"திராவிட மறுப்பு தேவையே! தோழர் சாவித்திரி கண்ணன் கட்டுரைக்கு எதிர்வினை!" --- பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Monday, December 9, 2024
திராவிட மறுப்பு தேவையே!தோழர் சாவித்திரி கண்ணன்
கட்டுரைக்கு எதிர்வினை!
================================
பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
தோழர் சாவித்திரி கண்ணன் அவர்கள் தமது “அறம்” இணைய இதழில் (Aram Online) 6.12.2024 அன்று, “திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறு வேறானவையா?” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். இரண்டும் ஒன்றுதான் என்பது அவரது நிலைப்பாடு!
“இன்றைய அரசியல் சூழலில், திராவிடக் கட்சிகள் மீதான கடும் குற்றச்சாட்டுகளுக்கோ அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கோ ஆதரவு நிலை எடுத்து எழுதப்பட்டதல்ல இந்தக் கட்டுரை. ஆனால், திராவிடக் கட்சிகளின் மீதுள்ள ஒவ்வாமையை நிலைநாட்டுவதற்காக, திராவிடத்தையும் தமிழையும் ஒன்றுக்கொன்று முரணாக நிறுத்தி, நமது பகைவர்கள் நம்மை மோதவிட்டு இரத்தம் குடிக்கத் துடிக்கின்றனர். தமிழ்த்தேசியம் என்ற கருத்தாக்கமும், திராவிட தேசியம் என்ற கருத்தாக்கமும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்ட அவசியமில்லை என்பதை நாம் உணர்வோமாக” என்று கூறி முடித்துள்ளார் அக்ககட்டுரையை, சாவித்திரி கண்ணன்.
வஜ்ரநந்தி என்ற வடநாட்டு சமணத் (ஜைன) துறவி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் “த்ரமிள” சங்கம் என்ற பெயரில் சமண சங்கம் தொடங்கினார். அதை்திராவிட சங்கம் என்று பிற்காலத்தில் தமிழறிஞர்கள் மயிலை சீனிவேங்கடசாமி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் குறிப்பிட்டனர் என்று சாவித்திரி கண்ணன் கூறுகிறார்.
வடமொழி மகாபாரதம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் வந்த சீனத் துறவி யுவான்சுவாங், கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடநாட்டு குமாரிலபட்டர் போன்ற பலரும் திராவிட, திராவிட பாஷை என்று எழுதியவற்றைக் குறிப்பிட்டு, இவையெல்லாம் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் “திராவிட”என்று உச்சரித்ததால் வந்தவை என்று கூறுகிறார் சாவித்திரி கண்ணன்.
தமிழ் இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, பரிபாடல், தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், ஆன்மிக நூல்களான தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள் போன்ற எதிலும் “திராவிடம்” கூறப்பட்டதாகத் தோழர் சாவித்திரி கண்ணன் கூறவில்லை. அப்படிக் கூறாதது அவர் குறையல்ல. பழைய தமிழ் இலக்கியம் இலக்கணம் எதிலும் “திராவிட” என்ற சொல் கையாளப்படவில்லை.
அதே வேளை தொல்காப்பியம், புறநானூறு,அகநானூறு, சிலப்பதிகாரம், தேவாரம், ஆழ்வார் பாடல்கள், கம்பராமாயணம் போன்றவற்றில் தமிழ், தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்ற சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் சான்றுகளுடன் ஏற்கெனவே பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். எடுத்துக்காட்டாக “திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழிமாற்றியதா?” என்ற எனது நூலிலும் சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளேன்.
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ் இலக்கியங்களில், தமிழ்ச் செப்பேடுகளில் “திராவிடம்” என்ற சொல் கையாளப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் தாயுமானவர்தாம் முதல்முதலாக “திராவிட” என்ற சொல்லைத் தனது செய்யுளில் பயன்படுத்தியுள்ளார். அதுவும் குழப்பம் விளைவிப்போரைக் குறிப்பிடுவதற்காகத் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் தாயுமானவர். “இது என்றால் அது என்பார், அது என்றால் இது என்பார், வடமொழியில் இல்லை என்றால், திராவிட மொழியில் இருக்கிறதென்று கூறுவார். நிரம்பக் கற்றவராகக் காட்டிக்கொண்டு குழப்புவார்கள். இவ்வாறு குழப்பும் மெத்தப்படித்தவர்களைக் காட்டிலும் “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று தாயுமானவர் கூறினார்.
