" நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பை நீடிக்கச் செய்வதே ”நிரந்தரப் புரட்சியா?”-------- பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Wednesday, March 13, 2024
நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பைநீடிக்கச் செய்வதே ”நிரந்தரப் புரட்சியா?”
===================================
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
பா.ச.க. பாசிசத்தை வீழ்த்த, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ச.க.வை தோற்கடிக்க, காங்கிரசு – தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு “முற்போக்காளர்கள்”, தமிழ்நாட்டு இடதுசாரிகள் “போர் வியூகம்” வகுத்துப் பரப்புரை செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டினால் மட்டும் முடிகிற செயல் அன்று! தமிழ்நாட்டில் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 39 பேர் மட்டுமே! புதுவையின் ஒருவரைச் சேர்த்தால் வெறும் 40 பேர் மட்டுமே! இந்தியாவின் மொத்த மக்களவை உறுப்பினர்கள் 543 பேர்! இதில் 225 பேர் இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த கால நிகழ்வொன்றைப் பார்ப்போம். காங்கிரசுத் தலைவி இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தார். அவர் 1975இல் இந்திய அரசமைப்புச் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, தமது எதேச்சாதிகாரத்திற்காக நெருக்கடி நிலையை அறிவித்தார். கருத்துரிமை பறிக்கப்பட்டது மட்டுமின்றி, குடிமக்களின் உயிர் வாழும் உரிமையும் பறிக்கப்பட்டது. அவ்வாறு அடிப்படை உரிமைகளைப் பறித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.
பொதுக்கூட்டம் நடத்த முடியாது; ஊர்வலம் போக முடியாது. தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு வேலை நிறுத்தம் செய்ய முடியாது; ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. நாளேடுகள், இதழ்கள் அனைத்தையும் அச்சுக்கு முன் தணிக்கை அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற வேண்டும். இந்திய அரசை விமர்சித்து எதுவும் எழுதத் தடை!
அப்போது, 1976இல் நடைபெற வேண்டிய மக்களவைத் தேர்தலை நடத்த மறுத்தார் இந்திரா காந்தி. எப்போது தேர்தல் வரும் என்று யாருக்கும் தெரியாது. தமிழ்நாடு அரசுக்கும் 1976இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டைக் கூறி, 1976 சனவரி 31இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தார்.
வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இந்திரா காந்தி 1977ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் மக்களவைத் தேர்தலை நடத்தினார். ஆனால், இந்திரா காங்கிரசு படுதோல்வி அடைந்தது.
மொத்த மக்களவைத் தொகுதிகள் 543இல் இந்திரா காங்கிரசு 154 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி 7 தொகுதிகளிலும் வென்றன. சனசங்கம் (இப்போது பா.ச.க.), பிரசா சோசலிஸ்ட்டுக் கட்சி, சரண் சிங்கின் லோக் தளம், செயப்பிரகாசு நாராயணனின் அமைப்பு முதலியவை இணைந்த சனதாக் கட்சி 295 தொகுதிகளிலும், சனதாவின் கூட்டணிக் கட்சியான நிறுவனக் (ஸ்தாபனக்) காங்கிரசுக்கு 3 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது.
இந்திரா காந்தியும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் படுதோல்வி அடைந்தனர். மொரார்ஜி தலைமை அமைச்சர் ஆனார்.
நெருக்கடி நிலையை அறிவித்து சனநாயகப் படுகொலை செய்த இந்திரா காந்திக்கு வடமாநிலங்கள் தண்டனை வழங்கின. ஆனால், தென் மாநிலங்கள் இந்திரா காங்கிரசுக்கு அதிகத் தொகுதிகளில் வெற்றிகளைத் தந்தன.
தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரசுடன் எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க. கூட்டணி. அ.தி.மு.க. 17 தொகுதிகளிலும் இந்திரா காங்கிரசு 14 தொகுதிகளிலும், இந்திராக் காங்கிரசு – அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த சி.பி.ஐ. 3 தொகுதிகளிலும் வென்றன.
இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆதரவுக் கூட்டணிகளுக்கு 34 தொகுதிகளில் வெற்றி – இந்திரா காந்தி சர்வாதிகார எதிர்ப்புக் கூட்டணியில் தி.மு.க. – 1 தொகுதி (வடசென்னை – ஆசைத்தம்பி), நிறுவனக் காங்கிரசு (சிண்டிகேட்) – 3 தொகுதிகள், சனதாக் கட்சி – 1 தொகுதி. ஆக மொத்தம் சர்வாதிகார எதிர்ப்புக் கூட்டணி – 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. புதுச்சேரியில் அ.தி.மு.க. வென்றது.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் இ. காங்கிரசு 11, இதன் கூட்டாளி சி.பி.ஐ. – 4 தொகுதிகளில் வென்றது.
கர்நாடகத்தில் மொத்த மக்களவைத் தொகுதிகள் 28. இந்திரா காங்கிரசு 28இல் போட்டியிட்டு, 26 தொகுதிகளில் வென்றது. சி.பி.எம். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு, 41 தொகுதிகளில் வென்றது இந்திராக் காங்கிரசு!
மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகளைப் பறித்து, சர்வாதிகார ஆட்சி நடத்திய இந்திராக் காங்கிரசுக்குத் தென் மாநிலங்கள் பெரு வெற்றி கொடுத்தன. வட மாநிலங்கள் படுதோல்வி கொடுத்தன. இந்தியா ஒரு மொழி, ஒரு பண்பாடு கொண்ட ஓர் இன மக்களின் ஒரு தேசமன்று; இது ஒரு துணைக் கண்டம்! இதில் பல்வேறு மொழிகள், சமூக அமைப்புகள் கொண்ட பல்வேறு இனங்கள் வாழ்கின்றன. பல்வேறு சமூக நிலைகள் இருக்கின்றன.
இந்தப் பன்முகம் கொண்ட இந்தியாவை ஆரிய இந்துத்துவ – இந்தி முகமும் மூளையும் கொண்ட வடவர்கள் ஆள்கிறார்கள். தமிழர்களைப் போன்ற தனிச் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்பட்ட இனங்கள்! இந்த ஒடுக்குமுறை காங்கிரசு ஆண்டாலும் தொடரும், பா.ச.க. ஆண்டாலும் தொடரும். வடநாட்டுத் தலைமை கொண்ட வேறொரு கட்சி வளர்ந்தாலும் இது தொடரும்!
இப்பொழுது பா.ச.க. பாசிசத்திற்கு வருவோம்! வர இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ச.க.வைத் தோற்கடிக்கலாம். ஆனால், எஞ்சிய வட மாநிலங்களில் - இதரத் தென் மாநிலங்களில் பா.ச.க. தோற்கடிக்கப்படுமா என்பதற்கு உறுதி கூற முடியாது. அப்போதைய சர்வாதிகார இந்திரா காந்தியை 1977 மக்களவைத் தேர்தலில் இந்தி மாநிலங்கள் தோற்கடித்தன. ஆனால், தென் மாநிலங்கள் வெற்றி பெறச் செய்தன.
மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகள் 543-இல் தென் மாநிலங்களில் உள்ள மொத்தத் தொகுதிகள் 129 மட்டுமே! அதிலும் தமிழ்நாட்டில் புதுவையைச் சேர்த்து 40 மட்டுமே!
ஒருவேளை வரும் மக்களவைத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்று பெரும்பான்மை அடிப்படையில், ஆட்சி அமைத்தால், இந்துத்துவமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும்போது, தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் என்ன செய்யும்? பா.ச.க. பாசிசத்துடன் கூட்டணி சேர போட்டி போடும்!
இந்திரா காந்தி 1975இல் செயல்படுத்திய சனநாயகப் பறிப்பு எதேச்சாதிகாரத்தை அதன் முற்பகுதியில் எதிர்த்த தி.மு.க., பின்னர் போகப்போக அதனுடன் இணக்கமாகப் போக முயன்றது. இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் அட்டூழியம் மிகமிக அதிகம். அரசுப் பதவியில் இல்லாத அந்த நபரிடம் தான் உண்மையான அதிகாரம் இருந்தது. அவர் ஐந்தம்சத் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து, ஆட்சியாளர்களைச் செயல்படுத்தச் செய்தார்.
கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு என்பது சஞ்சய் காந்தியின் ஐந்தம்சத் திட்டத்தில் ஒன்று. நெருக்கடி நிலை ஆட்சிக் காலத்தில் வடநாட்டில், தில்லியில் சஞ்சய் காந்தி செய்த அட்டூழியங்கள் இந்திரா காந்தியின் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. அப்படிப்பட்ட சஞ்சய்காந்தியின் ஐந்தம்சத் திட்டத்தை ஆதரித்து 1976இன் பிற்பகுதியில் வெளிப்படையாக முரசொலியில் எழுதினார் கருணாநிதி!
இப்பொழுதும் நரேந்திர மோடி ஆட்சியுடன் மறைமுகமாக நல்லுறவைப் பேணுகிறார் மு.க. ஸ்டாலின் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்து கொண்டுள்ளன.
மாநிலத் தன்னாட்சி பற்றி மு.க. ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் காங்கிரசும் தி.மு.க.வும் மாநிலத் தன்னாட்சி குறித்துக் கூட்டறிக்கை வெளியிடுவதில்லை. அவர்கள் வென்று ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி நீக்கப்பட்டு, மாநிலங்கள் விற்பனை வரி விதித்து வசூலிக்கும் உரிமை வழங்கப்படும். நீட் தேர்வு முற்றாக ஒழிக்கப்படும். தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் மாநில அரசுகளைப் புறக்கணித்துச் செயல்படும் என்.ஐ.ஏ. காவல்துறை கலைக்கப்படும். கல்வி அதிகாரம் முழுவதும் மீண்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படும். வேளாண்மை, மருத்துவம் போன்ற துறைகளில் இந்திய அரசுக்கு அதிகாரம் இருக்காது. பா.ச.க. ஆட்சி நீக்கிய சம்மு – காசுமீர் அரசமைப்புச் சட்ட சிறப்புரிமை உறுப்பு 370 மீண்டும் அம்மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டு, சம்மு காசுமீர் மீண்டும் தன்னாட்சி மாநிலம் ஆக்கப்படும், இந்திமயமாக்கப்பட்ட கொடிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் – மூன்றும் பழைய நிலைக்கு மீட்கப்படும், பா.ச.க. கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) நீக்கப்படும், இந்தித் திணிப்பு – சமற்கிருதத் திணிப்புக் கைவிடப்படும், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தித் திணிப்பு உறுப்புகள் நீக்கப்படும், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் இந்திய ஆட்சி மொழிகள் ஆக்கப்படும், உச்ச நீதிமன்றம் – உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தன்னாட்சி உரிமை காக்கப்படும், தேர்தல் ஆணையத்தை இந்திய ஆளுங்கட்சியின் கையடக்க அமைப்பாக நரேந்திர மோடி மாற்றியுள்ள அவலம் நீக்கப்படும், இப்போது உச்ச நீதிமன்றத்திற்குள்ள தன்னாட்சி உரிமை போல் தேர்தல் ஆணையத் தலைமை ஆணையர்கள் தேர்வு தன்னாட்சி அதிகாரம் உள்ளதாக மாற்றி அமைக்கப்படும் என்பன போன்ற கூட்டாட்சித் தன்மையும் சனநாயகத் தன்மையும் கொண்ட செயல் திட்டங்களைத் தங்களின் வேலைத் திட்டமாக மு.க. ஸ்டாலினும், ராகுல் காந்தி அல்லது மல்லிக்கார்ச்சுன கார்கே ஆகியோர் கூட்டறிக்கையாக வெளியிட வேண்டும்.
