<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பூலான்தேவிக்கு கிடைத்த பொதுமன்னிப்பு வீரப்பனுக்கு கிடைக்காதது ஏன்?" தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Saturday, May 16, 2015

"பூலான்தேவிக்கு கிடைத்த பொதுமன்னிப்பு வீரப்பனுக்கு கிடைக்காதது ஏன்?" --தோழர் பெ.மணியரசன் பேச்சு.

தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் தோழர் சுபா. இளவரசன் அவர்களின் தந்தையார் திரு. பாலசுந்தரம் அவர்கள் அண்மையில் காலமானதையட்டி அவரு டைய படத்திறப்பு விழா அரியலூர் மாவட்டம், கு. வல்லம் கிராமத்தில் 2.5.2015 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது. பெரியவர் பாலசுந்தரம் அவர்களின் படத்தை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள் திறந்து வைத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் திரு எஸ்.எஸ். சிவசங்கர் (தி.மு.க.), திருவாட்டி அற் புதம்மாள், திருவாட்டி முத்துலெட்சுமி வீரப்பன், புலவர் கலியபெருமாள் மூத்த மகன் வள்ளுவன், திரு பெருநற் கிள்ளி (தி.மு.க.), திரு கு.வல்லம் கோவிந்தசாமி உள்ளிட் டோர் நினை வேந்தல் உரை யாற்றினர். நிகழ்ச் சியை, தமிழர் நீதிக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் இளங் கோவன் ஒருங்கிணைத்தார். நிறைவில் தோழர் சு.பா. இளவரசன் நன்றி உரையாற்றினார்.

அந்நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ. மணியரசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:

“தொண்ணூறு அகவை வரை நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த அய்யா பாலசுந்தரம் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், சு.பா. இளவரசன் உள்ளிட்ட அய்யா வின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா பாலசுந்தரம் அவர்களின் சிறப்பு என்பது, தன்னுடைய மகன் இளவரசன் தமிழ்நாடு விடுதலைப் படையில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கிறார் என்பது தெரிந்தும், தன்னுடைய மகனை அரவணைத்த தும் மகனின் தோழர்களுக்கு அடைக் கலம் கொடுத்த தும் ஆகும். அவர் ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்ததுடன், தமிழர்களையும் தன் குடும்பத்தினராகக் கருதி பற்றோடு நடந்துகொண் டுள்ளார்.

இங்கு பேசிய அற்புதம்மாளையும் சகோதரி முத்து லெட்சுமியையும் இந்த மேடையில் அமர்த்தியது நாம் அல்ல. காவல் துறையினர்தான். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், காவல்துறையினர், இழைத்த அநீதிகளும் கொடுத்தத் துன்பங்களும், துயரங் களும் இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக இந்தக் குடும்பப் பெண்களை எழுச்சி கொள்ள வைத்துள்ளது.

இரசியப் புரட்சியில் லெனின் சொன்னார், “நம் முடைய தோழர்கள் கடும் முயற்சி செய்து நம் கட்சிக்கு ஆள் சேர்ப்பது ஒருபக்கம் இருந்தாலும், ஜார் மன்னனின் காவல்துறை செய்து வரும் அட்டூழியங்கள் நம் கட்சிக்கு அதிகமாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுகிறது’’ என்று கூறினார். அப்படித்தான் காவல்துறையின் அடக்குமுறைகள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் அதிகமாக ஆண்களையும் பெண்களையும் தமிழ்நாட்டில் சேர்த்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தமிழினம் சார்ந்த, தமிழின உரிமை கள் சார்ந்த அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிகளாக இல்லை. மாறி மாறி இங்கு ஆட்சி செய்து வரும் கட்சிகள் இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை செய்யும் கட்சிகளாக தமிழர்களை அயலாருக் குக் காட்டிக் கொடுக்கும் கட்சிகளாக இருக்கின்றன. இன உணர்வுள்ள கட்சிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சுபா. இளவரசன் போன்றவர்கள் பத்தாண்டுகள் சிறையில் இருந்தபின்னும் மேலும் ஆயுள் தண்டனை பெற்று வழக்குக்கு அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

வீரப்பன் அவர்களையே எடுத் துக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் அவர் தன்னலத்திற்காக சந்தனமரக் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். பின்னர் அவர் காவல்துறையின் அடக்கு முறைகளை எதிர்த்து எதிர்த்து பெரும் வீரனாக மாறிவிட்டார். தமிழகக் கர்நாடகக் காவல்துறைக்கு சவாலாக விளங் கினார். இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக ஆனார். அந்த நிலையில் அவர் திருடர் என்ற நிலையிலிருந்து மாறி தமிழின உரிமைகளுக்குப்போராடும் பொது மனிதனாக ஆனார். காவல் துறையினரால் அவரைப் பிடிக்க முடியாத நிலையில் அவர்தானே சரண் அடைய முன் வந்தார். பொதுமன்னிப்புக் கோரினார். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் அதை ஏற்கவில்லை.