மகாபாரதத்தில் “திராவிட வீரர்கள்” என்ற சொல் வருகிறது என்கிறார் சாவித்திரி கண்ணன். மனுதர்ம நீதிநூலில் இருந்து “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்று கால்டுவெல் தமது “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில், காஞ்சியில் கற்க வந்த வடநாட்டுப் பிராமணரான குமாரிலபட்டர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அது காஞ்சியில் பல்லவர் ஆட்சிக்காலம். தெலுங்கும் பிராகிருதமும் (சமற்கிருதமும்) தமிழ்நாட்டில் கோலோச்சிய காலம்.
இவ்வாறு இவர்கள் காட்டக்கூடிய திராவிடச் சான்றுகள் அனைத்தும் சமற்கிருதத்தில் இருக்கின்றன. இவை அயலார் கூற்றுகள்!
தமிழர்கள் தாங்கள் படைத்த இலக்கியங்களில் தமிழர்களைத் “திராவிடர்கள்” என்று 13-ஆம் நூற்றாண்டுவரை கூறிக் கொண்டதில்லை. சோழனும் பாண்டியனும் அடித்துக்கொண்டு அழிந்தபின், மாலிக்காபூர் படையெடுப்பால் டெல்லிச் சுல்தான்கள் ஆட்சியும், பின்னர் ஆந்தர விசயநகர மன்னர்கள் - நாயக்கர்கள் ஆட்சியும் கோலோச்சிய காலத்தில்தான், தெலுங்கர்களால் - குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்களால், “திராவிட” என்ற சொல் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டு பரப்பப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் என்ற பிராமணர் எழுதிய சமற்கிருத தந்திரவார்த்திகாவில், ஆந்திர - திராவிட பாஷா என்று குறிப்பிட்டதும் தெலுங்கர்க்கு உரியதே! தமிழர்க்குரியதன்று! இந்தத் தெலுங்கர் ஆட்சிகாலத்தில்தான் தமிழர் ஆன்மிக நூல்களுக்கு திராவிட வேதம், திராவிட மாபாடியம் என்ற திராவிடத் திணிப்புப் பெயர்கள் சூட்டப்பட்டன.
அந்தத் தெலுங்கு, கன்னட மரபில் வந்த ஈ.வெ.ரா. - தான், தமிழ்நாட்டு அரசியலில், - இருபதாம் நூற்றாண்டில், திராவிட இனத்தைத் திணித்துப் பரப்பியவர்! 1937, 1938 தமிழ்மாநாடு, மற்றும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் “தமிழ்நாடு தமிழர்க்கே” முழக்கம் தமிழறிஞர்களால் முன்மொழியப்பட்டு, ஈ.வெ.ரா. -வால் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், அதே ஈ.வெ.ரா. - வின் வசம் ஆந்திரத் தலைவர்களின் (பனகர் அரசர்; கடைசியாகப் பொப்பிலி அரசர்) நீதிக்கட்சி வந்தவுடன் 1939 - லேயே “திராவிட இனம்”, திராவிட நாடு” என்று திராவிடத்தை திணித்து, தமிழர், தமிழ்நாடு என்ற இனப்பெயரையும் நாட்டுப் பெயரையும் மறைக்கத் தொடங்கினார்.
இதோ அவரின் கூற்றுகள் :
“தோழர்களே, இப்பொழுது திராவிடர் என்ற மாறுதல் ஏன்? இது பலரும் கேட்கக் கூடிய நியாயமான கேள்வியாகும். இதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன்.”
... ... ...
”தென்னிந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்றில்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும், பார்ப்பனர் அல்லாதார் என்ற பட்டம் நமக்குக் கூடாதென்பதாலேயும், நாமெல்லோரும் ஒரு கூட்டிற்குள் வரவேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை; மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்.”
... ... ...
”நாம் இந்தியர் என்பதை மறுக்கிறபடியாலும் இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டுவதாலும் “திராவிடர்” என்னும் பெயரைக் கொண்டோம்.”
“சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ, ஆராய்ச்சியோ தேவை இல்லை. “காபி” என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா?”
... ... ...
