<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஆர்.என். இரவியை நீக்குக! ஆளுநர் பதவியை நீக்குக! செந்தில் பாலாஜியை நீக்குக!" --- ஐயா பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Tuesday, July 4, 2023


ஆர்.என். இரவியை நீக்குக!

ஆளுநர் பதவியை நீக்குக!
செந்தில் பாலாஜியை நீக்குக!
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==============================


ஆரியத்துவா நாட்டாண்மையாக ஆளுநர் மாளிகையில் அமர்த்தப்பட்டுள்ள ஆர்.என். இரவி, தமிழ்நாடு அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்கிறார். இதற்கு முதலமைச்சரின் பரிந்துரை தேவையில்லை என்கிறார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்துவிட்டதாக இரவி, 29.6.2023 மாலை, முதலமைச்சர் மு.க. டாலினுக்குக் கடிதம் அனுப்பினார். இப்பதவி நீக்கத்திற்கு முதலமைச்சரின் பரிந்துரை தேவையில்லை. ஆளுநருக்கே இதற்கான அதிகாரங்களை இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 154(1), 163(1), (2) மற்றும் 164(1) முதலியவை வழங்குகின்றன என்று ஆர்.என். இரவி கூறினார்.

ஆர்.என். இரவி, அடாவடித்தனமாக முதலமைச்சரின் பரிந்துரைகள் இல்லாமல், - செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்தது செல்லாது, முதலமைச்சரின் அறிவுரையின் (advice) பேரில்தான் ஓர் அமைச்சருக்குப் பதவி ஏற்பு செய்து வைப்பதையோ, பதவி நீக்கம் செய்வதையோ ஆளுநர் செய்ய முடியும், செந்தில் பாலாஜியை நீக்கிட இரவிக்கு அதிகாரம் இல்லை என்பதே அரசமைப்புச் சட்ட வல்லுநர்களின் கருத்து. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடும் அதுவே! அமைச்சரவையில் நீடிக்கிறார் பாலாஜி என்று மு.க. ஸ்டாலின் எதிரடி கொடுத்து இரவிக்குக் காட்டமாகக் கடிதம் அனுப்பினார்.

செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்வதற்கு முன்வந்ததற்கான காரணங்களை இரவி தமது கடிதத்தில் கூறியிருந்தார். செந்தில் பாலாஜி 2011-2015 காலத்தில் செயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழியர்கள் பணியமர்த்தம் செய்திட கையூட்டு வாங்கி மாட்டிக் கொண்டார். அவரை விசாரித்து அவர் மீது வழக்கு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது; விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், சிறைவாசியாகத்தான் – நீதிமன்ற சிறைக்காவலில்தான் – இருக்கிறார். எனவே, அவரால் அமைச்சர் பணிகளைச் செய்ய முடியவில்லை. மேலும் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடித்தால், தனது அதிகாரத்தை வைத்து தன்மீதுள்ள வழக்கை சீர்குலைப்பார். அவரைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்குமாறு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் முதலமைச்சர், பாலாஜி துறைப் பொறுப்பு இல்லாத – வெறும் அமைச்சராக நீடிப்பார் என்று அறிவித்துவிட்டார். எனவே, நான் செந்தில் பாலாஜியைப் பதவிநீக்கம் செய்துவிட்டேன் என்கிறார். ஆனால், ஏறகெனவே இவரை ஏவிவிட்ட இந்திய ஆட்சியாளர்கள் நான்கு மணி நேரத்திற்குள் தலையிட்டு ஆளுநர் செய்த பதவி நீக்கத்தை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார்கள்.

இந்தச் சட்டச் சிக்கலில், ஊழல் சிக்கலில் நமது நிலைபாடு என்ன?

முதன்மையாக இருநிலைபாடுகள் முன்வைக்கப்படுகின்றன. 1. ஓர் அமைச்சரைப் பதவி அமர்த்தம் செய்யவோ, நீக்கவோ முதலமைச்சரின் அறிவுரை – ஆளுநருக்குத் தேவை. அது முன்நிபந்தனையாகும். அவ்வாறான அறிவுரை மு.க. ஸ்டாலினிடமிருந்து பெறாத நிலையில், ஆளுநர் இரவி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தன்முனைப்பாக நீக்கியது செல்லாது என்பதே நமது நிலைபாடு.

