ஒரு வழக்கில் விடுதலை!பல வழக்குகளில் விசாரணை!
================================
சிறையிலேயே வாழ்நாளை இழந்தாலும்
இலட்சியத்தை இழக்க மாட்டேன்!
================================
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
தமிழீழத் தமிழர்கள் இலங்கையில் இனவெறியர்களாலும், சிங்கள இனவெறி அரசாலும் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் குரல் கொடுக்கும் தமிழர்களைத் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கொடுஞ்சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கும் கொடுமை மிகத் தாராளமாக நடந்து வந்தன.இந்திய ஆட்சியாளர்களின் பல வகை பக்கத் துணைளோடு, 2008 – 2009இல் ஈழத்தமிழர்களை – குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளை இனப்படுகொலை செய்து முடித்த பின்னும், இப்போதும்கூட தமிழீழத்திற்காக உயிரீகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வுகளை வெளிப்படையாக வீதிகளில் நடத்த முடியாத அவலம் தொடர்கிறது.தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் என் மீதும் எமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் பலர் மீதும் பல வழக்குகள் பாய்ந்தன. பல தடவை இதற்காகச் சிறை சென்றோம்.பொதுக் கூட்டங்களில் – கருத்தரங்குகளில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும், தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களைக் கண்டித்தும் பேசியதற்காகக் கருணாநிதி ஆட்சியிலும், செயலலிதா ஆட்சியிலும் போடப்பட்ட பல வழக்குகளைச் சுமந்தவர்களில் நானும் ஒருவன்.அவ்வாறான வழக்குகள் ஒன்றில், நேற்று (07.11.2024) விடுதலை பெற்றேன். இவ்வழக்கு, 1994இல் என் மீது போடப்பட்டது. தமிழீழ மக்கள் - விடுதலை வீரர்கள் ஆகியோர் உயிரைக் காக்க – இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து உண்ணாப் போராட்டம் தொடங்கி, பச்சைத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து, 12ஆம் நாள் 1987 செப்டம்பர் 26 அன்று உயிரீகம் செய்த இளைஞர் திலீபன் நினைவேந்தல் நாள் கூட்டத்தில், சென்னை தியாகராயர் நகர் வெங்கடேசுவரா மண்டபத்தில், 26.09.1994 அன்று நான் கலந்து கொண்டு பேசினேன். மற்ற நண்பர்களும் தோழர்களும் பேசினார்கள். ஆனால், என் மீது மட்டும் வழக்குப் போடப்பட்டது. அப்போது செயலலிதா (அ.இ.அ.தி.மு.க.) ஆட்சி!அவ்வழக்கைத் தீவிரப்படுத்தியது 1996இல் கருணாநிதி ஆட்சி! அவ்வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.சென்னை வழக்கறிஞர் ச. வாசுதேவன் அவர்களும், அவரின் இளம் வழக்கறிஞர் கிருட்டிணமூர்த்தி அவர்களும் அக்கறையோடு அவ்வழக்கை நடத்தி வந்தார்கள்.இத்தனை ஆண்டுகளிலும் தொடர்ந்து ஒவ்வொரு வாய்தாவுக்கும், மேற்படி வழக்கறிஞர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் எனக்காக மனுப்போட்டு பேசி வந்தார்கள். தேவைப்படும் போது அழைப்பார்கள். நான் நீதிமன்றம் சென்று நேர் நிற்பேன்.முப்பதாண்டுகள் கழித்து, அவ்வழக்கில் நேற்று தீர்ப்பு! நான் நீதிமன்றம் சென்றேன். எனக்கு விடுதலை அறிவித்தார் நீதிபதி! இன்று (08.11.2024) இன்னொரு வழக்கு எனக்கு! இதுவும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது நடந்த இனப்படுகொலையைக் கண்டித்தும் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக என் மீது காவல்துறை போட்ட வழக்கு!