"திராவிட அரசியலின் தலைவர் வழிபாடும் செயலலிதாவின் தெய்வீகப் படிமமும்" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
Saturday, April 16, 2016
"திராவிட அரசியலின் தலைவர் வழிபாடும் செயலலிதாவின் தெய்வீகப் படிமமும்"
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.
“தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவைச் சந்தித்து, தமிழ்நாட்டு மின்
திட்டங்கள் குறித்துப் பேச வாய்ப்பளிக்கவில்லை. பலமுறை முதல்வரைச் சந்திக்க
வாய்ப்புக் கேட்டும் தமக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை” என்று நடுவண்
மின்துறை இணையமைச்சர் பியுசு கோயல் 25.03.2016 அன்று புது தில்லியில் நடந்த
கருத்தரங்கொன்றில் பேசினார்.
நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் பிரகாசு சவடேகர், 31.03.2016 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டு முதலமைச்சரை நடுவண் அமைச்சர்கள் சந்திக்க முடிவதில்லை என்றார்.
நடுவண் அமைச்சர்கள் இருவரும் குறிப்பாக இரண்டு செய்திகளில் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வில்லை என்கிறார்கள்.
கோயல்
சொல்வது; தமிழ்நாட்டு மின்பற்றாக்குறையை சரி செய்திட நடுவணரசின் மின்துறை
மறுசீரமைப்புத்திட்டத்தை (உதய்) பயன்படுத்தலாம். மின்சாரத்தை சேமிக்கக்
குறைந்த விலையில் எல்.இ.டி. மின்விளக்குகளை நடுவண் அரசு மானிய விலையில் ரூ
100க்கு விற்க முன்வந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்துத்
தனியாரிடம் எல்.இ.டி. விளக்குகள் வாங்குகிறது. இது பற்றியும் இன்னும் சில
திட்டம் பற்றியும் முதல்வர் செயலலிதாவிடம் பேச நேரம் கேட்டும்
கொடுக்கவில்லை. இந்தியாவில் 28 மாநில முதலமைச்சர்களைச் சந்தித்துப்
பேசிவிட்டேன். 18 மாதகாலத்தில் 29 வது மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சரை
மட்டும் சந்திக்க முடியவில்லை.
சவடேகர்
சொல்வது; மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாப்பது தொடர்பாக –
கஸ்தூரிரெங்கன் குழு அறிக்கை மீது 6 மாநிலங்களிடம் கருத்துக் கேட்டோம். 5
மாநிலங்கள் கருத்து அனுப்பிவிட்டன, தமிழ்நாடு மட்டும் இன்னும்
அனுப்பவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்திக்கவும் முடியவில்லை.
தமிழ்நாட்டைச்
சேர்ந்த நடுவண் இணையமைச்சர் பொன். இராதாகிருட்டிணனும் முதல்வரைச் சந்திக்க
முடியவில்லை என்கிறார். சென்னைத் துறைமுகம் – மதுரவாயில் இடையே பறக்கும்
பாலம் அரைகுறையாக நிறுத்தப்பட்டுக் கிடக்கிறது. அது தொடர்பாக முதல்வருடன்
பேசி அவ்வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் முதல்வரைச் சந்திக்க
வாய்ப்பில்லை என்கிறார்.
நடுவண்
அரசைவிட மாநில அரசு அதிக அதிகாரம் படைத்ததா? நடுவண் அமைச்சர்களிடம்
பேசாமலேயே தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களை மாநில அரசால்
செயல்படுத்திவிட முடியுமா?
அப்படி
எல்லாம் அதிகாரமிருந்தால் நாம் ஏன் தமிழ்நாட்டை இந்தியாவின் காலனி என்று
சொல்கிறோம்! தமிழ்நாட்டிற்கு இறையாண்மை வேண்டும் என்று கோருகிறோம்?
பிறகேன், நடுவண் அமைச்சர்கள் சந்தித்துப் பேச வாய்ப்புக் கேட்டும் 18 மாதங்களாக சந்திக்க வாய்ப்பளிக்காமல் இருக்கிறார் செயலலிதா?
