<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"சாந்தனுக்கு வீரவணக்கம் ! தமிழ்த்தாயே கண்ணீரைத் துடைத்துக் கொள்!"

Wednesday, February 28, 2024

==============================================

சாந்தனுக்கு வீரவணக்கம் !

தமிழ்த்தாயே கண்ணீரைத் துடைத்துக் கொள்!
==============================================

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சாந்தனையும் மற்றவர்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்து விடுதலை செய்தது. அவர்களை விடுதலை செய்ய இந்தியமும் திராவிடமும் மறுத்து, சிறையை விடக் கொடிய திருச்சி சிறப்புத் தடுப்புக்குள் அடைத்து வைத்தன.

கடுமையான நோய்வாய்ப்பட்டுத் துன்புற்று வந்த சாந்தன் இன்று ( 28. 2.2024) காலை சென்னை தலைமை (ராசீவ் காந்தி) மருத்துவமனையில் காலமானார்.

ராசீவ் காந்தி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் வேறொரு சாந்தன் ! தன்னைத் தேடிக்காவல்துறையினர் வருகிறார்கள் என்பதை அறிந்த அந்த சாந்தன் திருச்சியில் சயனைட் குப்பி கடித்துத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
ஆனால் கணக்குக் காட்டுவதற்காக இந்தப் சாந்தனை பிடித்து வழக்கில் சேர்த்துத் தண்டனை வாங்கி கொடுத்தனர்.

சட்டம் தந்த சலுகை கூட தமிழர்களுக்கு இல்லை என்று முடிவு செய்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர்களை இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் கடுங்காவல் தடுப்புக்குள் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களில் சாந்தனை இயற்கை "விடுதலை" செய்து விட்டது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை காவு கொண்டவர்களுக்கு இது எம்மாத்திரம் !

பாரதமாதாவின் பவித்திர புத்திரர் மோடிஜிக்கு ஜே ! திராவிடத் தாயின் செல்ல மகன் மு.க ஸ்டாலின் வாழ்க!

தமிழ்த் தாயே கண்ணீரை துடைத்துக் கொள்! காலம் மாறும் !
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels: , ,

"இயற்கை வேளாண்மை உப்புப்பள்ளம் திருமூர்த்தியின் திடீர் மறைவு – பேரதிர்ச்சி!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

Monday, February 26, 2024


இயற்கை வேளாண்மை உப்புப்பள்ளம்

திருமூர்த்தியின் திடீர் மறைவு – பேரதிர்ச்சி!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
===================================


நம்மாழ்வார் வேளாண்மை வழியைப் பின்பற்றி தற்சார்பு வாழ்வியல் இயற்கை வேளாண்மையைச் சத்தியமங்கலம் அருகே வெற்றிகரமாக செயல்படுத்தி வந்த உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள், 47 அகவை இளமையில் 24.02.2024 அன்று மாரடைப்பால் திடீரென்று காலமான செய்தி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எடுத்துக்காட்டான இயற்கை வேளாண்மையும், வாழ்வியலும் கொண்ட பெருமக்களுக்குப் பேரிழப்பு!

இயற்கை வேளாண்மையை இலாபத்துடன் செய்ய முடியாது என்று நிலவிவந்த அச்சத்தைத் தகர்த்து, இலாபத்துடன் வெற்றிகரமாகச் செய்து வந்தார் உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள்! அதில் வந்த வருவாயைத் தற்சார்பு வாழ்வியலுக்காகத் தொண்டு செய்யும் அமைப்புகளுக்கும், நலிவுற்ற அன்பர்களுக்கும் உதவி வந்தார்.

“நம்மாழ்வாரின் ஆலம் விழுதுகள்” என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து நிறுவி, அதன் வழி பொது நலச் செயல்பாடுகளை – நலிவுற்ற அன்பர்களுக்கான உதவித் திட்டங்களை செய்து வந்தார்.

உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்களின் திடீர் மறைவுக்குப் பெருந்துயரத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து பெருந்துயரில் ஆழ்ந்துள்ள இல்லத்தார்க்கும், அன்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , ,

"மனித உரிமைச் செயல்பாட்டாளர் மகபூப் பாட்சா அவர்கள் மறைவு. பெருந்துயரம் !" --- பெ.மணியரசன்,தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Thursday, February 15, 2024


மனித உரிமைச் செயல்பாட்டாளர் மகபூப் பாட்சா அவர்கள் மறைவு.

பெருந்துயரம் !