ஆனால், ஊழல் செய்து சிறையில் இருக்கும் நபர் அமைச்சராக நீடிப்பது அறமா, ஒழுக்கமா என்று கேட்டால், இல்லை என்பதே நமது விடை! துறைப் பொறுப்பில்லாமல், வெட்டி வேலைகூட எதுவுமில்லாமல் அமைச்சராக நீடிப்பது அரசுப் பணத்தைக் கையாடல் செய்வதற்கு ஒப்பாகும்.

இச்சிக்கலுக்குத் தீர்வு என்ன? செந்தில் பாலாஜி, தானே பதவி விலக வேண்டும்; அவர் மறுத்தால் முதல்வர் ஸ்டாலின் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். இதுவே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை!

ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும்
---------------------------------------------------
மாநில அரசின் உரிமையை வலியுறுத்தி ஆளுநர் இரவியின் அடாவடித்தனங்களை அறிவுத்துறையினர் எதிர்ப்பது சரி! ஆனால், அவர்கள் அத்துடன் நிற்கக் கூடாது. ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். கடந்த காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தபோது அமைச்சர்கள் பதவி விலகியதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி மைச்சரவையில் திமுகவின் ஆ. இராசா இருந்தபோது, அவர் மீது 2ஜி அலைக்கற்றை ஊழல் வந்தது. விசாரித்துத் தீர்ப்பு வருவதற்கு முன்பே அவர் பதவி விலகும்படி கோரப்பட்டார்; பதவி விலகினார்.

இப்போது விசாரணைக் கைதியாக, சிறையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அடித்திருக்கும் கொள்ளை, செய்திருக்கும் ஊழல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அத்திறமையின் காரணமாகவே முதலமைச்சரின் அடுப்படி அமைச்சரவையில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி! அவர் செய்து வந்த கையூட்டு ஊழல்களுக்காக அவர் முறைப்படி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவரே!

அடுத்து, ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இரவியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகமிக ஞாயமானது; தேவையானது.

அறிவுத் துறையினர் மற்றும் நடுநிலையாளர்கள் அத்துடன் நிறகக் கூடாது. ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்தே பேச வேண்டும். அதற்கான சட்ட வழிப்பட்ட தருக்கங்களை மக்கள் முன் வைக்க வேண்டும்!

ஆளுநர் பதவி என்ற வழக்கம் எப்போது வந்தது, ஏன்வந்தது? இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய பல்வேறு இனங்களின் தனித்தனி அரசுகளை, வெள்ளை இன வேட்டையாடிகள் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் வீழ்த்தி, அழித்து ஆக்கிரமிப்புக் காலனி ஆட்சியை நிலைநாட்டினர். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த அயலார், தங்களுக்கேற்ற நிர்வாக மண்டலங்களை உருவாக்கி அவற்றை மாநிலங்கள் (Provinces) என்றனர்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கிலேயர்கள் தங்களது இந்தியத் துணைக் கண்ட ஆட்சிப் பகுதிகளைக் கண்காணிக்க – கட்டுப்படுத்தி வைக்க – அங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். அந்த மண்டல அதிகாரிக்கான பதவிப்பெயர் ஆளுநர் (கவர்னர்)! இவ்வாறான பல மண்டலங்களின் தலைமையகம் தில்லியில் இருந்தது. அங்கே மண்டல ஆளுநர்க்கான தலைமை ஆளுநர் இலண்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். அவரைத் தலைமை ஆளுநர் என்றனர்.

