"திராவிடத் தலைவர்களுக்குத் தமிழ் இனத்தின் மீது இத்தனை காழ்ப்பு ணர்ச்சியும் வஞ்சகமும் ஏன்?" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
Saturday, April 16, 2016
"திராவிடத் தலைவர்களுக்குத் தமிழ் இனத்தின் மீது இத்தனை காழ்ப்பு ணர்ச்சியும் வஞ்சகமும் ஏன்?" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
("மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம்" விமர்சன கட்டுரையின் தொடர்ச்சி--பகுதி-9).
(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2016 ஏப்ரல் 16 இதழில் வெளியானது.)
("மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம்" விமர்சன கட்டுரையின் தொடர்ச்சி--பகுதி-9).
மனுநூல் எரிப்பு என்று ஒருபக்கம்
மார்தட்டிக் கொள்ளும் பெரியாரியவாதிகள் மறுபக்கம் - ஆரியரில் சீரழிந்த பல
பிரிவினரில் ஒரு பிரிவினர்தாம் திராவிடர்கள் என்று மனு கூறிய “திராவிடத்தை”
தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்.
மனுநூல்,
குமாரிலபட்டரின் தந்திர வார்த்திக, மகாபாரதம் ஆகிய வடமொழி நூல்களில்
இருந்துதான் திராவிட - திராவிடர் என்ற சொல்லைக் கால்டுவெல் எடுத்தார் என்று
இதற்குமுன் பார்த்தோம். இப்போது இன்றுமுள்ள நடைமுறை உண்மைகளைப்
பார்ப்போம்.
இன்றும் பார்ப்பனர்கள்
(பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு திராவிட
பிராமணர்கள் என்ற பெயரில் சங்கம் நடத்திக் கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து
வரும் “பிராமின் டுடே” என்ற இதழ், பிராமணர்கள்தாம் திராவிடர்கள் என்று
அழைக்கப்பட்டார்கள் - இன்றும் அழைக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறது.
“விந்திய
மலைக்கு வடக்கே உள்ள பிராமணர்கள் கௌட என்ற பெயரிலும் தெற்கே உள்ளவர்கள்
திராவிட என்ற பெயரிலும் பொதுவான இரு பிரிவுகளில் அடையாளப்
படுத்தப்பட்டிருக் கிறார்கள். இதன் அடிப்படையில், கோவாவில் குடியேறிவிட்ட
இந்த பிராமணர்கள், கௌட தேசமான ஸரஸ்வதி நதிக்கரையைப் பூர்விகமாகக்
கொண்டாலும் பஞ்ச திராவிட பிராமணர்களின் ஒரு அம்சமாகவே தற்பொழுது
திகழ்கிறார்கள்”.
- பிராமின் டுடே, செப்டம்பர், 2013.
இந்தியத்
துணைக் கண்டத்தில் உள்ள பிராமணர் களை இரண்டு பெரும் பிரிவுகளாகப்
பிரித்திருக்கி றார்கள். ஒரு பிரிவினர் கௌட பிராமணர்கள் - இன்னொரு
பிரிவினர் திராவிட பிராமணர்கள். விந்திய மலைக்கு வடக்கே காசுமீர் வரையில்
உள்ளவர்களைக் கௌட பிராமணர்கள் என்கிறார்கள். விந்திய மலைக்குத் தெற்கேயும்
விந்திய மலைக்குத் வடமேற்கே குசராத் வரையிலும் உள்ள பிராமணர்களைத் திராவிட
பிராமணர்கள் என்கிறார்கள்.
கௌட
பிராமணரில் பல உட்பிரிவுகள் உள்ளன. திராவிட பிராமணரிலும் பல உட்பிரிவுகள்
உள்ளன. திராவிட பிராமணர்களை ஐந்து பெரும் உட்பிரிவு களாகப்
பிரிக்கிறார்கள். அவர்கள் பஞ்ச திராவிடர்கள் (பஞ்ச - ஐந்து) என்கிறார்கள்.