இந்திய ஏகாதிபத்திய அரசின் அதிகாரக் குவியலை – ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக அதன் அமைச்சர்களைச் சந்திக்க மறுக்கிறாரா செயலலிதா?
இல்லை! இந்தியத் தேசிய வெறியில் நரேந்திரமோடிக்கு இணையானவர் செயலலிதா!
தமிழ்நாட்டில்
மின்சாரத்துறை இருக்கும் போது இந்திய அரசுக்கு ஏன் மின்சாரத்துறை என்று
கேட்பரவா? இல்லை! தமிழ்நாட்டில் சுற்றுச்சுழல் துறையும் வனத்துறையும்
இருக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள காடுகளுக்கும் மலைகளுக்கும் தில்லியில்
ஏன் அதிகாரமுள்ள அமைச்சர் என்று இதுவரை கேட்டாரா செயலலிதா? இல்லை!
பிறகு
ஏன் செயலலிதா நடுவண் அமைச்சர்களைச் சந்திக்க மறுக்கிறார்? ஆணவமா?
இறுமாப்பா? அவையெல்லாம் அவர்க்குண்டு; ஆனால் அவையல்ல நடுவண் அமைச்சர்களை
அவர் சந்திக்க மறுக்கும் காரணம்! அது ஓர் உளவியல் உத்தி! அது ஒரு சாகசத்
தந்திரம்!
யாரும் எளிதில் அணுக முடிந்த
சராசரித் தலைவர் அல்லர்; காட்சிக்கு அரியர்; கைக்கெட்டாத உயரத்தில் உள்ள
அறிவின் சிகரம்; ஆற்றலின் கொடுமுடி! – இவ்வாறான கற்பனைப் படிமம் படிக்காத
பாமரர்களிடமும், படித்த பாமரர்களிடமும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பது
செயலலிதாவின் உளவியல் உத்தி! அவர் ஒரு சராசரித் தலைவர் இல்லை; சாகசத்
தலைவி; ஆம் புரட்சித் தலைவி! இந்த படிமம் சிதையக் கூடாது என்று
கருதுகிறார்.
இந்த உளவியல் உத்தியை
1991 – 96இல் முதல் முதலாக முதலமைச்சராக இருந்தபோது, செயலலிதா அரைகுறையாக
வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தார். மற்றவர்கள் தன்னைக் குனிந்து வணங்கினால்
போதும் என்று எதிர்பார்த்தார்; அவர்களோ காலில் கும்பிட்டு விழுந்தார்கள்!
மெத்தப் படித்தவர்கள்; மீசையை முறுக்கி, நான்தான் ஊரில் ஒன்னாம் நம்பர்
என்றவர்கள்; இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணிகளில் உள்நாட்டுத்
துரைமார்களாக விளங்கிய உயரதிகாரிகள் எனப்பலரும் அம்மையாரின் காலில்
விழுந்தார்கள்; அல்லது 90 பாகை உடலை ஒடுக்கி வளைத்துக் கும்பிட்டார்கள்!
’வெற்றி! வெற்றி’ என்று எக்களித்தார் செயலலிதா!
பிறகு
அதுவே அவரின் கவர்ச்சி; அதுவே அவரின் அடையாளம் என்றானது. அம்மாவின்
ஆணைப்படி மழை பெய்தது என்று ஒரு மாவட்ட ஆட்சியரே செய்தியாளர்களிடம்
கூறினார் என்றால் செயலலிதா இருக்கும் உயரத்தை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். அதேவேளை அண்டிப்பிழைக்கும் உளவியலின் பாதாளத்தையும் புரிந்து
கொள்ளலாம்.
இந்தியாவில் வேறு எந்த
மாநிலத்திலும் இல்லாத இந்த கோபுர உச்சி அரசியல் தலைமை, தமிழ்நாட்டில்,
செயலலிதாவிற்கு எப்படி வாய்த்தது! கோபுர உச்சியில் குந்திக் கொண்டு
கோலோச்சுவதற்கான அரசியல் பாதையை செயலலிதா, தானே போட்டுக் கொள்ளவில்லை. அவர்
அரசநடை போட்டு ஏறிச் செல்ல தமிழ்நாட்டு அரசியலில் அவரின் முன்னோர்கள்
ஏற்கெனவே படிக்கட்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிவைத்தார்கள்.
