<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது!" தோழர் மணியரசன் கட்டுரை.

Friday, May 1, 2015

"இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது!" 
--தோழர் மணியரசன் கட்டுரை.

“மந்திரம் போல் சொல் வேண்டும்’’ என்றான் பாரதி. உண்மையை உரைப்பதாகவும், உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்வதாகவும் உள்ள சொற்கோவை யைத்தான் மந்திரம் போன்ற சொல் என்றான் பெரும்பாவலன்!
ஆனால், போலிகளுக்கு உண்மை சுடும். அவர் களிடம் அதிகாரம் இருந்துவிட்டால் சொற்களைத் தண்டிக்கத் துடிப்பார்கள். அது முடியாத நிலையில் சொன்னவர்களைத் தண்டிக்க முனைவார்கள்.
அண்மையில் ஆந்திரப்பிரதேசத்தில் இருபது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்த ஒரு சுவரொட்டி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களை ஆத்திரப்படவைத்துள்ளது.

கன்னடர், மலையாளிகள், தெலுங்கர், சிங்களர் தமிழர்களின் உரிமைகளைப் பறித்தார்கள்; உயிர்களை அழித்தார்கள்; இந்தியாவை நம்பினோம் அனாதைகள் ஆகிவிட்டோம்; திராவிடத்தை ஏற்றோம் ஏமாளிகள் ஆகிவிட்டோம். இனி தமிழ்த்தேசியமே தற்காப்பு ஆயுதம்!

“இந்தச் சுவரொட்டியைத் தயாரித்து ஒட்டச் சொன்னவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன். ஒட்டியவர் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த. கவித்துவன்’’ என்று முதல் தகவல் அறிக்கை அணியம் செய்து 23.4.2015 அன்று பிற்பகல் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தினர் தோழர் கவித்துவனைத் தளைப்படுத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி இரவோடு இரவாகத் திருச்சி நடுவண் சிறையில் அடைத்துவிட்டனர்.
மறுநாள் மணியரசனைத் தளைப்படுத்திட திருச்சி காவல்துறையினர் சென்னைக்கு விரைந்தனர். சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை ஏட்டின் அலுவலக மாகவும் த.தே.பே. அமைப்பின் தலைமையகமாகவும் உள்ள செயலகத்திற்குக் காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் காவலர்கள் நுழைந்தனர். அப்போது நமது செயலகத்தில் அலுவலகப் பொறுப்பாளரும் பொதுக் குழு உறுப்பினருமான தோழர் வி.கோவேந்தன் இருந்தார்.

“மணியரசன் எங்கே?’’
“தஞ்சையில் இருக்கிறார். நீங்கள் எதற்காக வந்தீர்கள்?’’
“சட்டவிரோதச் சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளீர்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியரசனைக் கைது செய்ய வேண்டும். சுவரொட்டி அச்சிட் டதற்கான ஆதாரங்களை எடுக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தைச் சோதனையிடப் போகிறோம்.’’

இந்தச் செய்தியை தோழர் கோவேந்தன் தஞ்சை யிலிருந்த என்னிடம் தொலைபேசியில் கூறினார். நான் ஆய்வாளர் உமாசங்கரிடம் தொலைபேசியில் பேசினேன்.

“என்னைக் கைது செய்வதாக இருந்தால், தஞ்சைக்கு வாருங்கள். நான் தயாராக இருக்கிறேன். கைது செய்து கொண்டுபோங்கள்.’’
“நான் இதோ வந்து விடுகிறேன். அங்கேயே இருங்கள்.’’
“விமானத்தில் வரப்போகிறீர்களா?’’
“அதற்கெல்லாம் எங்களுக்கு ஏது ஏற்பாடு?’’
“நீங்கள் எங்களது பத்திரிகை அலுவலகத்தைச் சோதனை செய்வது என்பது கூடாது. அதற்கு நீதிமன்ற ஆணை பெற்றிருக்க வேண்டும். நாங்கள் சுவரொட்டி ஒட்டியதை ஏற்றுக் கொள்கிறோம். மறுக்கவில்லை. கைதுக்கும் தயாராக இருக்கிறேன். பிறகென்ன சோதனை போடுகிறீர்கள்?’’
“சுவரொட்டி வடிவமைத்த ஆதாரம் வேண்டும். உங்கள் கணிப்பொறியிலிருந்து நகல் எடுத்துக் கொள் கிறேன்.’’
“அது உலகம் முழுக்க முகநூலிலும், இணையதளச் செய்திப் பகுதியிலும் போய்விட்டது. அதன் நகலை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள லாம். எங்கள் கணிப்பொறியிலிருந்துதான் எடுக்க முடியும் என்பதில்லை.’’
“அது சரி. நான் ஒரு நகல் எடுத்துக் கொள்கிறேன்.’’