பஞ்ச திராவிடரில் ஒரு பிரிவினர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
“புலம்
பெயர்ந்த திராவிட பிராமணர்களில் ஒரு பிரிவினர் சௌராஷ்டிராவிலிருந்து
தெற்கே காவிரிக் கரைப் பகுதிக்கு வந்தார்கள். குறிப்பிட்ட இந்த பிராமணக்
குழுவினர் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் ஏன் தமிழ்நாட்டிற்கு இடம்
பெயர்ந்தார்கள் என்ற காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட
பிராமணர்கள் புலம் பெயர்ந்த அந்தக் காலத்தில், வடமேற்கு இந்தியக்
கண்டத்தில் (இப்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியா)
குசராத் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய ஊடுருவல் தாக்குதல்களால் முழு அளவில்
சண்டைகளும் அழிவுகளும் நடந்து கொண்டிருந்தன. சௌராஷ்டிரர்கள் பழங்கால
சரசுவதி ஆறு ஓடிய பகுதியில் வாழ்ந்தவர்கள். சௌராஷ்டிரா என்பது
மேற்கிந்தியாவில், கத்தியவார் தீபகற்பத்தில், இப்போது குசராத் மாநிலமாக
உள்ள பகுதியில் இருந்த ஒரு முன்னாள் நாடு; அது சொருத் என்றும் சொரத்
என்றும் அழைக்கப்பட்டது; சரஸ்வதி ஆறு ரிக் வேதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளிலிருந்து இறங்கி பேராற்றலுடன் ஓடி வந்த அந்த
ஆற்றின் கரைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வை அது வளப்படுத்தியது. அவர்களின்
நாகரிகத்தை வளர்த்த தாயாக விளங்கியது. தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த
பிராமணர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்த சரஸ்வத் பிராமணர்களுடன் உறவு
உள்ளவர்களா என்பது தெரியவில்லை. அந்த சரஸ்வத் பிராமணர்கள் தாம் இந்தியத்
துணைக்கண்டம் முழுவதும் இடம் பெயர்ந்து சென்றவர்கள்.
“காவிரி
மண்டலத்திலிருந்து (திராவிட) பிரா மணர்கள், தமிழ்நாட்டின் மற்ற
பகுதிகளுக்கும் வடக்கே ஆந்திரப் பிரதேசத்திற்கும் 600 முதல் 300 ஆண்டுகள்
வரை இடம் பெயர்ந்தார்கள். சென்னையிலிருந்து 194 மைல் தொலைவில் காவிரிக்
கரையில் உள்ள, தமிழ்நாட்டின் தொன்மைமிக்கக் கோயில் நகரமான
கும்பகோணத்திலிருந்து ஆராம திராவிட பிராமணக் குடும்பங்கள் (Aaraama
dravidaBrahmin families) சில (ஆந்திரப் பிரதேசத்திற்கு) புலம் பெயர்ந்தன.
கும்பகோணம் புராணக் கதைகள் தொடர்புடையது. மேல் விவரத்திற்கு Kanchi
Kamakoti Peetam இணையதளத்தைப் பார்க்கவும்.
(சான்று: வெப்பச்சேடு கல்வி அறக்கட்டளை இணையதளம், http://www.vepachedu.org/mana sanskriti/ aaraamadraavida.html)
தமிழர்
என்றால் அதில் பிராமணர்களும் சேர்ந்து கொள்வார்கள்; திராவிடர்கள் என்றால்
அதில் பிராமணர்கள் சேர முடியாது என்று பெரியார் கூறினார். அதற்கு ஆதரவாக
ஏதாவது சான்றுகள் காட்டினாரா? இல்லை! பெரியாரின் “பகுத்தறிவு” வழிப்பட்ட
ஆராய்ச்சி முறை இதுதானோ? “அறிவு ஆசான்” ஆதாரங்கள் காட்ட வேண்டிய கட்டாயம்
இல்லையோ?
