின் உயிர் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையை இழந்து விடுமோ என்ற பேரச்சம் டெல்டா மாவட்டங்களின் உழவர்களிடையே எழுந்துள்ளது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான், இந்திய அரசின் ஒப்புதலே பெறாமல் சட்ட விரோதமாக 1969 – 1972 காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி காவிரியின் குறுக்கு கட்டிமுடித்தது. அப்போது இந்திரா காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. அந்த வரிசையில் இப்போது மேக்கேதாட்டு அணையும் கட்டப்பட தி.மு.க. ஆட்சி மறைமுகமாக உடந்தையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசு தன் பக்கம் இருக்கும் என்ற உறுதியும், தி.மு.க. ஆட்சி பெரிய அளவு எதிர்ப்புக் காட்டாது என்ற நம்பிக்கையும் கர்நாடகக் காங்கிரசு ஆட்சிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்கள் காவிரியைக் காக்க கட்சி கடந்து ஒருங்கிணைந்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வருமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்