1947 ஆகத்து 15-இல் வெள்ளையரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபின் இந்தியாவுக்கென்று தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கினர். அதில் ஆங்கிலேய அயலார் நட்டு வைத்த தலைமை ஆளுநர் – கவர்னர் ஜெனரல் அதிகாரப் பதவியை நீக்கி விட்டனர். அப்பதவிக்கு மாற்றாக நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட குடியரசுத் தலைவர் (President) பதவியை உருவாக்கினர். அக் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கும் தேர்தல் மூலம்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் செய்தனர். (அரசமைப்புச் சட்ட உறுப்பு 54)

ஆனால், காலனி ஆதிக்க வெள்ளையர் உருவாக்கிய மாநில ஆளுநர் பதவிகளை அப்படியே வைத்துக் கொண்டனர். இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ”நடுநிலை தவறாத நாயகர்களும்!” காலனி ஆதிக்க வேட்டையாடிகள் தங்களின் காலனிகளைக் கண்காணிக்க உருவாக்கிய ஆளுநர் அதிகாரப் பதவியை இந்திய அரசுக்கு நீக்கியவர்கள், மாநில அரசுகளுக்கு மட்டும் நீட்டித்துக் கொண்டது சனநாயகமா? குடியாட்சிக் கோட்பாடா? இல்லை, இல்லை! கவர்னர் ஜெனரல் பதவியை ஒழித்தவர்கள் கவர்னர் பதவியை மட்டும் வைத்துக் கொண்டது ஏன்? புதுதில்லியின் புதிய ஏகாதிபத்தியத்திற்குக் காலனியக் கவர்னர் பதவிகள் தேவைப்பட்டன!

நமது வினா இதுதான்! 1947 ஆகத்து 15-இல் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விடுதலை பெறவில்லையா? இதற்கான விடையை இந்தியக் கவர்னர்களைக் கருத்தரித்த கனவான்களும், அவர்களின் வாரிசுகளும்தான் கூற வேண்டும்!

மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் போல் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர்! புதுதில்லியில் ஏகாதிபத்திய ஆட்சி நட்த்துதுவோர் அனுப்பி வைக்கும் ஆட்கள்தாம் ஆளுநர்கள்! அவர்களுக்கான தகுதி என்ன?

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 157 ஆளுநர்க்கான தகுதியைக் கூறுகிறது: இந்தியக் குடிமகனாக/மகளாக இருக்க வேண்டும். முப்பந்தைந்து அகவை முடிந்தவராக இருக்க வேண்டும். அவ்வளவே.

வேறு குறிப்பிட்ட கல்வித் தகுதியும் தேவையில்லை. இந்த நபர், குடியரசுத் தலைவரைப் போல், மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவரும் அல்லர். இந்திய நாட்டில் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்திருக்க வேண்டும், 35 அகவையை முடித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட நபர் எப்படி ஆளுநராக அமர்த்தப்படுவாராம்?

இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்த நபர் ஆளுநராக அமர்த்தப்படுவார். (அரசமைப்புச் சட்ட உறுப்பு 155).

எவ்வளவு காலத்திற்கு இவர் ஒரு மாநிலத்தில் ஆளுநராக இருப்பார்? குடியரசுத் தலைவர் விரும்பும்வரை! (அரசமைப்புச் சட்ட உறுப்பு 156 (1).

குடியரசுத் தலைவர் ஆளுநர் பதவிக்கான நேர்காணல்கள் நடத்தித் தேர்வு செய்வாரா? இல்லை. இந்திய அமைச்சரவை அல்லது இந்திய உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டு ஒரு நபரை ஆளுநர் ஆக்கிட குடியரசுத் தலைவர்க்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பது சட்டக் கட்டாயம். இந்திய அமைச்சரவை அல்லது உள்துறை அமைச்சர் தனது ஆளுங்கட்சியிலிருந்து ஆள் பிடிப்பார்!

அப்படிப் பிடிக்கப்பட்ட நபர்தான் ஆர். என். இரவி! 1947 க்கு முன் பிரிட்டன் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஆட்சி நடத்த ஆள்பிடித்து அனுப்பியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

மக்கள் பிரதிநிதி என்ற தகுதியும் கிடையாது, கல்வித் தகுதியும் கிடையாது! அவர் தலைவரும் இல்லை, அதிகாரியும் இல்லை! இந்தியாக்காரன் என்ற அநாமதேயத் தகுதியும் 35 அகவையும் இருந்தால்போதும். புதுதில்லியின் மாநிலக் காலனிகளுக்கு ஆளுநராக அனுப்பிவிடலாம். காங்கிரசு இந்திய ஆட்சியில் இருந்தபோது ஒரு பழமொழியே உருவானது; “தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்; தோற்றால் ஆளுநர்” என்பதே அப்பழமொழி!

