<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" *தோழர் வைகை மு.கருப்பையா அவர்கட்கு வீரவணக்கம்!*" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் *பெ.மணியரசன்*

Wednesday, November 22, 2023


 *தோழர் வைகை மு.கருப்பையா அவர்கட்கு வீரவணக்கம்!*

=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் *பெ.மணியரசன்*
=============================================


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மூத்த தோழர் வைகை மு.கருப்பையா அவர்கள் இன்று (22.11.2023) காலை காலமான செய்தி பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் தருகிறது. பல்லாண்டு சிறை வாழ்க்கையில், மார்க்சிய – லெனினிய அரசியல் பயின்று, புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டாக தோழர் தியாகு, தோழர் லெனின் போன்ற தோழர்களுடன் சி.பி.எம் கட்சியில் இணைந்து சிறையிலிருந்து வெளியில் வந்தவர் தோழர் கருப்பையா! தமிழ்த்தேசியத் திசைவழியை ஏற்ற தோழரானார். பின்னர் அவரும் அவருடைய நெருங்கிய தோழர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் இணைந்தனர்.
உறுதிமிக்கத் தமிழ்த்தேசியராக சமூக நிகரமைச் சமநிலையாளராக – இளந்தோழர்களுக்கு நல்வழிகாட்டியாக விளங்கினார். திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கையில் வரும் கூடுதல் சுமைகளைச் சுமந்தார். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தோழர்களுடன் உற்சாகமாகப் பழகுவார்; தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஊக்குவிப்பார்.
அன்புத் தோழர் மு.க.அவர்களின் மறைவு தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தோழர் வைகை மு. கருப்பையா அவர்களுக்கு வீரவணக்கம்! அவரின் சக தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

Labels: , ,

"“விளை நிலங்களைப் பறிக்காதே” என்றால், குண்டர் சட்டம் பாய்வதா?" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Friday, November 17, 2023


“விளை நிலங்களைப் பறிக்காதே” என்றால்,

குண்டர் சட்டம் பாய்வதா?
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
======================================


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் சிப்காட் தொழிற்சாலைகளின் பெருநிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்த மூன்றாம் கட்டமாக 3,174 ஏக்கர் நெல், கரும்பு, வாழை விளையும் நன்செய் நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கும் பெரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. தங்களின் தாய் போன்ற விளை நிலங்களைத் தொழிற்சாலைகள் கவ்விக் கொள்வதை உழவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்நிலங்கள் 11 ஊராட்சிக் கிராமங்களில் அடுத்தடுத்து இருக்கின்றன. “மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம்” என்ற உழவர்கள் கூட்டமைப்பு கடந்த 125 நாட்களாகத் தொடர்ந்து, மக்கள் திரள் காத்திருப்பு அறப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த உழவர்களில் முன்னோடிகளாக உள்ள 22 பேரை 4.11.2023 அன்று கைது செய்து, பிணை மறுத்து, வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைத்துள்ளது தி.மு.க. ஆட்சி!

இந்த 22 பேரில் ஏழு பேரைக் குறிவைத்து, அவர்கள் மீது 16.11.2023 அன்று கொடிய குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி உள்ளது தி.மு.க. ஆட்சி! விசாரணை இல்லாமல், பிணை இல்லாமல், முதல் கட்டமாக ஓராண்டு வரை சிறையில் அடைத்து வைக்கலாம். அரசு விரும்பினால் அதன் பிறகு, மறு ஆணை போட்டு, சிறை அடைப்பை நீட்டித்துக் கொள்ளலாம்! இதுதான் சமூக விரோதிகளுக்கான குண்டர் சட்டம்! அப்படி என்ன சமூக விரோத, நாட்டு விரோத, மக்கள் விரோதக் குற்றங்களை இந்த ஏழு உழவர்களும் செய்து விட்டார்கள்?

உழவு நிலத்தைப் பறித்து, கார்ப்பொரேட் முதலாளிகளுக்குக் கொடுக்காதே என்று குரலெழுப்பி அறப் போராட்டம் நடத்தியது குற்றமா? தி.மு.க. ஆட்சி கார்ப்பொரேட் முதலாளிகளுக்குக் கங்காணி வேலை பார்த்து, உழவு நிலங்களை அழிக்கலாமா?

வரம்பற்ற தொழிற்சாலைப் பெருக்கம் வேளாண்மை மற்றும் தொழிற்சாலை - சமன்பாட்டைச் சீர்குலைத்துவிடும். சுற்றுச்சூழலை மாசாக்கி, மக்கள் வாழ முடியாத நிலையை உண்டாக்கும் என்ற உண்மையை வட அமெரிக்காவின் டெட்ராய்டு நகரத்திலிருந்தும், மேற்கத்தியத் தொழில் வீக்க நாடுகளிலிருந்தும் இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
டாட்டாவின் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்காக மேற்கு வங்கம் சிங்கூரில் உழவர் நிலங்களைப் பறித்ததனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் எழ முடியாத தோல்வியை அப்போது ஆட்சியிலிருந்த சி.பி.எம். கட்சி அடைந்தது. அதைத் தி.மு.க. ஆட்சியாளர்கள் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் எங்கோ செய்யாற்றுப் பகுதியில் வேளாண் நிலப்பறிப்பு நடக்கிறது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. நாளைக்கு நமக்கும் வரும் என்ற எச்சரிக்கையுடன் செய்யாறு உழவர்கள் மீது தி.மு.க. ஆட்சி நடத்தும் மனித உரிமைப் பறிப்புகளைக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டும்.

தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும். குண்டர் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள உழவர் தலைவர்கள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஊத்தங்கரை – அத்திப்பாடி அருள் ஆறுமுகம், செய்யாறு வட்டம் தேத்துறை பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், மணிப்புரம் சோழன், மேல்மா திருமால், நர்மாபள்ளம் மாசிலாமணி, குரும்பூர் பாக்கியராசு ஆகிய ஏழு பேரையும், இதரச் சட்டங்களில் சிறைகளில் உள்ள எஞ்சிய 15 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , ,

"திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்துள்ள பொய்கைக் குளத்தை அரசு மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, November 3, 2023


திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்துள்ள

பொய்கைக் குளத்தை அரசு மீட்டு
மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
===================================


தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் உள்ள காசி மடாதிபதி அதிபர் முத்துக்குமார சாமி அவர்களின் நிர்வாகம், அவ்வூர்ப் பொய்கைக் குளம் என்ற பொதுக் குளத்தை ஆக்கிரமித்து, அக்குளத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பி பொது மக்கள் பயன்பாட்டைத் தடுத்துள்ளது. இந்த மதில் சுவரை இடித்து, வழக்கம் போல் மக்கள் பயன்பாட்டிற்குக் குளத்தைத் திறந்துவிட வேண்டும் என்று ஊர் மக்கள் கோரி வருகின்றனர். அவ்வூரைச் சேர்ந்தவரும் தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் அவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், திருவிடைமருதூர் வட்டாட்சியர், திருப்பனந்தாள் பேரூராட்சித் தலைவர் எனப் பலருக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கடிதம் அனுப்பி இருக்கிறார்; அதிகாரிகளிடம் நேரிலும் பேசியுள்ளார்.

ஆனால், திருப்பனந்தாள் காசி மடாதிபதி அவர்கள் அப் பொய்கைக் குளம் தங்களின் மடத்திற்குச் சொந்தமானது என பிடிவாதமாகக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அக்குளத்தைச் சுற்றி மதில் எழுப்பி ஊர் மக்கள் பயன்படுத்தாமல் தடுத்துவிட்டார்.

இதுபற்றி 12.09.2023 அன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் முன்னிலையில் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் தரப்பினர் மற்றும் திருப்பனந்தாள் காசி மட மேலாளர் நாதன், திருப்பனந்தாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோரிடையே நடந்த அமைதிப் பேச்சின்போது, மேற்படி பொய்கைக் குளம் மற்றும் அதையொட்டிச் செல்லும் இடும்பன் சாலை ஆகியவை வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு என்று குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் திருப்பனந்தாள் பேரூராட்சியினர் மேற்படி குளத்தை கைப்பற்றி, அதைப் பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவானது. இம்முடிவினை எழுத்து வடிவில் அறிவித்து, அதில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுள்ளார்.

ஆனால், ஒரு மாதம் (12.10.2023) கடந்தும் நவம்பர் மாதம் பிறக்கும் வரை பொய்கைக் குளம் மற்றும் இடும்பன் சாலை ஆக்கிரமிப்பை காசி மட நிர்வாகம் காலி செய்யவில்லை. அரசு அதிகாரிகளும், பேரூராட்சியும் தலையிட்டு மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இந்நிலையில், மேற்படி ஆக்கிரமிப்பு மதில் சுவர்களை யாரோ சிலர் இடித்துள்ளார்கள். ஒருவரைக் காவல்துறைக் கைது செய்யதுள்ளது. வருவாய்த்துறையும், பேரூராட்சியும் ஒப்புக் கொண்டு, கையெழுத்துப் போட்ட 12.09.2023 முடிவுப்படி ஆக்கிரமிப்புச் சுவர்களை ஏன் அகற்றவில்லை? இது அரசுத் தரப்பின் குறைபாடு! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படுகிறது.

பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய குளத்தையும் சாலையையும் திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்திருப்பதும், அரசுத் தரப்பினர் அதைக் காலி செய்துத் தர கூறியும் ஆக்கிரமிப்பைத் தொடர்வதும் எல்லா வகையிலும் அநீதி! சிவநெறிக்கும் புறம்பானது.

சிவநெறிச் சான்றோர்கள் “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று சேக்கிழார். பெரிய புராணத்தில் கூறுகிறார். அப்பர் பெருமான் அப்படித்தான் வாழ்ந்தார். ஆனால் திருப்பனந்தாள் காசிமடம் ஆணவம் பிடித்த ஜமீன்தார் போல் நடந்த கொள்வது சிவநெறிக்கு முற்றிலும் முரணானது.

தமிழ்நாடு அரசு தலையிட்டு, மேற்படி திருப்பனந்தாள் பொய்கைக் குள ஆக்கிரமிப்பை நீக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்