<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பொய் சொல்கிறது அறநிலையத் துறை! பழனி குடமுழுக்கு தமிழில் நடந்ததாக!"---- *பெ. மணியரசன்* ஒருங்கிணைப்பாளர், தெய்வத் தமிழ்ப் பேரவை

Saturday, July 15, 2023


 *பொய் சொல்கிறது அறநிலையத் துறை! பழனி குடமுழுக்கு தமிழில் நடந்ததாக!*
================================
*பெ. மணியரசன்*
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================


பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் / செயல் அலுவலர் உயர்திரு செ. மாரிமுத்து பி.ஏ.பி.எல்., அவர்களிடமிருந்து அண்மையில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை, அவர்களுக்கு எழுதப்பட்டது. அதன் நகலை எனக்கும் அனுப்பியுள்ளார்கள்.

அதில் 27.1.2023 அன்று நடந்த பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு வேள்விச் சாலையில் வேத விற்பன்னர்களுக்கு (சமற்கிருத அர்ச்சகர்களுக்கு) இணையாக 108 ஓதுவார்கள் கலந்து கொண்டு தமிழில் பாசுரம் பாடியும், கோபுரக் கலச விமானத்தில் சமற்கிருதத்திற்கு இணையாக ஓதுவார்கள் தமிழ்ப் பாசுரம் பாடியும், சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழிலும் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது என்று இணை ஆணையர் / செயல் அலுவலர் வழக்குரைஞர் செ. மாரிமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறநிலையத்துறை இணை ஆணையர் / செயல் அலுவலரின் மேற்படி கூற்று உண்மை இல்லை. 108 தமிழ் ஓதுவார்களைக் கோயிலின் பல இடங்களில் தமிழ்ப்பாசுரம் பாட அனுமதித்தார்கள். ஆனால் வேள்விச்சாலைக்குள், கோபுரக் கலசப் புனித நீரூற்றலில் அனுமதிக்கவில்லை.

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 27.1.2023 அன்று நடைபெற உள்ள குடமுழுக்கில் கருவறைப் பூசை, வேள்விச்சாலை பூசை, கலச நீராட்டு ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரங்களும் சமற்கிருத மந்திரங்களும் சம அளவில் ஓதி வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று எமது தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (சென்னை), இணை ஆணையர் (பழனி) ஆகியோர்க்கு மனுக்கள் அளித்தோம். தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது தஞ்சை அலுவலக முகவரி இட்டு மனுக்களை அளித்தோம்.

திருக்கோயில் குடமுழுக்குகளைத் தமிழ் மந்திரங்களையும், சமற்கிருத மந்திரங்களையும் சம அளவு ஓதி வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இருமுறை அளித்த தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தோம். தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கையொட்டி நாங்களும் மற்ற நண்பர்களும் போட்ட வழக்கில், நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் அமர்வு 31.1.2020 அன்று வழங்கிய தீர்ப்பையும், கரூர் பசுபதீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கின்போது தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு போட்ட வழக்கில் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அமர்வு 19.8.2021 அன்று வழங்கிய தீர்ப்பையும் நாங்கள் அனுப்பிய மனுக்களில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான சித்தர் மூங்கிலடியார், குச்சனூர்க் கிழார், சிம்மம் சத்தியபாமா அம்மையார், கி. வெங்கட்ராமன், க. அருணபாரதி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆவடி கலையரசி அம்மா, ஆசீவகச் சுடரொளி, சென்னை சிவவடிவேலன், பெ. மணியரசன் ஆகியோர் முன்கூட்டியே கடந்த 21.12.2022 அன்று முற்பகல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் அவர்களை, அவரது தலைமையக அலுவலகத்தில் (சென்னையில்) நேரில் சந்தித்து மனு கொடுத்து, உயர்நீ திமன்றத் தீர்ப்பின்படி பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்துமாறும், தகுதியுள்ள தமிழ் அர்ச்சகர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் கோரிக்கை வைத்தோம். அப்போது குமரகுருபரன் அவர்கள் இப்போது தமிழில் நடத்த முடியாது. ஓர் ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை வந்தபிறகுதான் அதனைச் செய்ய முடியும் என்று கூறி எங்கள் கோரிக்கையை மறுத்தார். அப்போது உடனிருந்த இணை ஆணையர் ஒருவர், கால்துறை அதிகாரி மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர்க்கு இந்த உண்மை தெரியும்.

அதன்பிறகு, தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கை மனுக்களை பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ஆகியோரிடமும் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கொடுத்தோம்.

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைக் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழில் குடமுழுக்குக்குரிய கிரியைகள் மேற்கொண்டு, தமிழ் அர்ச்சகர்கள் கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றி நடத்துமாறு கோரிக்கை வைத்து பழனியில் 20.1.2023 அன்று தெய்வத் தமிழ்ப் பேரவையினரும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியினரும் பழனி நகரம் மயில் சதுக்கத்தில் (மயில் ரவுண்டானாவில்) ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

திருக்குடமுழுக்கு நடந்த 27.1.2023 அன்று காலை தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களும், க. அருணபாரதி அவர்களும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வழிபடச் சென்றபோது, காவல்துறையினரிடம் சொல்லித் தடுத்து மலைமேல் ஏறவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டார்கள் இந்து அறநிலையத் துறையினர்.