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது, 'தமிழர்' எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே, திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம். நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது.”
... ... ...
“ஆரியர்களும், முஸ்லிம்களும் நம்மோடு வாழ்ந்து வருபவர்கள்தாம். ஆனால், அவர்களுடைய முன்னேற்றம் நாளொரு மேனியும் வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. சமயத்தின் பெயரால் முஸ்லிம்களும் இனத்தின் பெயரால் ஆரியர்களும் ஒன்றுபட்டுவிட்டனர். உலகம் பூராவிலுமுள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகம் என்ற உணர்ச்சியும் இமயம் முதல் குமரி வரையிலுள்ள 'பிராமணர்கள்' ஒன்று என்ற உணர்ச்சியும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.”
- பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுப்பு - 1 பக்கங்கள் 543 முதல் 550 வரை. 1974-வெளியீடு. பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து (அப்போது மொத்தம் மூன்று தொகுப்புகளாக ஈ.வெ.ரா. சிந்தனைகளை ஆனைமுத்து ஐயா தொகுத்து வெளியிட்டார்).
கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர் ஆகிய வெவ்வேறு தேசிய இன மக்களை, ஒரே பொது இனப் பெயரில் அழைக்க வேண்டும் என்பதற்காகத் திராவிடர் என்ற சொல்லை இலட்சியச் சொல்லாகத் தேர்ந்தெடுத்தாராம் ஈ.வெ.ரா.! இது இன ஆராய்ச்சியா, தமிழ்நாட்டில் தமிழினத் தனி அடையாளத்தை அழிக்கும் சூழ்ச்சியா என்பதே தமிழ்த்தேசியர்கள் இன்று ஈ.வெ.ரா அணியினரைப் பார்த்துக் கேட்கும் கேள்வி! இதே சூழ்ச்சிப் பின்னணியில்தான் திராவிடநாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டிற்குச் சூட்டுகிறார்.
உண்மையில் கன்னடர், தெலுங்கர், மலையாளி ஆகியோரிடமும் திராவிட இன உணர்வை வளர்க்க ஈ.வெ.ரா. விரும்பியிருந்தால், அவரின் பூர்விக பூமியான கர்நாடகத்தில் (அப்போது மைசூர் ராஜ்ஜியம்) ஆந்திரத்தில், கேரளத்தில் திராவிட இன உணர்ச்சியைப் பரப்ப முயன்றிருப்பார். அங்கு தன் கட்சிக் கிளைகளை உருவாக்கியிருப்பார். அதற்கான முதல் முயற்சியில் கூட ஈ.வெ.ரா. இறங்கியதில்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இலட்சோபலட்சம் தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழர்களுக்கு அம்மாநிலங்களில் திராவிட இனம் என்ற பொதுச் சொல் தேவை இல்லையா?
இனஉணர்ச்சி, திராவிடர் என்று சொன்னால்தான் வரும் என்கிறார். யாருக்கு? இங்கு தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களுக்கா, அல்லது தமிழர்களுக்கா?
காஃபி குடிப்பது போன்றதுதான் திராவிட இனத்தை ஏற்றுக் கொள்வது என்கிறார். வெட்ட வெளிச்சமாக, இந்த மேடையில் தெலுங்கராகிய கண்ணப்பரும், கன்னடராகிய நானும், தமிழராகிய அண்ணாதுரையும் இருக்கிறோம். எங்கள் மூன்று இனத்தையும் இணைக்கும் பொதுச் சொல்தான் “திராவிடர்” என்று புதுச்சரக்கைத் திணிக்கிறார் ஈ.வெ.ரா. உலகில் மற்ற நாடுகளில் இப்படித்தான் இனப் பெயர் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் நடந்ததா?
இனப்பெயர் பிறப்பால் வருவது. விருப்பத்தால் தேர்வு செய்து கொள்வது அல்ல. சூழ்ச்சியாகத் தமிழ்நாட்டில் “தமிழர்” என்ற இனத்தை மறைக்கத் திராவிட இனத்தைத் திணித்தார் ஈ.வெ.ரா. என்பதே நமது குற்றச்சாட்டு! அதேபோல், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
தமிழைப் படிக்காதே, ஆங்கிலத்தைப் படி என்றார். வீட்டில் உன் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொள். தமிழ்ச்சனியனை விட்டொழி என்றெல்லாம் 1967, 68 களில் பேசினார், எழுதினார். ஆனைமுத்து ஐயா அவர்கள் தொகுப்பில் அவை உள்ளன.