செயலலிதாவின்
நேரடித் தலைவர் எம்.ஜி.ஆர்! அவர் முதலில் புரட்சி நடிகர்; பின்னர்
புரட்சித் தலைவர்! எந்தப் புரட்சியில் பங்கேற்றார்? திரைப்பட சாகசக்
கதாநாயகன்! உலகெங்கும் சாகசக் கதாநாயகர்கள், மக்கள் குரலை திரையில்
எதிரொலித்தோர் பலர் உண்டு! அவர்களில் யாருக்கும் புரட்சி நடிகர் என்று
பட்டம் கொடுத்ததாகத் தெரியவில்லை. விடுதலைப் போர் நடத்திய தமிழீழத் தேசியத்
தலைவர் பிரபாகரன் கூடப் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர்!
எம்.ஜி.ஆருக்குத்
தலைவர் முதலில் அண்ணா, பின்னர் கருணாநிதி! கருணாநிதி முதலமைச்சர் ஆனபின்
காமராசரைப் போல், அண்ணாவைப் போல் சாதாரண முதலமைச்சராக இல்லை. அவரை
இராசராசச் சோழன் என்றார்கள்; அவருக்கு மேடைகளில் வாள் கொடுத்தார்கள்;
முடிசூட்டினார்கள், மக்கள் எளிதில் சந்திக்க முடியாமல். கொஞ்சம் கொஞ்சமாய்
தம்மை அவர் எட்டிவைத்துக் கொண்டார்.
அந்தத்
தொலைவுதான் பாமரமக்களிடமும் படித்த பாமரர்களிடமும் தம்மீது ஒரு கவர்ச்சி
ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்தார். முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர்கள்,
முத்தமிழ் வல்லவர்கள், கருணாநிதியைப் பாராட்டியும் பாடியும் பரிசு பெறும்
நவீனப் பாணர்கள் ஆனார்கள்! பாராட்டில்லாத நாள் பாழ்பட்ட நாள் என்ற மனநிலை
அவரிடம் வளர்ந்தது.
கருணாநிதி என்று
அவர் பெயரைச் சொல்வதே, அவரை அவமானப் படுத்துவதாகும் என்றார்கள். கலைஞர்
என்றார்கள். அதிகாரக் காலம் அதிகமாக – அதிகமாக – அகவையும் கூடிட, “வாழும்
வள்ளுவர் என்றார்கள்! தப்பித்தவறி கருணாநிதி என்று சட்டப் பேரவையில்
யாராவது பெயர் சொல்லிவிட்டால், ”ஆரையடா சொன்னாய், அடேய், தலைவர் பேரையடா
சொன்னாய்” என்று மாண்புமிகு அமைச்சர்களும் மாண்புமிகு சட்டப் பேரவை
உறுப்பினர்களும் ஆவேசப்பட்டு முண்டா தட்டுவார்கள்!
இவையெல்லாம்
கருணாநிதி மட்டுமே சிந்தித்து உருவாக்கிக் கொண்ட தலைமைக் கவர்ச்சி
சொல்லடுக்குகள் அல்ல! பல பேரின் கூட்டுழைப்பு! ஆம் திராவிட இயக்கத்
தலைவர்களின் கூட்டுழைப்பு!
திராவிடக்
கட்சிகளின் பிரமுகர்கள் பெயருக்கு முன்னொட்டாக ஒரு பட்டம் அல்லது சிறப்பு
அடையாளப் பெயர் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத விதியாக்கினார்கள்.
சிற்பி, கொத்தனார் போன்ற பட்டங்கள் போட முடியவில்லை என்றால் அவரவர் ஊர்ப்
பெயரையாவது முன்னொட்டாக சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறாக சராசரி
மக்களிடமிருந்து தங்களை அயன்மைப் படுத்தி தனிஅடையாள உயரத்தில் தங்களை
இருத்திக் கொள்வார்கள்.