நான் தோழர் கோவேந்தனிடம் ஒரு நகல் எடுத்துக் கொடுங்கள் என்றேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் கோவேந்தன், “ஐயா, நம் கணிப்பொறியை எடுத்துக் கொண்டு போகிறார்கள்’’ என்று பதற்றத்தோடு சொன்னார். உதவிக்கு முன் கையைக் கொடுத்தால் முழங்கையைக் கடிக்கும் பழக்கம் காவல்துறையினருக்கு உண்டு!

ஆய்வாளர் உமாசங்கரிடம் தொலைபேசியில் பேசினேன்.
“அது சென்னை மாநகர முதன்மை நீதிபதியால் எங்களது பத்திரிகை அலுவலகமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் நீங்கள் நீதிமன்ற அனுமதியில்லாமல் இரண்டரை மணிநேரம் சோதனையிட்டது தவறு. அத்துடன் எங்களது தமிழர் கண்ணோட்டம் இதழின் முக்கியப் பதிவுகள் உள்ள கணிப்பொறியை எடுத்துச் செல்வது சட்டவிரோதம். கணிப்பொறியை வைத்துவிடுங்கள்’’.

“நான் சோதனையிடுவது பற்றி சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுத்துள்ளேன். அது போதும்’’.

“அது போதாது. நீதிமன்ற அனுமதியின் நகலை எங்கள் அலுவலகப் பொறுப்பாளர் கோவேந்தனிடம் கொடுத்துக் கையெழுத்து பெறுங்கள். கணிப்பொறியை எடுத்துச் செல்லக் கூடாது.’’

“திருச்சிக்கு எடுத்துச்சென்றுவிட்டு கம்ப்யூட்டரைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.’’ என்றார் உமாசங்கர்.
அதன் பிறகு உடனடியாக, திருச்சி ஐ.ஜி. திரு. ராமசுப்பிரமணி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமாசங்கரின் சட்டவிரோதச் செயல்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். “உங்கள் அதிகாரிகளைச் சட்டவிதிகளின் படி நடந்து கொள்ளச் சொல்லுங்கள். கணிப்பொறியை அவர் எடுத்துச் செல்லக் கூடாது.’’ என்றேன். உடனே அவர் “நான் அதைப் பார்க்கிறேன். டி.சி. மூலம் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்’’ என்றார்.

கணிப்பொறியைத் திருப்பி வைத்துவிட்டார் ஆய்வாளர் உமாசங்கர். அதற்குள் செய்தியறிந்து சென்னை அலுவலகத்திற்கு ஊடகத்துறையினர் வந்து விட்டனர். காவல்துறையினருக்குச் சங்கடமாகி விட்டது.
தஞ்சை கட்சி அலுவலகத்தில் காவல்துறையினரை எதிர்பார்த்து கைதுக்காக நான் காத்திருந்த செய்தி யறிந்து தொலைக்காட்சி ஊடக நண்பர்களும் அச்சு ஊடக நண்பர்களும் வந்துவிட்டனர். தொலைக் காட்சிகளில் இச்செய்தி ஓடத் தொடங்கியது.

மீண்டும் ஆய்வாளர் உமா சங்கர் என்னிடம் தொடர்பு கொண்டு நாங்கள் தஞ்சை வந்து கொண்டிருக்கிறோம் என்று பகல் 1 மணி வாக்கில் சொன்னார். “வாருங்கள் நான் எங்கள் கட்சி அலுவலகத்தில் காத்திருக்கிறேன்” என்றேன்.
தஞ்சை மாவட்டத் தோழர்களும், தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களும், அலுவலகம் வந்து என்னிடம் நடந்த செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இரவு 9 மணி வரை உமாசங் கரும் அவரைச் சேர்ந்த காவல்துறையினரும் தஞ்சை வரவில்லை.
இச்செயல்கள் அனைத்திற்கும் ஆய்வாளர் உமாசங்கர் அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. “மேலிடத்தின்’’ கட்டளைகளை அவர் நிறைவேற்று கிறார்.

தோழர்களை எல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு நானும் வெளிக்கிளம்பினேன்.
மறுநாள் 25.4.2015 பிற்பகல் 2 மணி வரை தஞ்சை கட்சி அலுவலகத்தில் காத்திருந்தேன். காவல்துறையி னர் வரவில்லை.