============================================================
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள்: 15.02.2024
===========================


குடிமை உரிமைப் பாதுகாப்பில் துடிப்புடன் களப்பணிகள் ஆற்றிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஐயா அ.மகபூப் பாட்சா அவர்கள் நேற்று 14.02.2024 அன்று சென்னையில் காலமான செய்தி பெரும் துயரம் அளிக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (15.02.2024) பிற்பகல் அவரின் நல்லடக்கம் நடைபெறுகிறது.

மனித உரிமையில் அக்கறை உள்ள மகபூப் பாட்சா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் வழங்கிய மனித உரிமை சார்ந்த தீர்ப்புகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
பழங்குடி மக்கள், பெண்கள், ஏழை எளிய உழவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் முதலியவர்களின் உரிமைகளைக் காப்பாற்றவும் மீட்கவும் களப்பணிகள் ஆற்றியவர் மகபூப் பாட்சா!
திருவில்லிப்புத்தூர் செண்பகத் தோப்புப் பகுதியில் பழங்குடி மக்களான “பளியர்கள்”, கொத்தடிமைகளாக வேளாண் பண்ணைகளில் வேலை செய்து வந்தனர். அவர்களைக் கொத்தடிமையிலிருந்து விடுவிக்க அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி அவர்கட்குத் தந்தி கொடுத்து வழக்கு எடுக்கச் செய்தார். அவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்தது.

குடிமை உரிமைகள் மீட்கும் பணிகளுக்காகவே மதுரையில் 1982-இல் சோகோ அறக்கட்டளை தொடங்கினார். மகபூப் பாட்சா அவர்களும் மற்றும் அறக் கட்டளை நண்பர்களும் மதுரையில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரில் பெரிய கூட்ட அரங்கமும் அலுவலகமும் எழுப்பினர். காவல்துறை வெளி இடங்களில் அனுமதி மறுத்த கூட்டங்கள் கிருஷ்ணய்யர் அரங்கில் நடைபெறும்.
கடந்த ஆண்டு தெய்வத் தமிழ்ப் பேரவையின் முழுநாள் மாநாட்டை மேற்படி கிருஷ்ணய்யர் அரங்கில் நடத்தினோம். முழு மாநாட்டிலும் பார்வையாளராகக் அவர் கலந்து கொண்டு முடிவில் பாராட்டினார்.
ஒவ்வொருவருக்கும் தனி வாழ்வில் மத உரிமை உண்டு. அதே வேளை பொது வாழ்வில் அனைவரும் மதப்பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர் மகபூப்பாட்சா! நானும் மதுரைத் தோழர்களும் அவரை சந்திக்கும் பொழுதுதெல்லாம் எங்களிடம் முழுமையான அன்பை வெளிப்படுத்துவார்.

இன்னும் வாழ்ந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய நடுத்தர அகவையில் ஐயா மகபூப் பாட்சா அவர்கள் மறைந்தது பெருந்துயரம்! அவர் பிள்ளைகளுக்கும் இல்லத்தாருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , ,

"சைதையார் அவர்களே, ஆறாத் துயருடன் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்!" --- பெ. மணியரசன் தலைவர் , தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, February 13, 2024


சைதையார் அவர்களே,

ஆறாத் துயருடன் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்!

பெ. மணியரசன்
தலைவர் , தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சாவூர்
13.02.2024
==========≠======================================================

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு ஆட்சித் துறையில் அனைத்து வகைப் பணிகளும் பதவிகளும் கிடைப்பதற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சியளித்து அவர்களை உயர்வடையச் செய்த ஐயா சைதை துரைசாமி அவர்களின் ஒரே பிள்ளையான வெற்றியின் உயிரை சட்லெஜ் ஆறு பறித்துக் கொண்டது பேரதிர்ச்சி; பெரும் துயரம்!
சைதையார் தமது மன வலிமையைக் கொண்டு, தமது சிந்தனைத் திறனைக் கொண்டு, தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.

சைதையார் அவர்களே,நீங்கள் தனி நபர் அல்லர் ! உங்கள் உதவியால், பயிற்சியால் வாழ்வில் உயர்வைடைந்த பிள்ளைகளும் ,உங்களின் பண்பால் கிடைத்த நண்பர்களும் சைதையார் என்ற ஆலமரத்தின் விழுதுகள்!

இப்போது ஏற்பட்டுள்ள மகன் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்! ஆனால் இவ்வாறான இழப்புகள் உலகெங்கும் மனிதர்களுக்கு அன்றாட நிகழ்வுதான்!