அதாவது திராவிட
இயக்கப் பிரமுகர்கள், மக்களுக்கு ஒரு பூதக்கண்ணாடியை மாட்டிவிடுவார்கள்.
அது மனக்கண்ணில் மாட்டிவிடும் உளவியல் பூதக்கண்ணாடி. சொல்ஒப்பனை மூலம்
தங்கள் உருவத்தை பெரிதாக உருவாக்கிக் கொண்டு, அதனை மேலும் பெரிது படுத்திக்
காட்டும் அலங்காரப் பேச்சை, ஒரு பூதக்கண்ணாடியாக மக்கள் மனக்கண்ணில்
மாட்டிவிடுவார்கள்.
புராணப்புனைவுக்
கதாநாயகர்களை மறுத்த திராவிட இயக்கத்தார் – அந்தப் புராணக் கதாநாயகர்கள்
மக்கள் மனத்தில் வீற்றிருந்த இடத்தில், தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.
இவ்வாறாகத் தலைவர்கள் பெரும் பெரும் பூதங்கள் ஆனார்கள்.
எதுவுமே
இருந்தபடி அப்படியே இருக்காதல்லவா! வளரவேண்டும் அல்லது தேய வேண்டும்
என்பது இயங்கியல் விதி! திமுக கட்டியெழுப்பிய பூதங்களும் மாட்டிவிட்ட
பூதக்கண்ணாடிகளும் பலமடங்கு வளர்ந்து இன்று செயலலிதா என்ற பெரும் பூதமாகத்
தமிழ்நாட்டு அரசியலில் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நிற்கிறது. கருணாநிதி
மாட்டிவிட்ட பூதக்கண்ணாடியை விட நூறுமடங்கு உருவத்தைப் பெரிதுபடுத்திக்
காட்டும் பூதக்கண்ணாடியை மக்களுக்கு செயலலிதா மாட்டிவிட்டுள்ளார்.
திராவிட
இயக்கம் ஏற்கெனவே கட்டிவைத்த கற்பனைக் கவர்ச்சிப் படிக்கட்டுகளில்
ஏறித்தான், உச்சியில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டார் செயலலிதா! இந்தக்
கற்பனைப் படிக்கட்டுகளை கட்டுவதற்குப் பெரும்பாடுபட்ட கருணாநிதியைக் கீழே
உருட்டிவிட்டார் செயலலிதா. வினைவிதைத்தவர் வினைஅறுப்பார் என்பது முதுமொழி!
இப்பொழுது
செயலலிதா என்று பெயரைச் சொன்னால் அபச்சாரம்! தெய்வக்குற்றம்! “இதய
தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா” என்ற மூன்று அடைமொழிகளையும் சேர்த்து
உச்சரிப்பது தான் உண்மையான விசுவாசத்திற்கு அடிப்படை அளவுகோல். அதே
திராவிடத்தின் எதிர் முனையில் “தளபதி” உலாவருகிறார். அவரை ஸ்டாலின் என்று
திமுக காரர் ஒருவர் சொல்லிவிட்டால், அதைவிடக் கொடிய ஒழுங்கு மீறல்
அக்கழகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது.
செயலலிதாவின்
உண்மை விசுவாசிகளின் கூடாரமாக அதிமுக! ஸ்டாலினது உண்மை விசுவாசிகளின்
கூடாரமாக திமுக! கருணாநிதியின் குடும்பவாரிசுகளின் சொத்து திமுக!
செயல்லிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால், குடும்பமல்லாத குடுபங்களில் வாரிசு
யார் என்ற போட்டி நடந்து கொண்டுள்ளது.
கருணாநிதி
குடும்பத்துக்கு வெளியில் இருந்து ஒருவர், திமுக வின் இரண்டாம் நிலைத்
தலைவராகிவிடக் கற்பனை கூட செய்ய முடியாது! அதற்கான வாய்ப்பே இல்லை!