மேற்கண்ட திட்டங்களைக் கொண்ட கூட்டறிக்கையை காங்கிரசு – தி.மு.க. கூட்டணி வெளியிட வேண்டும் என்று பா.ச.க. பாசிச எதிர்ப்பு சனநாயகச் சிந்தனையாளர்கள், சனநாயகம் கோரும் கட்சிகள், அமைப்புகள் வெளிப்படையாகக் கோரிக்கை வைத்து அவர்கட்கு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறான குறைந்த அளவுக் கூட்டறிக்கையைக் கூட இவர்கள் கோராதது ஏன்?
மாநில ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியானது. ஆனால், அவ்வாறு கூட்டறிக்கை கோர உங்களுக்குத் தயக்கம் இருந்தால் மாநில ஆளுநரைத் தலைமை அமைச்சர், தொடர்புடைய மாநில முதலமைச்சர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலினும், மல்லிகார்ச்சுன கார்கேயும் கூட்டறிக்கை விட வேண்டும் என்று பா.ச.க. பாசிச எதிர்ப்புக்காகத் தி.மு.க. – காங்கிரசுக் கூட்டணியை ஆதரிப்போர் கோர வேண்டும்.
இவ்வாறு எந்தக் கோரிக்கையும் நிபந்தனையும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பரப்புரை செய்வது வழக்கம் போல், வெற்று ஆரவாரமாகவே முடியும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட சிலர் யார் வெல்ல வேண்டும் என்பதை விட யார் வெல்லக் கூடாது என்பதே முதன்மையான இலட்சியம் என்று பேசி வருகின்றனர். இது திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக எல்லாத் தேர்தல்களிலும் கொடுத்து வரும் முழக்கம்தான்!
அவருக்கு நேரடியாக வைக்கக்கூடிய ஆக்க வழிப்பட்ட கொள்கைத் திட்டங்கள் இல்லாமல் இருக்கலாம். சனநாயக – இடதுசாரிச் சிந்தனையாளர்களுக்கும் சனநாயகக் காப்பு மாற்றுத் திட்டங்கள் இல்லையா?
காங்கிரசுக் கூட்டணி வென்று விட்டால்?
---------------------------------
காங்கிரசு, தி.மு.க. கட்சிகள் உள்ள இண்டியா கூட்டணி வென்று ஆட்சி அமைந்தால் அல்லது காங்கிரசுக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைத்த பின், அது இந்திரா காந்தி போல் சர்வாதிகார வழியில் செயல்பட்டால், அப்போது சர்வாதிகார எதிர்ப்பாளர்கள் பா.ச.க. கூட்டணியை ஆதரிப்பார்களா?
கடந்த காலத்தைப் பாருங்கள். இந்திராக் காங்கிரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்த பின்னர் நரசிம்மராவ் காங்கிரசு ஆட்சியை எதிர்க்கப் பா.ச.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் இணக்கம் கண்டார்கள். வி.பி. சிங்கைத் தலைமை அமைச்சர் ஆக்கிட, கூட்டணி அமைக்காமலேயே பா.ச.க.வும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் ஆதரவு தந்தன. அப்போது முதன்மை நோக்கம் சர்வாதிகாரத் தன்மையுள்ள காங்கிரசு எதிர்ப்பு!
உங்கள் சொந்தத் திட்டங்கள் எங்கே?
---------------------------------
சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளுக்கு சொந்த அரசியல் வேலைத் திட்டம் என்ன? அதை மக்களிடம் பரப்பும் வேலையில் எப்பொழுது இறங்கியுள்ளீர்கள்? அத்திட்டங்களை வெளிப்படுத்த அச்சமா? தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மேல், உங்கள் கட்சித் திட்டத்தைச் செயல்படுத்திட, மார்க்சிய – லெனினிய அடிப்படையிலான புதிய சமூகம் அமைத்திடுவதற்கான போராட்டங்களை நடத்துகிறீர்களா? குறைந்தது உங்கள் கட்சித் திட்டப்படியான சமூகம் அமைப்பது பற்றி ஆழமான பரப்புரைகளாவது செய்கிறீர்களா? இல்லையே! ஐயா வீரமணி போல் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட, யார் வெல்லக் கூடாது என்பதே இப்போதுள்ள அவசரத் தேவை என்று எல்லாத் தேர்தல் பரப்புரைகளில் மட்டுமல்ல, சாதாரண காலப் பரப்புரைகளிலும் வலியுறுத்தி வருகிறீர்கள்!