மாலை ஓசூருக்குக் காரில் புறப்பட்டோம். தோழர்கள் குழ. பால்ராசு, நா. வைகறை, அ. ஆனந்தன், க. விடுதலைச் சுடர் ஆகிய த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் என்னுடன் வந்தார்கள்.

மறுநாள் 26.4.2015 காலை 9.30 மணிக்கு ஓசூரில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. அதில் நிறைவுரை நான் ஆற்ற வேண்டும். அன்று மாலை தருமபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்க அமைப்பு தொடக்க அரங்கக் கூட்டம். அதிலும் கலந்து கொள்ள வேண்டும். திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.
தோழர் கவித்துவனைப் பிணையில் வெளிக் கொணர வழக்கறிஞர் த. பானுமதி அவர்கள் 27.4.2015 அன்று திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வாதாடினார். அரசு வழக்குரைஞர் அசோகன், பிணை வழங்கக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்து வாதிட் டுள்ளார். “இவர்கள் பிரிவினைவாதிகள், தேசத்திற் கெதிரானவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முதல் நபர் இன்னும் கைதாகவில்லை. எனவே கவித்துவனுக் குப் பிணை வழங்கக் கூடாது’’ என்று கூறியுள்ளார். அதற்குப் பதில ளித்த வழக்கறிஞர் பானுமதி அவர்கள், “பிரிவினை வாதம், தேசத் துரோகம் ஆகியவற்றிற்கான பிரிவு எதுவும் இவ்வழக்கில் இல்லை.

கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் போன்ற பிற இனத்தவர் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கொலை செய்கிறார்கள். தமிழர் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என்ற அவலக்குரல்தான் இந்தச் சுவரொட்டியில் இருக்கிறது. இது இனங்களுக்கிடையே பகையை மூட்டுவது ஆகாது. கலகத்தைத் தூண்டுவது ஆகாது. முதல் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக உள்ள பெ. மணியரசனைக் காவல்துறை கைது செய்யப் போகவே இல்லை. அவர் கைதுக்குட் படத் தயாராக உள்ளார். ஒரு வேளை இவ்வழக்கு தோற்றுவிடும் என்பதால் அவரைக் கைது செய்யாமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. எனவே கவித்துவனுக்குப் பிணை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண் டார்.

அரசு வழக்குரைஞர் மிகக் கடுமையாக எதிர்த் ததால் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி பூர்ணிமா!

உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கவித்து வனுக்குப் பிணை கோரி மேல்முறையீடு செய்துள்ளார் வழக்கறிஞர் பானுமதி.
சுவரொட்டிச் சொற்கள் பல்வேறு இனங்களுக்கு இடையே பகையை மூட்டி விடுகிறது என்றும், (இ.த. ச. 153 ஏ), சுவரொட்டி ஒட்டியதன் மூலம் பொது இடங்களை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்றும் (3 of TNO PPD ACT) மேற்படி வழக்கில் அரசு குற்றம் சாட்டி யுள்ளது.

கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிங்க ளர்கள் தமிழர்களின் உயிரைப் பறித்திருக்கி றார்கள். உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் நாதியற்ற அரசியல் அனாதை களாய் தமிழர்கள் உள்ளார்கள். இந்திய அரசு நடுநிலை தவறி தமிழின எதிர்ப்பு அரசியல் நடத்திக் கொண்டுள்ளது. தமிழின உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக - மீட்பதற்காக கட்சி நடத்துவதாகக் கூறிக் கொண்ட திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும் அதிலி ருந்து பிரிந்த அ.தி.மு.க.வும் இந்திய வல்லரசின் கங்காணிக் கட்சிகளாக மாறித் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து சொந்த லாபம் பார்த்துக் கொண்டிருக் கின்றன. எனவே இந்தியத்தை நம்பிப் பயனில்லை. திராவிடத்தை நம்பியும் பயனில்லை. தமிழ்த் தேசியக் கொள்கை வளர்ந்தால்தான் அது தமிழினத்தின் தற்காப்பிற்குரிய தத்துவ ஆயுதமாக விளங்கும் என்ற பொருளில்தான் மேற்படி சுவரொட்டி போடப் பட்டுள்ளது.

