<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" *மொழி – இனம் - தாயகம் மூன்றும் நிலையானவை*"--- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* அவர்களின் மலேசிய மாநாட்டு உரை!

Tuesday, July 25, 2023


*மொழி – இனம் - தாயகம் மூன்றும் நிலையானவை*

========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* அவர்களின் மலேசிய மாநாட்டு உரை!
========================================


பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (11th International Tamil Research Conference), உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பு – International Association of Tamil Research – IATR சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், மலாயா பல்கலைக் கழக வளாகத்தில் 21-23 சூலை 2023 மூன்று நாட்கள் நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்ற சிறப்பு அழைப்பாளராகப் பலரை அழைத்திருந்தார்கள். அதில் நான் கலந்து கொண்டு 22.7.2023 முற்பகல் 20 மணித்துளிகள் பேசினேன். எனக்கான தலைப்பு *”பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு”* என்பதாகும். நேரக் குறைவு காரணமாக அணியம் செய்த குறிப்புகளில் சிலவற்றைப் பேச முடியவில்லை. அவற்றையும் சேர்த்து, அன்றைய உரை இங்கு முழுமையாகத் தரப்பட்டுள்ளது:

அன்பு கெழுமிய 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வுச் சான்றோர்களே, தமிழ் உணர்வாளர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். சென்னை கலைஞன் பதிப்பக உரிமையாளர் திருவாளர் நந்தன் மாசிலாமணி அவர்கள்தாம் இம் மாநாட்டில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அவருக்கு என் நன்றி! எனது உரைக்கான தலைப்பு: “பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு“ என்பதாகும். நமக்குத்தான் தமிழ்ப் பெயராலேயே மொழிப் பெயரும், இனப் பெயரும், தாயகப் பெயரும் அமைந்துள்ளன. தமிழ், தமிழர், தமிழ்நாடு! இவ்வாறு நமக்கு அண்டை இனங்களாக உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர்க்குத் தாயகப் பெயர் அமையவில்லை. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

மக்கள், இயற்கையின் படைப்பு! அதேபோல் அவர்களின் மொழி, இனம், தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு!

உலக உருண்டை ஒன்றுதான். ஆனால் அதில் பல இனங்கள், பல மொழிகள், பல தாயகங்கள்! ஒற்றை உலக உருண்டையில் இவ்வாறு பன்மைகள் இருக்கின்றன. ஒரே கதிரவன்தான் உலகிற்கு இருக்கிறது. ஆனால் அது தோன்றி மறையும் நேரங்கள் அங்கங்கே பலப்பல! அதன் வெப்பவீச்சும் பலப்பல அளவுகள்!

இயற்கையாக அமைந்துள்ள இந்தப் பன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ”மனிதக் குரங்கிலிருந்து மனிதராக மாறும் வரையில் உள்ள உழைப்பின் பாத்திரம்” என்ற நூலை எழுதிய பிரெடெரிக் எங்கெல்சு, மனித குல வளர்ச்சியில் என்ன முரண்களின் கூட்டியக்கத்தால் மொழி உண்டாயிற்று என்று சொல்ல முடியவில்லை என்று கூறினார். மார்க்சிய இயங்கியலில் கூட அறிய முடியாதவை இல்லை; ஆனால் அறியப் படாதவை உண்டு என்பார்கள். அறியப்படாதவை தொடர்ந்து கொண்டே இருக்கும்!

நம்முடைய தாயாம் தமிழ் எப்பொழுது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? தமிழ் என்றும் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரியும். மொழி வளர்ச்சிப் படிக்கட்டுகள் தமிழுக்கும் இருந்திருக்கும். ஆனால் எப்பொழுது தோன்றியது, எப்டித் தோன்றியது ஏன் தோன்றியது என்று துல்லியமாகத் தெரியாது.

நேற்று இம்மாநாட்டில் பேசிய திருவாளர் வைகச் செல்வன் (அதிமுக) அவர்கள் கூடத் தமிழ்ப் பழமையைக் கூறும்போது,

”ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஒன்று, ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!”