தனிநபர் வழிபாடு, ஒற்றை அதிகாரமையத்
தலைமை; தலைமைக்கான வாரிசுரிமை என்பவற்றை எழுதப்படாத அமைப்பு விதிகளாகத்
திராவிடக் கட்சிகள் வைத்துள்ளன. அண்டிப் பிழைக்கும் உணர்வை மக்களிடம்
வளர்த்து விட்டன. இந்த சனநாய மறுப்பு நிலைபாடுகள் அக்கழகங்களோடு நின்றுவிட
வில்லை. அவை ஒரு தொற்று நோய் போல் பரவி, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான
மாநிலக் கட்சிகளைத் தாக்கிவிட்டன.
அவற்றில்
எக்கட்சியிலாவது இரண்டாம் நிலைத் தலைவர் இருந்தால் அவர் கட்சித் தலைவரின்
சொந்த வாரிசாக மட்டுமே இருப்பார்! மற்ற சில மாநிலக் கட்சிகளில் வாரிசுத்
தலைமை இல்லை என்று ஆறுதல் அடையமுடியாது ஏனெனில் அவற்றில் இரண்டாம்
நிலைத்தலைவரோ அல்லது தலைவர்களோ இல்லவே இல்லை!
இவற்றில்
பொதுக்குழு செயற்குழு என்பவை எல்லாம் சனநாயகப் பொம்மலாட்டங்கள்!
இக்கட்சிகளின் தலைவர்கள் சனநாயக சர்வாதிகாரிகள்! கூட்டுத் தலைமை என்பது
எள்ளளவும் இல்லை.
இப்படிப்பட்ட சனநாயக
சர்வாதிகாரிகளையும், வாரிசுத் தலைவர்களையும் உருவாக்கும் சனநாயக மன்னர்களை
தமிழ்மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு போற்றுகிறார்களே, அது
எப்படி?
பொதுவுடைமை இயக்கம், தலைவரோ
தொண்டரோ எல்லாரும் தோழரே என்றது. அப்படியே தலைவர்களையும் அழைத்தது. இன்று
வரை அது நீடிக்கிறது அங்கு சரியான முடிவு எடுக்கிறார்களோ அல்லது தவறான
முடிவு எடுக்கிறார்களோ, கூட்டுத் தலைமை விவாதித்து முடிவெடுக்கபடுகிறது.
பொதுவுடைமை இயக்கத்தில் அனைவரையும் தோழர் என்று விளிப்பதைப் பெரியார்
பாராட்டி, தமது இயக்கத்திலும் எல்லோரையும் தோழர் என்று அழைக்க வேண்டும்
என்று வற்புறுத்தினார். அது சிறிது காலம் சொல்லப்பட்டது. பின்னர் மாறிப்
போனது. அங்கேயும் கேள்விக்கப்பாற்பட்ட தலைமை – தலைமைக்கான குடும்ப அரசியல்
வாரிசு என மாற்றங்கள் ஏற்பட்டன. கழகம் பிளவுபட்டது.
தனிநபர்
குடும்பச் சொத்தாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாற்றப்பட்ட பின் தனிநபர்
பகை அரசியல் வளர்வது இயல்பே! ஒவ்வொரு நேர்விசைக்கும் சமமான எதிர்விசை
உண்டல்லவா! அண்ணாவின் உடன்பிறப்புகளான கருணாநிதியும், செயலலிதாவும் ஒருவர்
முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள சகிக்காத கொடிய பகைவர்களாகிவிட்டார்கள்.
இவ்விருவரின் கீழ்த்தரமான தனிநபர் பகைஅரசியல் தான் தமிழ்நாட்டின் அரசியல்
என்றாயிற்று! இது இவர்களின் குற்றமா? தமிழ்நாட்டு மக்களின் குற்றமா? விடை
தேட வேண்டிய வினா!
சட்டப்பேரவையில்
முதல்வர் செயல்லிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்மை எதிர்க் கட்சித்
தலைவர் விசயகாந்து மூன்று பேரும் பேரவை உறுப்பினராயிருந்தும், இவர்கள்
பேரவையில் அமர்ந்து எந்தச் சிக்கலையும் விவாதித்ததில்லை. தாழ்வாரத்தில்
கையெழுத்துப் போட்டு விட்டு கருணாநிதியும், விசயகாந்தும் அம்பேல்
ஆகிவிடுவார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தால் செயலலிதா பேரவைக்கு
வருவதில்லை. எப்போதாவது ஒரு தடவை வந்து பேசி விட்டுப் போய்விடுவார்.