மேற்கூறியுள்ள நமது மதிப்பீட்டில், வரையறுப்பில் என்ன தவறு இருக்கிறது?
1991ல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதி மன்ற அறிவுரையின் படி நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. அதை எதிர்த்துக் கர்நாடகக் காங்கிரசு அரசு முழு அடைப்பு நடத்தியது. கன்னட வெறியர்கள் ஏராளமான தமிழர் களை இனக் கொலை புரிந்தனர். பல்லாயிரக் கணக் கான தமிழர்களின் வீடுகளை எரித்தனர். தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடினர். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாக (அகதிகளாக) தமிழகம் ஓடிவந்தனர். ஏறத்தாழ இருபது நாள் இந்த இனவெறி வன்முறை நடந்தது. இதைத் தடுக்க முன் வரவில்லை இந்திய அரசு. ஒரு கண்டனம் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

கன்னடர் வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த அப்போதைய முதல்வர் “புரட்சித் தலைவி’’ செயலலிதாவாலும் முடியவில்லை. “தானைத் தலைவர்’’ கருணாநிதியாலும் முடியவில்லை. இவ்விரு வரும் கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறக் கூடப் போகவில்லை. அசா மில், பீகாரிகள் தாக்கப்பட்டபோது லல்லுபிரசாத் அசாம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். அசாமுக்கு இராணுவத்தை அனுப்பிப் பீகாரிகளைப் பாதுகாக்குமாறு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்தார்.

கன்னடர்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்பை முறியடித்துத் தமிழகத்திற்குள்ள காவிரி உரிமையைப் பறித்து தமிழர் களை இனப்படுகொலை செய்தாலும் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காது; செயலலிதாவும் கருணாநிதியும் தமிழர்களைப் பாதுகாக்கக் களத்தில் இறங்கிச் செயல்படாத அறிக்கைவிடும் போலிகள் என்பதை கண்டு கொண்ட மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்தார்கள். 2011 நவம்பரில் கேரளம் சென்ற தமிழர்களை அடித்துத் துரத்தினார்கள். தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்களைத் தோட்ட வேலைக் குப் போன இடத்தில் கடத்தி 24 மணி நேரம் காவலில் வைத்து அவமானப் படுத்தினர். ஐயப்பசாமி கோயிலுக் குப் போன தமிழர்களைத் தாக்கி செருப்பு மாலை போட்டார்கள்.
சிங்களர்கள் - தமிழகக் கடல்பகுதிக்கே வந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர். 600 தமிழக மீன வர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இன்றும் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுகின்றனர். கடத்திக் கொண்டு போய் சிறைகளில் அடைக்கின்றனர். மீன்பிடிப் படகுகளையும் கடத்திச் செல்கின்றனர்.

இந்திய அரசின் எல்லா வகைப் பங்களிப்போடும், கருணாநிதி, செயலலிதா ஆகியோரின் போலித்தன அரசியலின் பங்களிப்போடும் சிங்கள வெறியர்கள் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். ஐ.நா. மனித உரிமை மன்றம் இயற்றிய தீர்மானத்தின்படி பன்னாட்டு வல்லுநர் குழு- இலங் கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும். ஆனால் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு இலங்கை செல்லாமல் தடுக்கும் அரசியல் அழுத்தத்தை உலக அரங்கில் இந்தியா தந்து கொண்டுள்ளது.

“தானைத் தலைவர்’’ கருணாநிதியும், “புரட்சித் தலைவி’’ செயலலிதாவும் ஈழத்தமிழர்களைக் காக்க உருப்படியாகச் செய்தது என்ன? ஒன்றுமில்லை. அவ் விருவருக்கும் உள்ள மக்கள் பலத்திற்கு அவர்கள் உண்மையாகப் போராடியிருந்தால் ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுத்திருக்க முடியும். ஒப்புக் குக் குரல் கொடுத்துவிட்டு இருவரும் ஒதுங்கிக் கொண் டார்கள். இன்று வரை ஈழத்தமிழர் சிக்கலில் அதே உத்தி யைத்தான் இருவரும் கடைபிடிக்கிறார்கள்.

அண்டை அயல் இனத்தார் தமிழினத்தைத் தாக்கி அழித்து வருவதையும் தமிழக உரிமைகளைப் பறித்து வருவதையும் அந்த அநீதிகளுக்கு இந்திய அரசு மறை முகமாகத் துணை போவதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தொடர்ந்து தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து, அரண்மனை அரசியல் -- ஊழல் அரசியல் நடத்தி வருவதையும் கண்டுகொண்ட ஆந்திரத் தெலுங்கர்கள் இப்போது செம்மரக் கடத்தல் தடுப்பு என்ற பெயரில் இருபது தமிழர்களை முதல்நாளே கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து உறுப்புகளை அறுத்து அதன் பின்னால் சுட்டுக் கொன்று இனப்படுகொலை செய்துள்ளார்கள்.