என்ற தண்டியலங்கார மேற்கோள் பாடலைச் சொன்னார். கதிரவனைப் போல் தமிழ் என்றும் இருக்கிறது! ”என்றும் உள்ள தென் தமிழ்” என்பார் கம்பர். அகத்தியப் படலத்தில், “என்றுமுளதென்றமிழ் இயம்பி இசை கொண்டான் அகத்தியன்“ என்பார். என்றும் இருக்கிறது தமிழ்; அதைக் கற்றுப் புகழ்பெற்றான் அகத்தியன் என்றார். அகத்தியன் ஆரியனல்லன், தமிழன்! தமிழுக்கு முறையான முதல் இலக்கணம் கண்ட மாமுனி அகத்தியன்.

”ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

என்று பாரதியார் பாடியிருப்பது வரலாற்றுப் பிழை. என்றும் தமிழ் இருக்கிறது!

நம்முடைய பாவேந்தர்,

”திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்றார்.

*பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு!*

தமிழகம், தமிழ்நாடு என்ற சொற்கள் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வருகின்றன. பரிபாடலில் ”தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்று வருகிறது. வேலி என்றால் எல்லை என்று பொருள். குளிர்ச்சியான தமிழை வேலியாகக் கொண்ட தமிழ்நாடு என்று கூறுகிறது பரிபாடல். அப்பொழுது அந்தத் தமிழ்நாட்டில் ஒற்றை அரசா இருந்தது? இல்லை. சிற்றரசுகள் பல இருந்தன. நம் தமிழ்தான் நமது தேசத்திற்கான எல்லை. நம் தமிழ் பேசப்படாத பகுதி எனில் அது ”மொழிபெயர் தேஎம்”! தமிழ்மொழி பேசப்படும் பகுதி நம் தேஎம் - தேயம்! தேயம் என்பதிலிருந்து ”தேஷ்” என்ற சொல்லை வடவர் உருவாக்கியிருப்பர். நாடு என்ற சொல்லும் நமக்கு அப்போதிருந்தே இருக்கிறது. தமிழகம் என்ற சொல்லும் இருக்கிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்தே” என்கிறது அகம். 31-ஆம் பாடல்.

புறநானூற்றில் 168-ஆம் எண் பாடல் பிட்டங்கொற்றன் என்ற சிற்றரசரை கருவூர்க் கதப் பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் பாராட்டி எழுதியது.

”வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்”

என்ற வரிகள் அப்பாடலில் உள்ளன. தமிழகம் என்ற சொல்லைத் தமிழர்களுக்கான தாய்நாடு என்ற பொருளில்தான் ”தமிழகம்“ என்று புலவர் குறிப்பிடுகிறார்.

”தமிழகப் படுத்த விமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநா ளிருக்கை”

என்று அகநானூறு 227 ஆம் பாடல் கூறுகிறது.

சிலப்பதிகாரம் மிகத் தெளிவாகத் தமிழகம் என்றும், தமிழ்நாடு என்றும் தமிழர்களின் முழுத் தாயகத்தையும் பெருமையோடு கூறுகிறது. அரங்கேற்றுக் காதையில் ஆடல், பாடல், அழகு மூன்றும் நிறைந்தவள் என்று மாதவியை அறிமுகப் படுத்துவார் இளங்கோவடிகள். அடுத்து மாதவிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சிறப்பைக் கூறி அவரை அறிமுகப்படுத்தவார். அவ்வாசிரியர்,

”இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுதறிந்த தன்மையன் ஆகி”

என்பார். தமிழை முழுமையாகக் கற்றவர். தமிழ்நாடு முழுவதும் அவரை அறியும் என்பார்.