இதற்குமுன் நாம் காட்டியுள்ள
மனுஸ்மிரிதி நூல் முதல் பிராமின் டுடே வரை உள்ள சான்றுகள் சீரழிந்த
ஆரியர்களும் பிராமணர்களும் தான் திராவிடர்கள் என்று கூறுகின்றன.
தமிழர்களைத் திராவிடர்கள் என்று சொல்லவில்லை. நீண்டகாலம் ஆட்சியை இழந்து
அடிமைப்பட்ட நிலையில், தமிழர்கள் தங்களுக்கு ஆரியப் பார்ப்பனர்கள் இழிவாகப்
பெயரிட்டழைத்த சூத்திரர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். அதே
பாணியில் திராவிடர் என்ற பெயரையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வரலாற்று
அடிப்படையில் பார்த்தால் தமிழ் இனத்தில் ஒரு போதும் நால் வருணம்
இருந்ததில்லை. திராவிடர் என்ற பெயரையும் தமிழர் ஏற்றதில்லை.
மேலே
நாம் காட்டியவை பழங்காலச் சான்றுகள். இப்போது பிராமணர்கள் தங்களைத்
திராவிடர்கள் என்று கூறிக் கொள்கிறார்களா என்ற வினா எழலாம். இப்பொழுதும்
பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் கள் என்று கூறிக் கொள்கிறார்கள். தனிநபர்
மட்டும் அல்லர்; பிராமணப் பிரிவுகள் பலவும் தங்களைத் திராவிடர்கள் என்று
கூறிக்கொள்கின்றன.
தற்கால தனிநபர்
சான்றுகளாக மைலாப்பூர் சமற்கிருதக் கல்லூரி பேராசிரியர் மணி திராவிட்,
மட்டை பந்து வீரர் இராகுல் திராவிட் ஆகியோர் பிராமணர்களே!
தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவே திராவிடப் பிராமணர் என்று ஒரு பிரிவினர் கூறு கிறார்கள்.
‘புதூரு
திராவிட பிராமணர்கள்’ என்ற பிரிவினர் இருக்கிறார்கள். “புதூரு’’ என்ற ஊர்
ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறது. புதூரைச்
சுற்றியும் சித்தூர் பகுதியிலும் உள்ள பிராமணர்கள் புதூரு பிராமணர்கள்
என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை
மாவட்டம் கண்ட்ரமாணிக்கம் அக்ரகாரத்திலிருந்து நெல்லூர் புதூருக்குப்
போனவர்கள். புதூரு திராவிட பிராமணர்கள் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
பிரகச் சரணம் என்ற பிரிவில் இவர்கள் வருகிறார்கள். விஜய நகர அரசைச் சேர்ந்த
சதா சிவராயா என்பவர் நெல்லூருக்கு கிழக்கே பத்து மைலில் உள்ள மமிடிபுடி
என்ற கிராமத்தை புதூரு திராவிட கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த
பிராமணர்களுக்குத் தானமாக கி.பி. 1650-இல் வழங்கினார் என்று வரலாற்றுச்
சான்று உள்ளது. (காண்க: www.pudurdravida.com )
நெல்லூர் மாவட்டத்தில் இன்றைக்கும் புதூரு திராவிட சங்கம் -- புதூரு திராவிட பிராமணர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரப்
பிரதேசத்தில் -- அதே நெல்லூர் -- சித்தூர் பகுதிகளில் வாழும் தமிழர்களைத்
திராவிடர்கள் என்று அழைப்பதில்லை. அவர்களை அரவா - வாண்டு அல்லது அரவாடு
என்றுதான் அழைக்கிறார்கள். அங்கு வாழும் தமிழ் பிராமணர்களை மட்டும் திராவிட
பிராமணர்கள் என்று அழைக்கிறார்கள். “அரவா -- வாண்டு” என்றால் நாகப் பாம்பை
வணங்குவோர் வழிவந்தவர்கள் என்று பொருள்.