வெளியிலும்
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதில்லை. அந்த அளவுக்கு அரசியல்
நாகரிகமற்ற, கீழ்த்தரமான பகைவர்களாக அ.தி.மு.க. தலைமையும் தி.மு.க.
தலைமையும் நடந்து கொள்கின்றன. காவிரிச் சிக்கலா, முல்லைப் பெரியாறு
சிக்கலா, மீனவர் சிக்கலா, கூடங்குளம் அணு உலையா, மீத்தேன் திட்டமா, கெயில்
குழாய் பதிப்பதா, இந்தி, சமற்கிருதத் திணிப்பா, ஏழுதமிழர் விடுதலையா,
ஆந்திராவில் இருபது தமிழர் சுட்டுக் கொலையா, உழவர்கள் தற்கொலையா, கடன்
சிக்கலா எதுவாக இருந்தாலும் இவற்றில் எதைக் குறித்தும் சட்டப் பேரவையில்
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கவே
இல்லை; விவாதித்து ஒரு முடிவும் எடுத்ததில்லை. விவாதத்திற்குத்
தடைவிதிக்கும் விதி 110ஐ பயன்படுத்தி அறிவிப்புகள் செய்வது செயலலிதா
வழக்கம்.
மேற்படிச் சிக்கல்களுக்காக
அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடந்ததே
இல்லை. இத்துணை கீழ்த்தரமான அரசியல் அநாகரிகம் தமிழ்நாட்டைத் தவிர
இந்தியாவில் வேறெங்கும் இல்லை.
தலைவர்கள்
ஆனவுடன் தங்களை மக்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதைத் தவிர்த்திட,
ஒதுக்கிவைத்தல் என்பதை விட ஒதுங்கிக் கொள்ளுதல் என்பது நுட்பமான உத்தி.
விடுதலைப்
புலிகளால், ஈழத்தமிழர்களால் செயலலிதா உயிருக்கு ஆபத்து என்று கூறிக்
கொள்வது தொடக்கத்திலிருந்தே பெரும் பித்தலாட்டம். அரண்மனைப் பேரரசியாய்
தன்னை எப்போதும் ஆடம்பரப் படுத்திக்கொள்ள விடுதலைப் புலிகளால் ஆபத்து என்ற
கூச்சலை செயலலிதா பயன்படுத்திக் கொண்டார்.
தமிழ்நாட்டு
அரசியல் சீரழிவின் இப்போக்கில்தான் நடுவண் அமைச்சர்களே முதலமைச்சர்
செயலலிதாவை சந்திக்க முடியாத அவலம்; அசிங்கம் எல்லாம்! நடுவண் அமைச்சர்கள்
உத்தமர்கள் – அப்பாவிகள் என்று கருதிவிடக் கூடாது. தமிழ்நாட்டில்
பார்ப்பனிய அரசியலை – இந்துத்துவா அரசியலை பாசகவினால் செயல்படுத்த முடியாத
போது, செயலலிதா வழியில், செயலலிதா பாணியில் அது நடக்கட்டும் என்ற போர்உத்தி
கொண்டது பாசக தலைமை; அதே உத்தி கொண்டது ஆர்.எஸ்.எஸ். தலைமை. எனவே
பா.ச.க.வின் நடுவண் அமைச்சர்கள், செயலலிதாவின் தனிநபர் எதேச்சாதிகாரத்தை,
அராசகத்தைப் பொறுத்துப் போகிறார்கள். சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி
அ.தி.மு.க.வுடன் அமையாத பின்னணியில், உடன்பிறப்புகளுக்கிடையே எழும் குடும்ப
முரண்பாடு போல், பா.ச.க. நடுவண் அமைச்சர்கள் தங்களால் செயலலிதாவைச்
சந்திக்க முடியவில்லை என்று விமர்சித்தார்கள். அவர்களின் தலைவர் தலைமை
அமைச்சர் மோடி, அம்மாவுக்கு வேண்டியவர். அதனால் இன்னொரு நடுவண் அமைச்சரான
வெங்கய்யா நாயுடு, அம்மாவைச் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றார் (
பாசக தலைமையில் திமுக கூட்டணி சேர்ந்து 1999 – 2004 காலத்தில் நடுவண்
அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. எனவே திமுக பார்ப்பனிய – இந்துத்துவா
எதிர்ப்புக் கட்சி அல்ல. அவர்களுக்குக் கங்காணி வேலை பார்க்கத் தயங்காத
கட்சி.)