கண்ணகிக்குச் சிலை வடிக்கப் பொதியமலைக் கல் எடுப்பதா, இமயமலைக் கல் எடுப்பதா என்று சேரன் செங்குட்டுவன் கேட்பான். இமயக் கல் எடுக்கலாம் என்றனர் அவையோர். நாம் கல்லெடுக்கப் போவதைப் படைஎடுத்து நாடு பிடிக்க வருவதாகத் தவறாக அங்குள்ள மன்னர்கள் புரிந்து கொண்டால் என்ன செய்வது என்றான் செங்குட்டுவன். அப்போது படைத்தளபதி வில்லவன் கோதை, அப்படிப் புரிந்து கொண்டால் அவர்களைச் சந்திப்போம் என்று ஆவேசமாகப் பேசினான்.

”ஆரிய மன்னர் ஈர்ஐநூற்று வர்க்கு
ஒருநீ ஆகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை”.

ஆரிய மன்னர் ஆயிரம் பேர் நின்றாலும் அவர்கள் முன் போர்க் கோலத்தோடு நீ ஒருவன் நின்றால் அவர்கள் நடுங்கிப் போவர்! ஒலிக்கின்ற கடலை எல்லையாகக் கொண்ட தமிழ்நாட்டை ஒருங்கிணைக்க முனையும் நீ, இமயம் சென்றால் உன்னை எதிர்த்திட யாரும் இருக்கமாட்டார்கள் என்றான் வில்லவன் கோதை! தெளிவாகத் ”தமிழ்நாடு” என்கிறான். தமிழர்க்குப் பகைவர்கள் ஆரியர்கள் என்பதையும் இளங்கோவடிகள் எடுத்துக் காட்டுகிறார்!

அடுத்து, அடிகள் கையாளும் ஒரு சொல்லாட்சி! ”உன்னை ஏற்பவர்” என்கிறார். உன்னைச் சந்திப்பவர் என்று பொருள்! சந்திக்கத் தயாரா என்றால் என்னைப் பொருத, மோதத் தயாரா என்பதாகும். இரண்டாம் உலகப் போரில் இட்லர் படை இலண்டனை நெருங்கிக் கொண்டிருந்தபோது, உயரமான இடத்தில் நின்று பிரிட்டன் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் ”London will take it” என்று அறிவித்ததாகச் சொல்வார்கள். ‘will take it’ என்றால் சந்திக்கத் தயார் என்பதாகும். அதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வில்லவன் கோதை, உன்னை ஏற்பவர், உன்னைச் சந்திப்பவர் எவரும் இல்லை என்றான்!

அத்துடன் வில்லவன் கோதை நிற்கவில்லை. நம்முடைய தென் தமிழ்நாட்டு வில், மீன், புலி சின்னங்கள் பொறித்த கொடியை வடநாடெங்கும் ஏற்றிப் பறக்கவிட ஆணை இடுவோம் என்றான்! நண்பர்களே, தோழர்களே உங்கள் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு வில்லவன்கோதை என்று பெயர் சூட்டுங்கள்!

இன்று தமிழ்நாட்டில் என்ன நிலை? இந்தியக் கொடியை எல்லா இடங்களிலும் ஏற்ற வேண்டும். வில், மீன், புலி சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாதிகள் என்று கைது செய்வார்கள். அதிலும் குறிப்பாக நவம்பர் 1-ஆம் நாள், தமிழ்நாடு நாள்; 1956 நவம்பர் 1-ஆம் நாள் தமிழர் தாயகமாக இந்திய சட்டப்படி தமிழ்நாடு ஏற்கப்பட்ட நாள்! அந்த நாளில் நம் மூவேந்தர் சின்னங்கள் பொறித்த கொடியை ஏற்ற முடியாது! தமிழ்நாடு அரசுக்கெனத் தனிக் கொடி கிடையாது. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சியினரும், மக்களும் நவம்பர் 1-ஆம் நாள் - கர்நாடகம் உருவான நாளில் அவர்களின் மாநிலக் கொடியை ஏற்றுகிறார்கள்.