புதூரு
திராவிட சங்க நெல்லூர் மாவட்ட ஆயிரமாவது மலரில் (The Pudur Dravida
Association of Nellore Dt. Millennium Souvenir) தமிழ்நாட்டின் முன்னாள்
முதல்வர் செயலலிதா புதூரு திராவிட பிராமணர் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்று
குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான திராவிடச் செல்விதான்!
புதூரு திராவிட பிராமணர்கள் தமிழ் பேசுவோர் என்றாலும் தமிழர் அல்லர் என்பதைப் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.
புதூரு
திராவிடர்கள் ஸ்மார்த்தர் எனப்படும் வேத வழியினர். அவர்கள்
மனுஸ்மிருதியைப் பின்பற்றுவோர். அவர்கள் சிவனையோ அல்லது விஷ்ணுவையோ
வணங்குவது அவரவரின் தனிநபர் பழக்கமே தவிர அது அவர்களின் அடிப்படை (basic)
அன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த வைத்தியநாதத் தீட்சிதர் எழுதிய “வேதக்
கரணவியல் கையேடு” ((Manual of Vedic rituals) என்ற நூல்தான் புதூர்
திராவிடர்களுக்கும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள எல்லா தமிழ் பிராமணர்
களுக்கும், விசிஸ்டாத்வைதத்தைப் பின்பற்றும் எல்லா வகைப் பிராமணர்களுக்கும்
அதிகாரம் படைத்த சமயநெறி நூல்.
நெல்லூர்
வரை போவானேன், சென்னையில் உள்ள திராவிடப் பிராமணர்களைப் பார்ப்போம்.
சென்னையில் தென் கனரா திராவிட பிராமணர் சங்கம் (The South Kanara Dravida
Brahmin Association, Chennai) என்பது 1953 அக்டோபர் 19 அன்று பதிவு
செய்யப்பட்டது. இன்றும் அச்சாங்கம் செயல்பாட்டில் உள்ளது. (அவர்களது
இணையதளம்: www.skdb association.com).
1912
வாக்கில் கர்நாடகத்தின் தென் கனரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து
சென்னையில் குடியேறிய பிராமணர்களின் சங்கம் தான் அது. தென் கனரா
பிராமணர்களுக்காக 2005இல் “கரவளி அலெகளு” ((Karavali Alegalu) என்று ஓர்
இதழையும் வெளியிட்டுள்ளார்கள்.
இவற்றையெல்லாம்
பார்க்கும்போது திராவிடர் என்றால், அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்
என்று பெரியார் கூறியது உண்மை நடப்பிற்கு மாறான தாக இருக்கிறது. “ஒரு வேளை
நாங்களும் திராவிடர்கள் தான் என்று பார்ப்பனர்கள் வந்தால் - பூணூலைக்
கழற்றிவிட்டுத் தங்களின் ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் விட்டுவிட்டு
வந்தால் அப்போது அவர் களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்” என்று
பெரியார் கூறினார்.
தாங்கள்
திராவிடர்கள்தாம் என்று அடையாளங் காட்டிக் கொள்ள பிராமணர்களுக்குப்
பெரியாரின் சான்றளிப்புத் தேவைப்படவில்லை. காரணம், பெரியார் பிறப்பதற்குப்
பல நூறாண்டுகளுக்கு முன்பே -- அவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அடையா
ளப்படுத்தி வருகிறார்கள். அதற்கான நூல்கள் எழுதி யுள்ளார்கள்.
பிற்காலத்தில் திராவிடப் பிராமணர்கள் சங்கம் என்று சென்னையிலேயே பதிவு
செய்திருக்கி றார்கள்.
பிராமணர்களைத் திராவிடர் என்று ஆதிசங்கரர் கூறியதைப் பார்ப்போம்.
“தவ ஸ்தன்யம் மன்யே தரனிதர - கன்யே ஹ்ருதய:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம் மிவ!