இப்போதுள்ள ஆர்.என். இரவி உளவுத்துறை அதிகாரி வேலை பார்த்தவர். நாகாலாந்தில் விடுதலைப் பிரதேசம் வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் சமாதானம் பேசி உடன்பாடு காண்பதற்காக அனுப்பப்பட்டவர். அங்கு நிலையான உடன்பாடும் ஏற்படவில்லை. இவரையே நாகாலாந்து ஆளுநர் ஆக்கினார்கள். இவரால் அங்கு காலம் கழிக்க முடியவில்லை. அனைத்துத் தரப்பினரும் இவரை எதிர்த்தனர். ”தமிழ்நாட்டைத் தண்டிக்க நீதான் சரியான ஆள்; போ தமிழ்நாட்டுக்கு” என்று ஆளுநராக அனுப்பிவிட்டார்கள் தில்லி ஏகபாதிபத்தியவாதிகள்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அப்பாமார் (Founding Fathers of the Constitution of India) என்ன நேர்மையோடு ஆங்கிலேயன் உருவாக்கிய ஆளுநர் பதவியை இவர்களும் ஏற்றார்கள்?

அமெரிக்க ஐக்கிய நாடுகள், (USA) செர்மானியக் கூட்டாட்சி, சுவிட்சர்லாந்து கூட்டாட்சி போன்ற எந்தக் கூட்டாட்சியிலும் தலைமை அரசிலிருந்து மாநிலத்திற்கு ஆளுநர் என்ற தனிநபரை அனுப்பும் விதி இல்லை.

எனவே இப்போது ஆர்.என். இரவியின் அட்டூழியங்களைக் கண்டிப்போர் -திறனாய்வு செய்வோர் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் எனக் கோர வேண்டும். குறிப்பாக இக் கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து எழுப்ப வேண்டும். பாசக பாசிசத்திற்கு எதிராகக் காங்கிரசு தலைமையில் அனைத்திந்தியக் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் மு.க. ஸ்டாலின், பொதுவாக ஆளுநர் பதவியை ஒழிக்கும் அரசமைப்புச் சட்ட திருத்தத்தைத் தங்கள் கூட்டணியின் கொள்கைப் பிரகடனங்களில் ஒன்றாகச் சேர்க்கக் கோரவேண்டும். குறிப்பாக இராகுல் காந்தியை ஏற்கச் செய்ய வேண்டும். இக் கோரிக்கையை வெளிப்படையாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்ப வேண்டும். ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக் கட்சிகளின் - மக்களின் - ஆதரவைக் கோர வேண்டும். மற்ற மாநிலங்களிலும் இதற்கான ஆதரவை முதல்வர் ஸ்டாலின் கோர வேண்டும்.

இந்திய அமைச்சரவைக்கும் மாநில
அமைச்சரவைக்கும் இடையே பாகுபாடு!
------------------------------------------------------
இந்திய அரசில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரவே முடியாது. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை! ஆனால் மாநில அரசில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரலாம். புதுதில்லியில் மக்களவையைக் கலைத்தால்கூட காவந்து அமைச்சரவை – தலைமை அமைச்சர் தலைமையில் இருந்தே ஆகவேண்டும். ஆனால் மாநிலத்தின் சட்டப் பேரவையைக் கலைக்கவும், பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளுநர் ஆட்சி நடத்தவும் விதிகளை அரசமைப்புச் சட்டம் கொண்டுள்ளது. சனநாயகக் கொலைக் குத்தீட்டிகளாக உறுப்புகள் 356-ம் அதன் உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒரே ஒரு விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள், அரசமைப்பை யாத்த புண்ணியவான்கள்! அது குடியரசுத் தலைவர் ஆட்சி அம்மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்துக்குப் பொருந்தாது என்பதுதான்!