1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர் போராட்டமாய்த் தொடங்கி, மாபெரும் மக்கள் போராட்டமாக விரிவடைந்தது. காங்கிரசு ஆட்சி 400 பேரைச் சுட்டுக் கொன்றது. அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து அங்கங்கே பொதுக் கூட்டத்திலும் அறிக்கையிலும், ‘போலீசு கையில் துப்பாக்கி பூப்பறிக்கவா இருக்கிறது? இந்தி எதிர்ப்புப் போராட்ட காலிகளை இன்னும் சுட்டுத்தள்ள வேண்டும்’ என்று கோரியவர் ஈ.வெ.ரா.
இவர் திணித்துப் பரப்பிய திராவிட இனம் என்பது தமிழினத்தை சிதைக்கும் உள்நோக்கம் கொண்டது.
இன்று எழுந்து வரும் தமிழ்த்தேசிய இன எழுச்சியைப் பேரபாயமாகப் பார்ப்பது, இந்தியத்தேசியவாதக் காங்கிரசும், பா.ச.க.வும் போலவே திராவிட கட்சிகளும் தான்!
ஆசிரியர் வீரமணி அவர்கள் இப்போதும் தமிழர் திருநாள் பொங்கல் விழாவைத் ”திராவிடர்” திருநாளாகப் பெயரிட்டு ஆண்டுதோறும் கடைபிடிப்பதன் உள்நோக்கம் என்ன? தமிழர் திருநாளை “சங்கராந்தி” என்று ஆரியம் வர்ணிக்கும்; “திராவிடர்” திருநாள் என்று திராவிடம் மறைக்கும்.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற இனஉணர்வு தீவிரப்பட்டு வரும் காலம் இது. தெலுங்கு தேசம் என்ற கட்சி ஆந்திராவில் இருக்கிறது. இப்போது அது அங்கு ஆளுங்கட்சி! கர்நாடகத்தில் இந்தியத் தேசியக் கட்சிகளான, காங்கிரசு, பா.ச.க. போன்றவை கன்னட இனஉணர்வைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அம் மாநிலத்திற்கென்று தனிக்கொடி அங்கு ஏற்றுகிறார்கள். கேரளத்தில், வழக்கத்தைவிட கூடுதல் எழுச்சியுடன் “கேரளம் பிறந்தநாள்” என்று அம்மாநிலம் அமைந்த நவம்பர் 1-ஐக் கொண்டாடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ஆட்சி! அவர்கள் மலையாளிகள் என்ற உணர்வை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிடத் திணிப்பு தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி என்பது திராவிட மாடல் ஆட்சி என்று புதிதாகக் கூறி, திராவிடப் பரப்பலைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
திராவிடப் பரப்பல் தீவிரப்படுகிறது என்றால், தமிழின மறைப்பு, தமிழர் வரலாறு சிதைப்பு தீவிரப்படுகிறது என்று பொருள். தமிழர் தாயகமாக உள்ள தமிழ்நாட்டை மூன்று தனித்தனி நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்க பா.ச.க. ஆட்சி திட்டமிடுகிறது. திராவிடமோ, தமிழினத்தை மறைத்து திராவிட மாநிலமாக இதை மாற்றுகிறது.
இப்பொழுது தமிழர் நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று பரப்புவது தீவிரப்பட்டுள்ளது. இந்துத்துவா தரப்பில் அது சரசுவதி நாகரிகம் என்று பரப்பப்படுகிறது.
தமிழ், தமிழர் மறைப்பில் - சிதைப்பில் திராவிடவாதிகளும், இந்தியத் தேசியவாதிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். அதிலும் பா.ச.க. அரவணைத்துக் கழுத்தை நெரிக்கும் அனுகூலச்சத்ரு போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான பின்னணியில், தோழர் சாவித்திரி கண்ணன், தமிழ்த்தேசியர்களை திராவிடத்தை ஏற்று அமைதியாக இருக்குமாறு கூறுகிறாரா?