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு - ராஸ்வாத்ய த்வயத்
கவீனாம் ப்ரௌடானா - மஜனி கமனீய: கவயிதா!’’
தமிழில்:
அம்மா, உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்து பெருகும்
பாற்கடல். கலை வாணியே அந்தப் பாலாக உருவெடுத்தது போல் தோன்றுகிறது! உன்னால்
கருணையுடன் தரப்பட்ட, பாலைக் குடித்த திராவிடக் குழந்தை ஒருவன்,
கற்றறிந்தோர் போற்றும் பெருங்கவிஞனாக ஆகி விட்டான் அன்றோ?”
- ஆதிசங்கரர், சௌந்தர்ய லகரி, பாடல் எண்: 75.
திராவிடக்
குழந்தை (திராவிட சிசு) என்று ஆதி சங்கரர், ஏழாம் நூற்றாண்டில்
தமிழ்நாட்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகிறார் என்று விளக்க
மளிப்போரும் உளர். இல்லையில்லை ஆதி சங்கரர் தம்மையே திராவிட சிசு என்று
கூறிக் கொண்டார் என்று விளக்கமளிப்போரும் உளர்.
இவ்விருவரும்
ஆரிய பிராமணரே! இவ்விருவரில் யாரைச் சொன்னாலும் பிராமணரைத் திராவிடக்
குழந்தை என்று சொன்னார் என்பதாகிறது. திருஞான சம்பந்தர், கௌனிய கோத்ர ஆரிய
பிராமணர்!
பிரித்தானியா கலைக் களஞ்சியம் கூறுவதைப் பார்ப்போம்.
DRAVIDIAN,
a name only applied in Indian usage to the ‘Southern’ group of the
Brahmans q.v. But “Dravidian” is applied, unfortunately, to the
indigenous peoples of India South of the Vindhyas and to the Nothern
half of Ceylon; it should be confined to the languages of this area.
E.Thurston, Castes and Tribes of Southern Indian, i. (exhaustive introduction), 1999; Cambridge History of India vol I. (1923 ; R.D. Dixon, Racial History of Mankind (1921).
E.Thurston, Castes and Tribes of Southern Indian, i. (exhaustive introduction), 1999; Cambridge History of India vol I. (1923 ; R.D. Dixon, Racial History of Mankind (1921).
(Encylopaedia Britannica, Vol. 7. Edn. 15, (1947), p. 624)
(இம்மேற்கோள்
தந்து உதவியவர் பேரா. த. செயராமன், இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர்
(3), தமிழர் கண்ணோட்டம் கட்டுரை, ஏப்ரல் 2010.)
இதன்
தமிழாக்கம்: “திராவிடன் என்பது இந்திய வழக்காற்றில் பிராமணர்களில்
‘தெற்கு’ குழுவினரை மட்டும் குறிப்பது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியா வில்
விந்திய மலைக்குத் தெற்கேயும் இலங்கையில் வடபாதியிலும் உள்ள மண்ணின்
பழங்குடி மக்களைக் குறிப்பதாயிற்று. இந்த மண்டலத்தின் மொழிகளை மட்டுமே
இச்சொல் குறிப்பதாக வரம்பு கட்ட வேண்டும்’’.
தென்னாட்டுப்
பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்தான் திராவிடன் என்பது. கெடுவாய்ப்பாக,
பிற்காலத்தில் மரபு வழிபட்ட மண்ணின் மக்களைக் குறிப்பதாயிற்று என்று
கூறுகிறது பிரித்தானிய கலைக் களஞ்சியம்.
திராவிடர்
என்ற சொல் தமிழர்களை ஒருபோதும் குறிக்காது. ஏனெனில் ஆரியர் சிந்து
சமவெளிப் பகுதிக்குள் நுழையும் முன்பே இந்தியத் துணைக் கண்டமெங்கும்
வளர்ச்சியடைந்த நாகரிகத்துடன், வளர்ச்சியடைந்த மொழியுடன், தமிழர் என்ற இன
அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
திராவிடர்
என்ற சொல் ஆரியர்களால் - ஆரியப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல்.