தமிழ் என்றால் தமிழரையும் குறிக்கும். அப்படித்தான் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது. “தென் தமிழ் ஆற்றல் காண்குதும்” என்று கூறி செங்குட்டுவன் படையுடன் சென்றான் என்று இளங்கோவடிகள் கூறும்போது, ”தென்னாட்டுத் தமிழர்” என்பதைக் குறிக்கின்றது. புறநானூற்று 19-ஆம் பாடலில்

”இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கை
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து”

என்பது, இந்தப் பக்கமும் தமிழர்கள், அந்தப்பக்கமும் தமிழர்கள், யார் எந்தப் படையைச் சேர்ந்தவர் என்பது சட்டென்று புரிவதில்லை; குழப்பமாக இருக்கிறது என்று கூறுகிறது.

சங்க கலத்திற்குப் பின் தெளிவாகத் தமிழன் என்று கூறும் வழக்கம் செய்யுள்களில் இடம் பெற்றுள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானை ”ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்” என்று விளித்தார். பூதத்தாழ்வார் தன்னைப் ”பெருந்தமிழன்” என்று அழைத்துக் கொண்டார்.

”யானெ தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் யானே
இருந்தமிழ்தன் இறையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று, தமிழ்த் தேசியத்தின் மூன்று அடிப்படைக் கூறுகளையும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கூறிவிட்டார்கள். நம் இனப் பெயர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் ”தமிழர்”தான், இன்றும் ”தமிழர்”தான்!

இந்த அவையில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் சி. மகேந்திரன் இருக்கிறார்; மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் பாலபாரதி இருக்கிறார். கம்யூனிஸ்ட்டுத் தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள், முதலாளியம் தனது சந்தையில் கண்டறிந்ததுதான் தேசியம் என்றார்கள். முதலாளிய வளர்ச்சிப் போக்கில்தான் தேசிய இனம் குறித்த புரிதல் வந்தது என்றார்கள். ஆனால், தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் இனம் குறித்த புரிதல் வந்து விட்டது.

18-ஆம் நூற்றாண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளை உருவாக்கியபோது, பெருங் கூட்டரசு (Confederation), கூட்டரசு (Federation) பற்றியெல்லாம் விவாதித்தார்கள். தேசிய இனங்கள் குறித்தும் விவாதித்தார்கள். அவ்வாறு ஜார்ஜ் வாஷிங்டனும், ஜெஃபர்சனும், ஹாமில்டனும் விவாதிப்பதற்கு முன்பே மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் இனம் பற்றியும் தமிழ்த்தேசம் பற்றியும் அறிந்து கொண்டார்கள். அடையாளப்படுத்தினார்கள்.

கடைசியாக ஒரே ஒரு எடுத்துக்காட்டு; தொல்காப்பிய நூற்பாவான ”செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதற்கு விளக்கம் எழுதிய உரையாசிரியர் இளம்பூரணர், வினாவும் விடையும் குழப்பிமில்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, குழப்பமில்லாத கேள்விக்கும் பதிலுக்கும் எடுத்துக்காட்டாக ”நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்” என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? இளம்பூரணர் பொது ஆண்டு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் இருந்து வந்தமை பொதுவான செய்தி. இளம்பூரணர் காலத்தில் சோழநாடும், பாண்டிநாடும் இருந்தன. உன்நாடு எது என்றால் சோழநாடு, பாண்டிய நாடு என்று சொல்லக் கூடாது. அது அரசவழி நிர்வாக நாடுகள். இவை மாறிப்போகும். மொழி, இனம், பொதுத்தாயகம் சார்ந்து நாட்டை அடையாளப்படுத்த வேண்டும். அதுவே சரியானது; நிலையானது. எந்த அரசின் கீழ் இருக்கிறாய் என்று கேட்டால் சோழ அரசு அல்லது பாண்டிய அரசு என்று கூறலாம் என்பதே இளம்பூரணர் கருத்தாக இருந்திருக்கும்.