வெற்றியின் அம்மாவான உங்கள் வாழ்க்கை இணையர் மற்றும் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரையும் தேற்றுவது உங்கள் பொறுப்புதான்!
ஆறாத் துயரத்துடன் உங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , ,

"நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை அரசின் ஒடுக்குமுறைச் செயல்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Saturday, February 3, 2024


நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள்

இல்லத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை
அரசின் ஒடுக்குமுறைச் செயல்!
================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
================================


நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள சென்னை கொளத்தூர் பாலாஜி, திருச்சி சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறை இரஞ்சித்குமார், காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் விசுவநாதப்பேரி மதிவாணன், சிவகங்கை மாவட்டம் பகைவரைவென்றான் கிராமம் விஷ்ணு பிரதாப் ஆகிய ஆறு பேர் வீடுகளில், நேற்று (02.02.204) விடியற்காலையில் இந்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமைக் காவல்படையினர் (N.I.A) திடீர்ச் சோதனைகள் நடத்தி யுள்ளனர். அவர்களின் கைப்பேசிகள், சிம்கார்டுகள், பென்டிரைவ்கள், மடிக்கணினிகள் போன்றவற்றையும் சில புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த ஆறு பேரையும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறைத் தமிழ்நாடு செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களையும் 5.2.2024 அன்று சென்னையில் தங்கள் தலைமையகத்திற்கு விசாரணைக்கு வரச் சொல்லி அழைப்பாணையும் கொடுத்துள்ளார்கள்.

ஏற்கெனவே, கடந்த 2022ஆம் ஆண்டு மே மோதம் (19.5.2022), “உலகத் தமிழர் நீதிமன்றம்” (World Tamils Justice Court) என்ற அமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்குள் ஆயுதப் போராட்டம் நடத்திட, துப்பாக்கிகள் செய்த சேலம் செவ்வாய்ப்பேட்டை பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையம் நவீன் சக்கரவர்த்தி (எம்.பி.ஏ. பட்டதாரி) மற்றும் கபிலன் ஆகிய மூவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேற்படி மூவரும் பிணையில் வெளிவந்து விட்டனர். அவர்கள் மீது வழக்கு விசாரணை தனியே நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூவருடனும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் ஏழு பேரும் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை இந்த ஏழு பேரும் ஆதரிக்கிறார்கள் என்றும் தேசியப் புலனாய்வுக் காவல்படையினர் (என்.ஐ.ஏ) குற்றம்சாட்டி இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 18 மாதங்களாக மேற்படி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை விசாரணை செய்யாமல் அவர்களை இப்போது, 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் விசாரணைக்கு அழைப்பாணை (சம்மன்) கொடுப்பதும் அவர்களின் வீடுகளில் 4 மணி நேரம் – 5 மணி நேரம் சோதனை யிடுவதும், அவை ஊடகங்களில் வருமாறு செய்வதும் இயல்பான புலன் விசாரணையாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் அரசியல் நகர்வாகவே தெரிகிறது.
இந்தியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் 02.02.2024 நடத்திய வீடுகள் சோதனையில் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற நூலையும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் எழுதிய “திருப்பி அடிப்பேன்” நூலையும் கைப்பற்றி வந்ததாகக் கூறுகிறார்கள். இந்நூல்கள் பல ஆண்டுகளாகப் பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்தவை. இந்நூல்கள் தடை செய்யப்பட்டவை அல்ல!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகத்தில் எங்கேயும் செயல்படவில்லை. 2009 மே 18க்குப் பிறகு அந்த அமைப்பு இல்லை. ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே அதைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, நிரந்தரமான தேர்தல் சின்னத்தைப் பெற்ற - வெளிப்படையான அரசியல் கட்சியாக 13 ஆண்டுகளாகப் பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 7% வாக்குவாங்கி, தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களின் செல்வாக்குப் பெற்றுள்ளது. இப்போது வரப்போகும் மக்களவைத் தேர்தலில் போட்டி யிடுவதற்கான அரசியல் பணிகளில் அக்கட்சியினர் முழுவீச்சில் இறங்கிச் செயல்படுகிறார்கள். இக்கட்சி தமிழ் – தமிழர் – தமிழ்நாடு உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறது.

இவ்வாறான பின்னணியில், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை “ஆயுதப்போர்” நடத்தும் தீவிரவாதிகள் என்று சித்தரித்து, அவர்கள் மீது அரசின் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்காக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) காவல்படை ஏவிவிடப்பட்டுள்ளதா என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் இம்முன்னெடுப்பு சனநாயக மறுப்பு; வன்மையான கண்டனத்திற்குரியது!

இந்திய அரசு கொடிய வழக்குப் புனையும் நோக்கிலான இந்த விசாரணையைக் கைவிட்டு, நீதிக்கு தலைவணங்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்