சிந்து சமவெளிக்குள் புகுந்த ஆரியர்கள் வளர்ச்சியடைந்த நகர நாகரிகத்துடன்
வாழும் தமிழர்களையும் வளர்ச்சியடைந்த அவர்களின் தமிழ் மொழியையும்
பார்க்கிறார்கள். தமிழ், தமிழர் என்பதை த்ரமிள -- த்ரமிட - த்ரவிட -
த்ராவிட என்று திரிபாக உச்சரித்தார்கள் என்று பாவாணர் கூறுகிறார். மற்றும்
சிலரும் இவ்வாறு கூறுகின்றனர். “திராவிட’’ என்ற கொச்சைத் திரிபுப் பெயரைத்
தமிழர்கள் ஏற்கவில்லை. எனவே, தமிழரைத் தமிழர் என்றும் தமிழர் வாழும் தாயகப்
பகுதிகளை திராவிட என்றும் ஆரியப் பிராமணர்கள் அழைத்திருக்க வேண்டும்.
மேய்ச்சல்
சமூகமாக இந்தியத் துணைக் கண்டத் திற்குள் நுழைந்த ஆரியர்கள் - பல
நூறாண்டுகளுக்குப் பின், நிலைத்த சமூகமாகக் கங்கைச் சமவெளியில் வாழத்
தொடங்கினர். அதனை ஆரிய வர்த்தம் என்றனர். ஆரிய வர்த்தத்தில் வாழும்
ஆரியர்களும் ஆரியப் பிராமணர்களும் உயர்வானவர்கள். ஆரிய வர்த்தப்
பிராமணர்கள் கௌட பிராமணர்கள். ஆரிய வர்த்தத்திற்கு வெளியே, விந்திய
மலைக்குத் தெற்கேயும் வடமேற்கில் சிந்துச் சமவெளி மண்டல மான குசராத்திலும்,
இப்போதைய பாகிஸ் தானிலும் பரவி வாழ்ந்த பிராம ணர்கள் தாழ்வானர்கள். அவர்
களைக் குறிக்கத் திராவிடர்கள் என்ற சொல்லைக் கௌட பிராம ணர்கள்
கையாண்டிருக்க வேண் டும். ஏன்?
தங்களைத்
திராவிடர்கள் என்று திரிபாகக் கூறுவதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ஆனால்
அவர்கள் வாழும் நிலப்பகுதியை திராவிட நாடு, திராவிட தேசம், திராவிட பூமி
என்று பிராமணர்கள் குறித் திருக்க வேண்டும். அதனால் ஆரிய வர்த்தத் திற்கு
வெளியே தெற்கேயும் வடமேற் கேயும் வாழ்ந்த பிராமணர்கள் அனைவரையும்
திராவிடர்கள் என் றார்கள். விரிந்து பரந்த நிலப்பகுதி களில் வாழ்ந்த
திராவிட பிராமணர் களை மொழி வழி அடையாளம் காண பஞ்ச (ஐந்து மண்டல)
திராவிடர்கள் என்று அடையாளப் படுத்தினார்கள்.
வடமொழியில்
(சமற்கிருதத் தில்) கூறப்படும் 56 தேசங்களில் பாண்டிய தேசம், சேர தேசம்,
சோழ தேசம், திராவிட தேசம் என்பவை வருகின்றன. தமிழர் அனைவரும் திராவிடர்
என்றால், பாண்டிய தேசம், சோழ தேசம், திராவிட தேசம் என்பவை தனித்தனி பெய
ருடன் தனித்துவத்துடன் 56 தேசத் தொகுப்பில் இருந்திட வாய்ப்பில்லை.