எது நாடு என்பது பதினொன்றாம் நூற்றாண்டிலேயே தெளிவு படுத்தப்பட்ட செய்தி! இப்போது நாம் குழம்பக் கூடாது; குழப்பக் கூடாது. ஒன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். தமிழ் இனத்தின், இலக்கியத்தின் வராற்றில், தமிழ்நாட்டை தமிழை, தமிழரைத் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்று அழைக்கும் வழக்கம் 18-ஆம் நூற்றாண்டுவரை இல்லை. விசயநகரத் தெலுங்கர் ஆட்சிக் காலத்தில்தான் தாயுமானவர் (1705-1742) திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டைக் காலத்திலேயே நாம் தமிழர்கள்; இப்போதும் தமிழர்கள் என்பது போல உலகில் வேறு சில பழமையான இனங்களும் இருக்கின்றன. யூதர்கள், சீனாவின் ஹான் இனத்தவர்கள், கிரேக்கர்கள் போன்றவர்கள், மரபு இனமாக (Race) பண்டைக் காலத்திலும் இதே பெயரைக் கொண்டிருந்தனர். இப்போது தேசிய இனமாக (Nationality) அதே பெயரைக் கொண்டுள்ளார்கள். தமிழர்களாகிய நாமும் அப்படியே!

ஐரோப்பாவில் ஆங்கிலேயர், செர்மானியர், பிரஞ்சுக்காரர்கள் போன்ற பல தேசிய இனத்தவர்கள் பல்வேறு மரபினங்களின் கலப்பில் தோன்றியவர்கள் என்பர். அதை அப்படியே நம் தமிழ் இனத்திற்குப் பொருத்தக் கூடாது! பழங்குடியாய் (Tribes), மரபினமாய் (Race) தேசிய இனமாய் (Nationality) ஒரே தமிழ் இன அடையாளம் கொண்டவர்கள் நாம்!

இப்படிச் சொல்வதால் மற்ற எந்த இனத்தையும் நாம் தாழ்வாகக் கருதுகிறோம் என்று பொருள் அல்ல. இனச் சமநிலையே நம் கொள்கை! ஆனால் இன அடிப்படையில் அயலார் நம்மை அடிமைப்படுத்த, ஆதிக்கம் செய்ய முனைந்தால் அவர்களை எதிர்ப்பதும், நம் இனத்தைக் காப்பதும் நம் கடைமை!

இவற்றையெல்லாம் நான் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்த உலகம் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் – அவற்றின் தாயகங்கள் – ஆகியவற்றைக் கொண்ட பன்மை வடிவமாகும் என்பதை வலியுறுத்தவே!

இந்த உலகப் பன்மையில் பல்வேறு மொழிகள், பண்பாடுகள், மரபுகள், பக்குவங்கள், சிந்தனைப் போக்குகள், பருவங்கள், காலநிலைகள் முதலியவை கொண்ட பல்வேறு இனங்கள் இருக்கின்றன. எல்லோரும் மனிதர்களே என்ற அடிப்படையில் சில பொதுத் தன்மைகளும் இருக்கின்றன. ஒன்று கலந்து, ஒற்றைத் தன்மை பெற முடியாத தனித் தன்மைகளும், வேற்றுமைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு இனத்திற்கான உளவியல் உருவாக்கங்கள் ஒன்றிணைய முடியாதன. ஒருமை வடிவம் பெறமுடியாத தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன.

இவ்வாறான வேறுபாடுகள் ஒருபக்கம் – இவற்றுக்கிடையே உள்ள தொலைவுகள் (distance) மறுபக்கம். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவைத் துணைக்கண்டம் என்று அழைப்பதும் இவ்வாறான பற்பல வேற்றுமைகள் அடிப்படையில்தான்! இந்தியாவை ஒரு தேசம் என்று வரையறுக்காமல் பல்வேறு அரசுகளின் ஒன்றியம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (Article 1. India, that is Bharat shall be a Union of States).