திராவிடக் கட்சிகளின் ஊழல், பா.ச.க. ஆட்சியுடன் அந்தரங்கக் கூட்டணியாக தி.மு.க. இருப்பது போன்றவையெல்லாம் தோழர் சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்கு தெரியும். அவற்றை அவரும் எதிர்ப்பவர்தான்! ஆனால், திராவிடத்திற்காக சர்ச்சை வேண்டாம் என்கிறார்.
தமிழர் தாயகம் திராவிடர் தாயகமாக மாற்றப்படும்போது, தமிழினம் திராவிட இனமாக சிதைக்கப்படும்போது, அதை சகித்துக் கொள்ளும் மனநிலையை தமிழ் மக்கள் பெற்றுவிட்டால், அவர்கள் சனநாயக உரிமைகளுக்காகவும், மற்ற உரிமைகளுக்காகவும் போராடும் உள்ளாற்றலை இழந்து விடுவார்கள். ஆரியம் அதைத்தான் விரும்புகிறது. எனவே, திராவிடம் என்பது தமிழர்களுக்கு எதிர்நிலையில்தான் இருக்கிறது!
இந்திய ஏகாதிபத்தியவாத காங்கிரசு மற்றும் பா.ச.க. கட்சிகளுடன்தான் திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் நிரந்தரமாக நேர்முகக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும் வைத்துக் கொள்கின்றன. “திராவிட” குருநாதரான ஈ.வெ.ரா, இதேபோக்கில்தான், 1954லிருந்து 67 வரை காங்கிரசுக்குத்தான் ஓட்டுக் கேட்டார். தி.மு.க.வை எதிர்த்தார். எனவே, ஈ.வெ.ரா.வாக இருந்தாலும், கருணாநிதி – ஸ்டாலினாக இருந்தாலும், இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம்தான் எப்போதும் இருக்கிறார்கள்.
தமிழரைத்தான் சொல்லத் தெரியாமல் திராவிடர் என்று அழைத்தார்கள் என்று தோழர் சமாதானம் பேசுவது ஞாயமா? தமிழர்களை “மதராசிகள்” என்றுதான் இன்றும் வடநாட்டில், புதுதில்லியில் அழைக்கிறார்கள்; அடையாளப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மதிப்புக் கொடுத்துத் தமிழர்களை மதராசிகள் என்று அழைத்தால் அதைநாம் ஏற்றுக் கொள்ளலாமா? ஆங்கிலேயர் திருநெல்வேலியை “டின்னவேலி“ என்று சொன்னான் என்பதற்காக ஏற்றுக் கொள்ளலாமா? ஒரு வாதத்திற்காக இதைக் கூறுகிறேன்.
மற்றபடி திராவிடர் என்ற சொல் தென்னாட்டுப் பிராமணர்களை மட்டும் அடையாளப்படுத்தத்தான் சமற்கிருதத்தில் கூறப்பட்டுள்ளது. குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய 5 மொழி பேசும் தாயகங்களில் குடியேறிய ஆரிய பிராமணர்களைப் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைத்துள்ளாரகள். ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் பகுதியில் வசிக்கும் பிராமணர்கள் “புதூரு திராவிட பிராமணர்கள்” என்று இன்றைக்கும் சங்கம் வைத்து செயல்படுகிறார்கள் (www.pudurudravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமண சங்கம் (The South Canara Dravida Brahmin Association) என்பது 1953இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. (www.skdvassociation.com). இன்றைக்கும் ஏராளமான திராவிட பிராமண மணமக்கள் வரன் தளங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. எனவே, திராவிடர் என்பது பிராமணிய ஆதிக்க எதிர்ப்புச் சொல் என்று பேசுவது, பம்மாத்து வேலையாகும். அதேபோல், திராவிடம் என்பது வட இந்திய எதிர்ப்புச் சொல் என்பதும் போலித்தனமாகும்.
தோழர் சாவித்திரி கண்ணன் அவர்கள் தவறான ஒரு இனப் பெயருக்கும் இயற்கையான இனப்பெயருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடுகளில் - தருக்கங்களில் நடுநிலை வகிக்காமல், இயற்கையான தமிழ் இனத்தின் பக்கம் நின்று வாதிடுவது நலம்!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: கட்டுரைகள், தமிழ்த்_தேசியம், தமிழ்த்தேசியம், திராவிடம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்