வடநாட்டில் பூலான்தேவி பெரிய அளவில் கொலை, கொள் ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு காட்டில் வாழ்ந்தார். காவல் துறையால் அவரை பிடிக்க முடிய வில்லை. பிறகு அவருக்கு மத்திய மாநில அரசுகள் சம் மதித்து பொது மன்னிப்பு வழங்கின. அப்படிப்பட்ட ஒரு பொது மன்னிப்பு வீரப்பனுக்கு ஏன் கிடைக்க வில்லை? தமிழ்நாட்டில் தமிழின உணர்வற்ற கங்காணி களின் அரசியல் மேலோங்கி இருப்பதுதான் வீரப் பனுக்குப் பொதுமன்னிப்பு கிடைக்காததற்குக் காரணம்.

நம்முடைய சுபா. இளவரசன், பொழிலன், மாறன் போன்ற தம்பிகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு சில நடவடிக்கைகளில் இறங்கினார்கள். எனக்கு அந்தப் போராட்ட முறையில் உடன்பாடு இல்லை. ஆனால் இளமையில் அப் பாதையில் சென்ற இவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு மக்கள் திரள் அரசியலுக்கு, சனநாயக வழி அரசிய லுக்கு வந்து விட்டார்கள். பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு தமிழினச் சார்பு கட்சி ஆளக் கூடிய நிலை யிருந்தால் தமிழின உரிமைக்காக ஆயுதப் போராட்ட வழியில் சென்று பின்னர் பொதுப் பாதைக்கு, மக்கள்திரள் போராட்டப்பாதைக்கு திரும்பிய இளைஞர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்திருக்கும். தம்பி பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகி யோரும் அவ்வழக்கிலுள்ள மற்றவர் களும் இருபத்து நான்கு ஆண்டு களாக சிறையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் வலுவான தமிழ்த் தேசிய அரசியல் உருவாகியிருந்தால் அவர்களை யெல்லாம் சட்டப்படி விடுதலை செய் திருக்கலாம். இந்தப் படிப்பி னையைத் தான் தமிழின உணர்வாளர்கள் பெறவேண்டும்.

இந்திய விடுதலைப் போராட் டத்தில் 1942 ஆகஸ்டு புரட்சி எனப் படும் “வெள்ளையனே வெளியேறு’’ என்ற காங்கிரசு போராட்டம் முகாமையானது. காந்தியடிகள் உட்பட காங்கிரசு தலைவர்கள் கூடி மும்பை மாநாட் டில் எடுக்கப்பட்ட தீர்மானப்படிதான் அப்போராட் டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்போராட்டம், தந்திக் கம்பி அறுத்தல், தண்டவாளம் பெயர்த்தல் போன்ற வன்முறைப் போராட்டமாகவும் மாறியது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்குப் பல்லாயிரக் கணக்கானோர் உள்ளானார்கள், பல்லாயிரக்கணக்கானோர் சிறைப் படுத்தப்பட்டனர். காந்தியடிகள் ”வன்முறைக்குத் திரும்பிய வெள்ளையனே வெளியேறு போராட் டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டேன். இனி எனக்கும் இந்தப் போராட்டத்திற்கும் தொடர்பில்லை’’ என்று அறிவித்தார்.

ஆனால் பண்டித நேரு, வன்முறைப் போராட் டத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என்று அறிவித்துவிட்டு, நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் காங் கிரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது. வன்முறைப் போராட்டம் உட்பட எல்லா போராட்டங்களிலும் ஈடுபட்டவர்கள் தேசப்பக்தர்கள்; அவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைத்தார். பலர் விடுதலை செய்யப்பட்டனர்; மற்றும் பலர் விடுதலை செய்யப்படவில்லை.

காங்கிரசு ஆட்சிப்பொறுப் பேற்ற பின்னர் அனை வரும் விடுதலை செய்யப்பட்டனர். பண்டித நேருவுக்கு இருந்த அந்தப் பார்வை தமிழக அரசியலில் வர வேண்டும்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு உரிமைகளை இழந்தது மட்டுமல்ல, தமிழின உரிமை களுக்காகப் போராடிய இளைஞர்கள் உணர்வாளர்கள் போன்றோரின் மனித உரிமைகளையும் நாம் இழந்துள்ளோம்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்க தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித் துத்தான் நாம் செயல்படவேண்டும் என்பதில்லை. நம்முடைய தமிழ் மக்களில் 25 விழுக் காட்டினர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் நிலை உருவானால், பல்லாயிரக் கணக்கில் இலட்சக்கணக்கில், தமிழ் மக்கள் வீதிக்கு வந்து உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்பட்டால் தமிழினம் சார்ந்து நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி நிறைவேற்ற வேண்டிய நெருக் கடி ஏற்படும். வேலூர் சிறைக் கதவுகளை அரசே திறந்துவிடும் நிலை ஏற்படும். அரசு தவறினால் மக்களே திறந்துவிடுவார்கள்.

தமிழ்த் தேசியத்தை மக்கள் முழக்கமாக நாம் வளர்க்க வேண் டும். தமிழ்த்தேசியம் என்ன என் பதையும் நாம் துல்லியப்படுத்த வேண்டும். எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மை உள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப் பது எமது இலக்கு என்ற தெளிவான வரை யறுப்பையும் நாம் முன் வைக்க வேண்டும். இப்படிப்பட்ட உறுதி யை ஏற்பதே தமிழர் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், பகுதி வாழ் மக்களும் கலந்து கொண்டனர்.

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்