மதம் ஒரு மெய்யியல் என்ற அடிப்படையில் மொழி கடந்து, இனம் கடந்து, தேசம் கடந்து பரவும். ஆனால், அதே மதம், அது செயல்படும் நாடுகளில் உள்ள அதே மதத்தைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும், வெவ்வேறு இனங்களை ஒருங்கிணைக்கவோ, ஒரு தேசத்துக்குள் கொண்டு வரவோ முடிவதில்லை. ஒரே கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள்தாம் ஐரோப்பாவில் தங்களுக்குள் முதல் உலகப் போரையும், இரண்டாம் உலகப் போரையும் நடத்திக் கொண்டார்கள். இசுலாம் மதத்தைச் சேர்ந்த ஈரான், ஈராக் நாடுகள் ஏழரை ஆண்டுகள் போர் நடத்தி இலட்சக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்றன. ஒரே புத்தரையும் புத்த மதத்தையும் பின்பற்றும் சீனாவும் சப்பானும் என்நேரமும் பகையுணர்வுடன் உருமிக் கொண்டிருகின்றன. கர்நாடகத்தில் காவிரிச் சிக்கலை வைத்து தமிழ் இந்துக்களைக் கன்னட இந்துக்கள் 1991 டிசம்பரில் இனப்படுகொலை செய்தார்கள். அவர்களுக்கிடையே அங்கு நேரடிப் பகையோ, மோதலோ இல்லை. தமிழர்கள் மீதான இன வெறுப்பும் கன்னட வெறியும் அவர்களை வன்முறைக்குத் தூண்டின. மதத்தால் இணக்கப்படுத்த முடியவில்லை.

உழைப்பு மற்றும் பொருளியல் உற்பத்தி சார்ந்த ”வர்க்கம்” (Class) என்ற சமூக வடிவம் ஓர் இனத்துக்குள்தான் உறவு கொண்டிருக்கும். அதே வகை உறவை, அயல் தேசங்களில் உள்ள அதே வர்க்கத்திடம் – தொழிலாளி அல்லது முதலாளி வர்க்கத்திடம் கொள்வதில்லை. முதலாளிய நாடுகள் போரிட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட்டு நாடுகளான சீனாவும் வியட்நாமும் 1970களில் எல்லைப் போர் நடத்திக் கொண்டன. அதே போல், 1960களில் இருந்து கம்யூனிஸ்ட்டு சீனாவும் கம்யூனிஸ்ட்டு சோவியத் ஒன்றியமும் தங்களுக்கிடையே பகை கொண்டு தனித்தனி பகை முகாம்கள் அமைத்துக் கொண்டன.

ஒரே தேசத்திற்குள், ஒரே இனத்துக்குள் மத-மோதல்கள், சாதி-மோதல்கள், வர்க்க-மோதல்கள் வருவதில்லையா? வரும். ஆனால், அந்த உள் முரண்பாடுகள், தங்களுக்குள் தீர்வு கண்டு, ஒரே இனத்துக்குள் அவை நீடிக்கின்றன. அயல் இனத்தோடு முரண்பாடு வரும்போது பிரிந்து தனித் தேசம் அமைத்துக் கொள்கின்றன.

இனம், தேசிய இனம் பொதுத் தாய்மொழி அவற்றின் வழித் தாயகம் என்பவை பிரிக்க முடியாதவை. பிரிந்து போக முடியாதவை! அடுத்த இனங்களோடு, அடுத்த இனத் தாயகங்களோடு இணைந்து ஒன்று கலக்க முடியாதவை. இந்தத் தனிவடிவங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, நிலைத்துள்ளன. இந்த அடிப்படையில் புதியபுதிய தேசங்கள் பிறந்து கொண்டுள்ளன.

ஆன்மிகம், வர்க்கப் பொதுமை, சமூகநீதி முதலிய கொள்கைகள் கொண்ட இலட்சியர்கள் தங்கள் திட்டங்களைக் குறிப்பிட்ட இனத்திற்குள்தான் வைக்க வேண்டும். அனைத்து இனங்களுக்கும் என்று வைத்தால் வெல்ல முடியாது. குறிப்பிட்ட இனத்தில் வெல்லலாம்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்