திருக்குடமுழுக்கில் நடந்தது என்ன?

வேள்விச்சாலையில் இருந்த 90 யாக குண்டங்களில் ஒன்றில் கூட ஒருபோதும் தமிழ் மந்திரம் ஓதப்படவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அதே வேள்விச் சாலையில் 45 குண்டங்களில் தமிழ் மந்திரம் ஓதுவோரும், 45 குண்டங்களில் சமற்கிருத மந்திரம் ஓதுவோரும் நிரந்தரமாக அமர்ந்து இருமொழிகளிலும் மந்திரம் ஓதியிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவே இல்லை. தமிழ் ஓதுவார்கள் அனைவரையும், வேள்விச் சாலைக்கு வெளியே நின்று பாடச் செய்தனர். இதைத் தான் 108 தமிழ் ஓதுவார்கள் வேள்விச் சாலையில் பாடினார்கள் என்று பொய் சொல்கிறது அறநிலையத்துறை!

அதேபோல், கோபுரக் கலசங்களில் ஒரே நேரத்தில் சரிபாதி தமிழ் அர்ச்சகர்களும் மறுபாதி சமற்கிருத அர்ச்சகர்களும் முறையே தமிழ் மந்திரமும் சமற்கிருத சுலோகங்களும் சொல்லி இரு தரப்பினரும் புனித நீர் ஊற்றிக் குடமுழுக்குச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. தமிழ் ஓதுவார் ஒருவரை கோபுரத்திற்கு அழைத்துச் சென்று ஒலிபெருக்கிமுன் தமிழ்த் திருப் பாடல்களைப் பாடச் சொல்லியுள்ளார்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் குடமுழுக்கிற்கான வேள்விச்சாலை வழிபாட்டையும் கோபுரக் கலசப் புனித நீரூற்றலையும் பார்த்துள்ளார்கள். முழுக்க முழுக்க சமற்கிருதமும் பிராமண அர்ச்சகர்களுமே ஏகபோக ஆதிக்கம் செய்தனர். அவர்களை வேத விற்பன்னர்கள் என்று போற்றிப்பாடுகிறது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை! அந்தப் பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருத வேதங்கள் நான்கிலும் கற்றுத் துறைபோன அறிஞர்களா? அவர்களை வேத விற்பன்னர்கள் என்று வர்ணிப்பதில் உண்மை இருக்கிறதா? இல்லை!

தமிழ் வழிபாட்டை விரும்பும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மேற்படி குடமுழுக்கின் அழைப்பிதழைத் தூய தமிழில் அச்சடித்தார்கள்! குடமுழுக்கு என்ற மைய நடவடிக்கையில் தமிழ் ஓதுவார்கள் ஈடுபடுத்தப்படாமல், 108 ஓதுவார்களை அழைத்து, அவர்களை கருவறை - வேள்விச்சாலை - கோபுரக் கலசம் ஆகியவற்றைத் தீண்டாமல் வெளியே பாடல்கள் பாடச் செய்தார்கள். தமிழ் ஓதுவார்களுக்கும் தமிழ் அர்ச்சகர்களுக்கும் நமது தாய்த் தமிழுக்கும் எதிரான தீண்டாமைக் குற்றத்தைத் தமது நேரடிப்பார்வையில் அரங்கேற்றினார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு!
பழனி குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரம் இடம் பெறாது என்பதை அப்போதிருந்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் 21.12.2022 அன்று எங்களிடம் நேரில் கூறிவிட்டார். அதுதான் 27.1.2023 அன்று நடந்தது. பிராமண அர்ச்சகர்களும், சமற்கிருதமும் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகியவற்றில் ஒற்றை ஆதிக்கம் செலுத்தினர். தமிழும், தமிழ் அர்ச்சகர்களும் புறக்கணிக்கப்பட்டு வெளியே தான் நிறுத்தப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளையும் அவமதித்தார்கள் ஆட்சியாளர்கள் - அறநிலையத்துறையினர்! தமிழ் மொழிக்கும், தமிழ் அர்ச்சகர்கட்கும் எதிரான தீண்டாமைக் குற்றத்தைப் புரிந்துள்ளார்கள்.

”அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று திமுக ஆட்சியாளர்கள் கூறியது தமிழைப் புறக்கணித்து தமிழ் அர்ச்சகர்களை ஒதுக்கி வைத்து, சமற்கிருதத்திற்கும் பிராமண அர்ச்சகர்களுக்கும் ஏகபோக ஆதிக்கம் அளிப்பதை மறைப்பதற்கான சூழ்ச்சியே என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கில் தெய்வத் தமிழ் மொழிக்கும், தமிழ் அர்ச்சகர்களுக்கும் எதிராகத் தீண்டாமையைக் கடைபிடித்த குற்றத்திற்காக அமைச்சர் சேகர்பாபு, அறிநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது சட்டப்படி வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்கள் தங்களால் ஆன அளவில் தமிழ் அர்ச்சனையும் தமிழ்க் குடமுழுக்கும் நடத்த முன்வர வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================ 

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்