ஆய்வாளர்
பி. வி. ஜெகதீச அய்யர் 1918 இல் எழுதிய “புராதன இந்தியா’’ நூலில் 56
தேசங்களை தொகுத் துள்ளார்; அவற்றுள் சேர தேசம், சோழதேசம், பாண்டிய தேசம்
ஆகியவற்றுடன் திராவிட தேசம்
என்பதும்
தனியே குறிப்பிடப் பட்டுள்ளது என்று பேராசிரியர் த. செயராமன் தமது இனவியல்
ஆய்வுக் கட்டுரையில் (தமிழர்கண்ணோட்டம்) குறிப்பிடுகிறார்.
எந்த
வகையில் பார்த்தாலும் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை. தமிழர்கள் -
தமிழர்கள்தாம். பிராமணர்கள்தாம் திராவிடர்கள். எந்த வகை ஆராய்ச்சிக்கும்
இடங்கொடுக்காமல், “திராவிட’’ என்ற பெயரை தமிழர் தலையில் சுமத்தினார்
பெரியார். அவர் அவ்வாறு திராவிடத் திணிப்பு செய்த காலத்திலேயே தெலுங்கர்,
கன்னடர், மலையாளிகள் தங்களைத் திராவி டர்கள் என்பதை ஏற்கவில்லை.
நீதிக்கட்சியில், தெலுங்கர் தெலுங்க ராகவும், மலையாளி மலையாளியா கவும்தான்
இருந்தார்கள். ஏமாளித் தமிழர்கள் தாம், பெரியாரின் திராவிடத் திணிப்பை
ஏற்று, வெகு மக்கள் அளவில் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொள்ளத் தலைப்
பட்டார்கள்.
பழைய சென்னை
மாகாணத்திலிருந்து, தெலுங்கு, கன்னட, மலை யாளப் பகுதிகள் பிரிந்து போய்
விட்டன. இப்பொழுதுள்ள தமிழ் நாட்டில் வாழும் தெலுங் கரோ, கன்னடரோ, மலையா
ளியோ தங்களைத் திராவிடர் எனறு கூறிக் கொள்கிறார்களா? இல்லை. பின்னர்
இன்னும் தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர் என்று ஏன் கூறிக் கொள்ள
வேண்டும்?
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்
கர்களில் ஒரு சாரார் தங்களைத் தெலுங்கர் என்று கூறிக் கொண்டு தெலுங்கர்
மாநாடு நடத்துகிறார்கள். சிலர் தெலுங்கு தேசம் கட்சியையே இங்கு தொடங்
கியுள்ளார்கள்.
இங்கு மலையாளிகள்,
மலையா ளிகள் மாநாடு நடத்துகிறார்கள்; மலையாளிகள் சங்கம், கேரள சமாஜம்
ஆகியவற்றை நடத்துகி றார்களே அன்றி திராவிடர் சங்கம் நடத்தவில்லை.
ஆனால்
திராவிடக் கட்சிகள் இன்னும் ஏமாளித் தமிழர்கள் முகத்தில் திராவிட
முகமூடியை மாட்டி விடுகின்றன. வரலாறு அவர்களை மன்னிக்காது! தமிழர்
திருவிழாவான பொங்கல் விழாவை அண்மைக் காலமாக தி.க. தலைவர் திரு. கி. வீரமணி
அவர்கள் திராவிடர் திருநாளாக மாற்றிக் கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்களும், கன்னடர் களும் உகாதி விழா கொண்டாடுகிறார்கள், மலையா ளிகள் ஓணம் கொண்டாடுகிறார்கள்,
திராவிடர் கழகமோ தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடுகிறது.!
திராவிடத் தலைவர்களுக்குத் தமிழ் இனத்தின் மீது இத்தனை காழ்ப்பு ணர்ச்சியும் வஞ்சகமும் ஏன்?
(இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள இணையதள மேற்கோள்கள் தந்தவர் தோழர் க. அருணபாரதி)
(தொடரும்)
(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2016 ஏப்ரல் 16 இதழில் வெளியானது.)
Labels: கட்டுரைகள், தமிழ்த் தேசியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்