கூட்டாட்சி நடக்கும் அமெரிக்க ஐக்கியநாடுகள், செர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து போன்றவற்றில் மாநில ஆட்சிகளை மையத் தலைமை ஆட்சியால் கலைக்க முடியாது.

மாநில ஆட்சிக் கலைப்பு அதிகாரம் என்பது வெள்ளையன் கருவில் உருவான விதி! 1947-இல் இந்திக்காரன் இந்தியாவைக் கைப்பற்றிய பின் அந்த வெள்ளைக் கரு – கலப்பினக் குட்டியாக வளர்ந்து நிற்கிறது.

மாநில ஆட்சியை தில்லி ஏகாதிபத்திய அரசு கைப்பற்றிக் கொள்வது மட்டுமல்ல, மாநிலத்தையே பல துண்டுகளாக்கிச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 3 தில்லி நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அரசு சம்மு காசுமீர் மாநிலத்தைப் பிளந்து, பிரிவுகளாக்கி, ஒன்றியப் பிரதேசங்களாக்கிவிட்டது. தமிழ்நாட்டை மூன்று ஒன்றியப் பிரதேசங்களாக வெட்டித் துண்டாடக் காத்திருக்கின்றனர், இந்திய ஆட்சியாளர்கள்! அவர்களின் இந்த இனத்தகர்ப்புக்கு இடம் கொடுக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்!

இவை அனைத்தையும் விவாதிக்க வேண்டிய நேரம் இது! ஆர்.என். இரவியின் அடாவடித் தனங்கள், தனிநபர் வக்கிரங்கள் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள வாய்ப்புகளும் ஆகும்!

ஆளுநர் இரவியை நீக்கிவிட்டால் மட்டும், மாநில ஆட்சிக்கான சிக்கல் தீர்ந்துவிடாது. அரசமைப்பு உறுப்பு (154(1) கூறுகிறது: The executive power of the State shall be vested in the Governor and shall be exercised by either directly or through officers subordinate to him in accordance with this Constitution.

மாநில ஆட்சி அதிகாரம் ஆளுநருக்கு உரிமையாக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறும் அரசமைப்பு உறுப்பு 154(1) இருக்கும் வரை அது புதிதுபுதிதாக இரவிக்களைப் பெற்றெடுக்கும்; நபரின் பெயர்தான் மாறி இருக்கும்.

”ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை கூறவும் முதல் அமைச்சர் தலைமையில் ஓர் அமைச்சரவை இருக்கும்.”

”அமைச்சரவை ஆலோசனை கூறுபவற்றுள் எதை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் என்று முடிவு செய்யும் விருப்பத் தேர்வு உரிமை (discretion) ஆளுநருக்கு உண்டு. அவருடைய விருப்பத் தேர்வை எதிர்த்து எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது.”

மேலே மேற்கோள்களுக்குள் உள்ள இரு பத்திகளும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1), (2) ஆகியவற்றின் சாரம்!

ஆளுநரின் விருப்பத்தேர்வு உரிமையை (discretion) வரையறுத்து, கட்டுக்குள் வைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உண்டு. கட்டுப்பாடு விதிக்காத தீர்ப்புகளும் உண்டு. அதனால், இரு தரப்பும் தங்களுக்குச் சாதகமாக உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் துணைக்கழைக்கும் வாய்ப்புகளும் உண்டு!

திமுக, காங்கிரசு, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், மாநில ஆட்சியைப் புதுதில்லி கலைப்பதற்குள்ள அதிகாரத்தை நீக்க வேண்டும் என்ற சனநாயக கூட்டரசுக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை!

சனநாயகத்தில் - தமிழ்நாட்டு இறையாண்மையில் - அக்கறையுள்ள நாம் இக் கோரிக்கைகளை மக்கள் முழக்கமாக்குவோம்!

இந்திய அரசே, உடனடியாக ஆளுநர் இரவியை வெளியேற்று! ஆளுநர் பதவியை நீக்கு.

முதலமைச்சர் அவர்களே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குக!

இவையே நம் முழக்கங்களாகட்டும்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்