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திரத் தெலுங்கர்களை இப்படிக் கூட்டமாகக் கடத்தி சுட்டுக் கொல்லவில்லை. ஆந்திரத் தெலுங்கர்களை அவ்வாறு சுட்டுக் கொன்றால் அதையும் நாம் வன்மையாகக் கண்டிப்போம். அப்படித் தெலுங்கர்கள் கொல்லப் பட்டால் அது மனித உரிமைப் பறிப்பு. இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது இனப் படு கொலை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. ஆனால் அவ்வாறு தெலுங்கர்கள் கொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்த வரலாற்று அவலங்களைத்தான் மேற்படி சுவரொட்டி சுட்டிக் காட்டுகிறது. எந்த இனத்திற்கு எதிராகவும் இனப்பகையைத் தூண்டவில்லை. அந்த இனங்கள் தமிழர்களுக்கு இழைத்து வரும் அநீதியைத் தான் எடுத்துரைத்தோம்.

அதிமுக அரசின் சுவரொட்டி வழக்கு இரண்டு காரணங்களுக்காக இருக்கும். ஒன்று தமிழின ஆதரவு போல் நாடகமாடும் செயலலிதாவின் போலித்தனத் தைத் த.தே.பே. தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது. அதற்குப் பழிவாங்க வேண்டும். இரண்டாவது தமிழின உரிமைப் போராளிகளைப் பழி வாங்குவதன் மூலம் பார்ப்பனியப் பாசகவுடன் நெருக்கம் கொண்டு, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க வழி தேடலாம் என்ற உத்தி!

ஏடுகளின், ஊடகங்களின் தலையீடு மட்டும் இல்லை எனில் இன்னும் எத்தனையோ அட்டூழியங் களை - சனநாயகப் படுகொலைகளை - மனித உரிமைப் பறிப்புகளை அதிமுக ஆட்சி அன்றாடம் அரங்கேற் றும்! இந்தச் சுவரொட்டி வழக்கில் ஓர் எல்லையோடு அதிமுக அரசு நின்றதற்குக் காரணம் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகச் செய்தியாளர்களின் தலையீடே! அடுத்து நீதித்துறைக்கு அஞ்சுகிறது அதிமு.க.

இந்து மதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்று பகிரங்கமாக மேடைகளில் முழங்குகிறார்கள் பாசக நடுவண் அமைச்சர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர்கள். பாபர் மசூதியை இடித் தது சரிதான் என்று இன்றும் பாசகவினர் பேசு கின்றனர். இவர்கள் உண்டாக்காத இனப்பகையை- மதப் பகையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் உருவாக்கு கிறதா? இல்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதா பெங் களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது கன்னடர் எதிர்ப்புச் சுவரெழுத்துகளை அதிமுகவினர் எழுதினர். சென்னையில் கன்னடர் நிறுவனங்களைத் தாக்கினர். அவ்வாறான அட்டூழியம் எதையும் த.தே.பே. செய்ய வில்லை.

போலிப்பட்டங்கள் - போலி முழக்கங்கள்தாம் திராவிடக் கட்சிகளின் கவச குண்டலங்கள்! உண்மை யான தமிழின உணர்ச்சியும் தமிழ்த் தேசியக் கொள்கை யும் எழுச்சி பெறும்போது தங்களது அரிதாரம் உதிர்கிறதே என்ற ஆத்திரம் திராவிடக் கட்சிகளுக்கு உண்டு!

விழிப்புற்ற தமிழர்களே, எழுச்சி பெற்ற தமிழர்களே!
இந்திய அரசு இனப்பகை அரசு என்பதை இமைப் பொழுதும் மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கை எச்சரிக்கை!
திராவிட அரசியல் கங்காணி அரசியல், தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் என்பதைக் கணப்பொழுதும் மறந்து விடாதீர்கள்! எச்சரிக்கை எச்சரிக்கை!
சாலையார் கூறியது போல் - சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது; தியாகங்கள் இல்லாமல் பகை வெல்ல முடியாது என்ற உண்மையை உணர்வோம்!
முன்வைத்த காலை பின்வைக்காமல் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்போம்! வழக்குகளும் - சிறைகளும் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகட்டும்!!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மே 1 இதழில் வெளியானது).

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்