நாம் இங்கு விவாதிப்பது நேர்
பொருளில்! நடுவண் அமைச்சர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் மக்கள்
பிரதிநிதிகளும் செயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை. தருமதரிசனத்தில்
எப்போதாவது கோட்டையில் கூடியிருக்கும் கூட்டத்திடம் அவர் மனு வாங்கினால்
உண்டு!
செயலலிதா – கருணாநிதி ஆகியோரின்
தனிநபர் ஏகபோக அரசியலால் தனி நபர் பகை அரசியலால் பறிபோகும் தமிழ்நாட்டு
உரிமைகள், பறிபோகும் தமிழ்நாட்டு மானம், பறிபோகும் தமிழர் சனநாயகம்
ஆகியவற்றைத் தமிழ் மக்கள் இன்னும் எவ்வள்வு காலம் அனுமதிப்பது? தனிநபர்
ஏகபோக அரசியலை இன்னும் எவ்வளவு காலம் தூக்கிச் சுமப்பது?
தி.மு.க
– அ.தி.மு.க. இரு கட்சிகளும் செய்தக் கேடுகளில் பெருங்கேடு, திட்டமிட்டுச்
செய்த தீங்கு மக்களைச் செயலற்றவர்களாக மாற்றும் திட்டம் தான்! இளைஞர்கள்
கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது, போராட்டக் குணம் பெற்றிடக்
கூடாது என்பதில் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் எப்போதும் நூற்றுக்கு
நூறு ஒற்றுமையுண்டு. மண்ணின் மக்களிடம் தங்களின் உரிமை, வரலாற்றுப்
பெருமிதம், தங்களின் சமகால வரலாற்றுக் கடமை ஆகியவை பற்றிய உணர்ச்சி
வந்துவிடக்கூடாது என்பதும் அவ்விருவரின் தொலைநோக்கு உத்தி!
அதற்காக
மக்கள் கேட்காத இலவசங்களையெல்லாம் வழங்கி மண்ணின் மக்களை குடிமக்கள் என்ற
நிலையிலிருந்து வெறும் பயனாளிகள் என்று மாற்றியவர்கள் கருணாநிதியும்
செயலலிதாவும் ஆவர். அரசை எதிர்பார்த்துக் கையேந்துபவர்களாக, தற்சார்பற்று,
கதாநாயகன் – கதாநாயகியை அண்டி வாழும் மக்களாக தமிழ் மக்களில் கணிசமானோரின்
உளவியலை இவர்கள் மாற்றிவிட்டார்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை நீதிக்காக
வீதிக்கு வராமல் தடுத்து வைத்திருப்பவை இவ்விரு கழகங்களும் ஆகும்.
தமிழ்நாட்டை
இவ்வாறான அரசியல் இருள் சூழ்ந்ததற்கு யார் காரணம்? தன்னல வெறியும்,
தன்னாதிக்க வெறியும் பிடித்த செயலலிதாவும் -கருணாநிதியுமா? அல்லது
அவர்களின் அழிவு அரசியலை ஏற்றுக் கொண்ட மக்களா? யார் குற்றம் இது?
முதல்
நிலைக் குற்றவாளிகள் செயலலிதாவும் - கருணாநிதியும்! இரண்டாம் நிலைக்
குற்றவாளிகள் அவர்களைத் தூக்கிச் சுமக்கும் மக்கள். மூன்றாம் நிலைக்
குற்றவாளிகள் செயலலிதாவுடனும் - கருணாநிதியுடனும் கூட்டணி சேர்ந்த
கட்சிகள். நான்காம் நிலைக் குற்றவாளிகள் செயலலிதா – கருணாநிதி வடிவில் வந்த
பேராபத்தைத் தடுக்கத் தவறிய தமிழ்நாட்டுப் பொது மக்கள்!