இவ்வழக்கு முதலில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. அங்கு வழக்கறிஞர் ச. வாசுதேவன் அவர்கள் எனக்காக வாதாடி வந்தார். என் மீது போடப்பட்ட தண்டனைச் சட்டப் பிரிவுகளில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடத்த வேண்டிய பிரிவும் இருந்ததால், பின்னர் மாற்றப்பட்டு, சென்னை அல்லிக்குளம் (பழைய மூர் மார்க்கெட் பகுதி) கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முன் 22ஆவது நீதிமன்ற அறையில் அவ்வழக்கு நடந்து வருகிறது.இங்கு இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி. விசயக்குமார் அவர்கள் நடத்தி வருகிறார். இவரும் கட்டணம் பெற மறுத்து, எனக்கு வழக்கு நடத்தி வருகிறார். அவரின் இளம் வழக்கறிஞர் துரை அவர்களும் வழக்குப் பணிகளில் செயல்பட்டு வருகிறார்.இன்று (08.11.2024) இவ்வழக்கு வாய்தாவுக்கும் சென்று வந்தேன். 22.12.2024க்கு வாய்தா மாற்றியுள்ளார்கள்.ஏற்கெனவே ஈரோட்டில் 2005இல் நடந்த “வெளியாரை வெளியேற்றுவோம் – மண்ணின் மக்களுக்கே வேலை” மாநாட்டிற்காக என் மீது மட்டும் போடப்பட்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களும், அவரின் இளையோரும் கட்டணமின்றி இவ்வழக்கை நடத்தி வருகிறார்கள்.சென்னை எழும்பூரில் என் மீது இரு வழக்குகள் நடந்து வருகின்றன. வழக்கறிஞர் கதிர்க்குமரன் (இரவிக்குமார்) கட்டணமின்றி இவ்வழக்குகளை நடத்தி வருகிறார்.தஞ்சை மாவட்டம், அம்மப்பேட்டையில் மீத்தேன் எடுப்பதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக தோழர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்ற வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அயலாரின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறுவதற்காக – சமூகப் புரட்சிக்காக – மனித உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு, துப்பாக்கிக்குப் பலியானோர், தூக்கு மேடையில் ஈகியானோர், வாழ்நாளை சிறையில் முடித்தவர்கள், பல ஆண்டுகள் சிறைகளில் வாடியோர் எத்தனையோ பேர் நம் தமிழ் மண்ணிலேயே வாழ்ந்திருக்கிறார்கள்!என் வாழ்நாளில் பத்து தடவைக்கு மேல் சிறை சென்றிருக்கிறேன். 32 நாள், 20 நாள், 15 நாள், அதைவிடக் குறைந்த நாட்கள் என்ற கால அளவுதான் ஒவ்வொரு தடவையும் சிறையில் இருந்திருக்கிறேன்.திருச்சி நடுவண் சிறைச்சாலை, தஞ்சை கிளைச் சிறைச்சாலை, சென்னை பழைய சிறைச்சாலை, புதிய புழல் சிறைச்சாலை, வேலூர் சிறைச்சாலை, கோவை சிறைச்சாலை எனப் பல சிறைகளிலும் இருந்துள்ளேன்!இப்போது எனக்கு அகவை 78. இனி ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்க நேர்ந்தாலும், சிறையிலேயே வாழ்நாள் முடிந்தாலும் முடியட்டும்!ஏற்கெனவே, பல போராட்டங்களில் தளைப்பட்டு, பிணையில் வந்து விடுதலையான நிகழ்வுகளை இதில் கூறவில்லை!வழக்கு அலைக்கழிப்புகள் தொடரட்டும். தமிழ்த்தேசியத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்! சனநாயக வழியிலான மக்கள் திரள் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்க உறுதி பூணுகிறேன்!===============================தலைமைச் செயலகம்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்=================================பேச: 9443918095, புலனம் : 9841949462முகநூல் : www.fb.com/tamizhdesiyamஊடகம் : www.kannottam.comஇணையம் : www.tamizhdesiyam.comசுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyamகாணொலிகள் : youtube.com/Tamizhdesiyam===============================Labels: அறிக்கைகள், தமிழ்த்_தேசியம்