அதாவது இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் குறுக்கப்பட்டாலும், இதைப் பாதுகாப்பதே உங்களின் நிரந்தர முதன்மை வேலையாகிவிட்டது.
கரடுதட்டிப் போன இடதுசாரிக் கட்சிகளின் நிலை இதுதான் என்றால், அரசியல் பொறுப்புகளில் இல்லாத தற்சார்பான இடதுசாரிகள் மற்றும் சனநாயக எண்ணம் கொண்டோரும், சிந்தனையாளர்களும் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட யார் வெல்லக்கூடாது என்பதே முதன்மை வேலைத்திட்டம் என்று கூறிக் கொண்டிருப்பது சரியா?
இப்போக்கு ஆளும் வர்க்கத்தார்க்குப் பாதுகாப்பு அரண் அல்லவா! இந்திய ஆளும் வர்க்கத்தார்க்கு இன்றுள்ள இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும், காங்கிரசும் ஆகும்!
சிந்தனையாளர்களே, உங்களால் களம் இறங்கிப் போராட முடியாது என்பதற்காக, இப்போது தேவைப்படும் களப் போராட்டங்கள் வளர முடியாத மாமூல் நிலையைப் பாதுகாத்திடும் மந்தை மனப்பான்மைக்கு நீங்கள் துணை போகலாமா?
பா.ச.க. வென்று பாசிசம் தீவிரமடைந்தால்?
------------------------------------
பா.ச.க. வென்று பாசிசம் தீவிரமடைந்தால், அச்சூழலிலும் செயல்படும் உத்திகளை, சனநாயகக் காப்பாளர்களும், தமிழ்த்தேசியர்களும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஈகம் செய்யத் தயங்கக் கூடாது.
பா.ச.க. பாசிசம் தீவிரமடைந்தால் இந்தியாவின் பல பகுதிகளில் வெவ்வேறு காரணங்களால் மக்கள் போராட்டங்கள் வளரும். அந்த நெருக்கடியில் மக்களுக்குப் பகைவன் யார், நண்பன் யார் என்பது பளிச்சென்று தெரியும்.
இந்தியா ஒரு தேசமன்று; பல தேசங்களைக் கொண்டது. பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. பாசிச நெருக்கடியில், அம்முரண்பாடுகள் தீவிரமடையும். பல்வேறு மண்டலங்களில் புதிய போராட்டங்களும் புதிய தலைமைகளும் எழும்.
அப்போது தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. போன்ற பல கட்சிகள் பாசிசத்தின் பக்கவாதியங்களாக மாறி, தனித்தன்மையும் தற்சார்பும் இல்லாத சந்தர்ப்பவாதக் கட்சிகளாக இருக்கும்!
பொதுவாக, சனநாயக நாடுகளில் நாடாளுமன்றம்தான் சனநாயகக் காவலனாக இருக்கும். இந்திய நாடாளுமன்றம் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பறித்து ஒடுக்குகின்ற இந்திப் பேரினவாத ஆதிக்க மன்றமாக உள்ளது.
பிரித்தானியப் பீரங்கிகளால் இந்தியா என்ற ஒரே நாட்டிற்குள் பிணைக்கப்பட்ட “சிறுபான்மை” இனங்கள், சனநாயகப்படி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவே முடியாது. இந்திக்காரர்கள் மட்டுமே 225 உறுப்பினர்கள் மக்களவையில் உள்ளார்கள். இதற்கு மேல் இந்திக்காரர்களின் பங்காளிகள் இருக்கிறார்கள்.
எனவே, ஒடுக்கப்பட்டுள்ள அந்தந்தத் தேசிய இனத்திலும் எழுகின்ற மக்கள் திரள் உரிமைப் போராட்டங்களே இந்த அடிமைத்தனத்திற்குத் தீர்வு காணும்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இந்தியம், கட்டுரைகள், தமிழ்த்தேசியம்