“தமிழ்த்தேசிய அரிமா” புலவர் துரை. மதிவாணன் 95ஆம் அகவை தொடக்க நாள் வாழ்த்துகள்!" ---- பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Friday, December 13, 2024
“தமிழ்த்தேசிய அரிமா” புலவர் துரை. மதிவாணன்95ஆம் அகவை தொடக்க நாள் வாழ்த்துகள்!
=========================================
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=========================================
தமிழ்த்தேசிய அரிமா புலவர் துரை. மதிவாணன் ஐயா அவர்கள் அகவை 94ஐ நிறைவு செய்து, 14.12.2024 அன்று 95ஐத் தொடங்குகிறார்கள்! ஐயா அரிமா துரை. மதிவாணன் அவர்கட்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் பருவத்திலேயே தமிழின உணர்ச்சி ததும்பி, தி.மு.க.வில் சேர்ந்து தமிழர் உரிமை மீட்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஐயா துரை. மதிவாணன் அவர்கள். அவருடைய ஆற்றல்மிகு பணிகளையும் அறிவாற்றலையும் பார்த்து 1950களில் தி.மு.க.வில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டச் (கீரனூர்) செயலாளராகத் தேர்வு செய்தார்கள் தி.மு.க.வினர். கட்சிப் பெயரில் திராவிடம் இருந்தாலும் தி.மு.க. தலைவர்கள் தமிழ்மொழியின் சிறப்புகளை, தமிழ் இனத்தின் வீரத்தை அறிவாற்றலைப் பட்டித் தொட்டிகளில் எல்லாம் பரப்பி தனிநாடு விடுதலை கோரிய காலமது! மனத்திற்குள் தமிழ்நாடு விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு, இளைஞர் மதிவாணன் தி.மு.க.வில் சேர்ந்தார். அப்பொழுது அவர் கரந்தை புலவர் கல்லூரியிலும், பின்னர் திருவையாறு அரசர் புலவர் கல்லூரியிலும் புலவர் பட்டப் படிப்பும் படித்துக் கொண்டிருந்தார்.
தனிநாட்டுக் கோரிக்கையைத் தி.மு.க. கைவிட்ட நிலையில், மனம் வெறுப்புற்று 1963இல் தி.மு.க.விலிருந்து விலகினார் ஐயா துரை. மதிவாணன். புலவர் பட்டம் முடித்து, அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பணி நிறைவுக்குப் பின், ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் இணைந்து தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தார்.
இப்போது எந்தக் கட்சியிலும் இல்லாமல் தமிழ்நாடெங்கும் பரவியுள்ள தமிழின உணர்வாளர்களின் - தமிழ்த்தேசிய ஆர்வம் கொண்ட இளையோரின் - வழிகாட்டியாய், அவர்களைத் தமிழ்த்தேசியத் திசையில் செயல்பட ஊக்குவிப்பவராக - அவர்களுக்கு சிந்தனைகள் வழங்குபவராக - விளங்கி வருகிறார் மதிவாணன் ஐயா அவர்கள்!
இந்த அகவையிலும் ஐயா அவர்கள் நிறைய படிக்கிறார். அவற்றில் இளையோருக்கு சொல்ல வேண்டிய செய்திகள் இருந்தால் தொலைபேசி வழியாக பலரிடம் சொல்கிறார். வ.உ.சி. அவர்களைக் குறித்த “செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்” என்ற வ.உ.சி. ஆய்வாளர்கள் மற்றும் திறனாய்வாளர்களின் அருமையான கட்டுரைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்டார். பாரதியார். பரலி சு. நெல்லையப்பர் காலத்திலிருந்து, இப்போதுள்ள ஆய்வாளர்கள் ரெங்கையா முருகன், இளவல் கதிர்நம்பி வரை வ.உ.சி. குறித்து எழுதிய கட்டுரைகள் பலவற்றை பழைய நூல்களிலும், புதிய நூல்களிலும் தேடித் தொகுத்து அண்மையில் நூலாக வெளியிட்டார் ஐயா துரை. மதிவாணன்.
நம் தமிழ்த்தாய்க்கு என்றும் இளமைதான்! அந்த அன்னையின் மூத்த மகன்களில் ஒருவரான தமிழ்த்தேசிய அரிமா துரை. மதிவாணன் ஐயா அவர்கட்கும் மனமும் சிந்தனையும் என்றும் இளமைதான்!
ஐயா அவர்கட்கு 95ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்