“நான்
சற்றுக் கவனக்குறைவாக இருந்தபோது பகைவன் என்னை ஆக்கிரமித்துவிட்டான் என்று
சொல்லும் நாட்டை வரலாறு மன்னிக்காது” என்பது ஒரு வெளிநாட்டுப் பழமொழி!
செயலலிதா
– கருணாநிதி ஆகியோரின் அழிவு அரசியலிலிருந்து மக்களை விடுவிக்கும்
முதல்வகைப் போரளிகள், சிந்தனைப் போராளிகள் ஆவர். அவர்கள் மக்களிலிருந்து
புறப்பட வேண்டும்; அடுத்து மக்களிடமிருந்து களப்போராளிகள் புறப்பட
வேண்டும். முதல் வேலையாக, செயலலிதாவும் – கருணாநிதியும் மக்களுக்கு
மாட்டியுள்ள பூதக்கண்ணாடிகளை கழற்றி எறியுங்கள். அதற்குக் கருத்துப் போர்
நடத்துங்கள். அதற்கு மக்களின் மனத்துடன் பேசும் ஆற்றல் பெறுங்கள்.
திராவிட
கட்சிகளைப் புறக்கணித்து, மற்ற தேர்தல் கட்சிகளை ஆதரிக்கலாம் என்பதல்ல
நாம் இங்கு கூறுவது. மற்ற தேர்தல் கட்சிகளும் திராவிடக் கட்சிகளின் சிறு
வடிவங்களாகவே செயல்படுகின்றன. தேர்தல் அரசியலுக்கு வெளியே தமிழ் மக்களிடம்
புதிய விழிப்புணர்ச்சியும், அவர்களின் உளவியலை மறுவார்ப்பு செய்யும் வேலைத்
திட்டமும் தேவை.
நாம் அழிவு
வேலைக்காரர்கள் அல்லர். ஆக்க வேலைக்காரர்கள். உணவுப் பயிர் சாகுபடி
செய்யும் உழவனைப் போன்றவர்கள். பயிர் சாகுபடியின்போது களைச்செடிகளைக் களைய
வேண்டியது உழவனின் கடமை. களைச்செடிகளை அழிப்பதற்காக உழவன் சாகுபடி தொடங்க
வில்லை. உணவு உற்பத்திக்காக சாகுபடி செய்கிறான். உணவுப் பயிருக்கு இடையூறாக
உள்ளதால் களைகளைக் களைகிறான்;
அந்த
உழவனைப் போல் நாம் நம் தமிழ்நாட்டு மக்களின் சனநாயகத்திற்காக,
அவர்களுக்குரிய சரியான அரசியலை வளர்ப்பதற்காக, ஆக்க வழிப்பட்ட தமிழ்த்
தேசிய அரசியலுக்காக செயலலிதா – கருணாநிதி ஆகியோரின் அழிவு அரசியலைக் களைய
வேண்டும் என்கிறோம்.
நிலத்தைப்
பண்படுத்தாமல் உழவன் பயிர் செய்யமாட்டான். நம் மக்களிடம் விழிப்புணர்ச்சி
உண்டாக்காமல், செயலலிதா – கருணாநிதி வகையறாவின் திராவிட ஒப்பனை அரசியலை,
ஒய்யார உயர அரசியலை, தன்னலவெறித் தனிநபர் அரசியலை, அவர்களின் சனநாயக
சர்வாதிகார அரசியலைக் களையெடுக்க முடியாது.
சிந்திக்கும்
ஆற்றல் பெற்றோர் தன்னடக்கம் காரணமாக உண்மை பேசாமல் ஊமையாகி விடாதீர்கள்!
நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டால் அதுவும் ஒரு வகைத் தன்னலமே!
அரசியல் இருண்ட காலத்தில் பிறந்த நாம், பேறு பெற்றோர் ஆவோம்! ஏனெனில், ஒளிச்சுடரேந்தும் வாய்ப்பை வரலாறு நமக்கு வழங்கியிருக்கிறது.
Labels: கட்டுரைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்